வீட்டில் இருந்தாலும் மாஸ்க் போட வேண்டும்? ஏன் தெரியுமா?

மாதிரி படம்

ஒரு நாள் கொரோனா பாதிப்பில் நேற்றைய தினம் தமிழகம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளிலும் மாஸ்க் அணியுமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் இருந்து நாம் இன்னும் முழுமையாக விடுபடாத சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் தொற்று குறித்த செய்திகள் மக்களை மேலும் கவலையுறச் செய்துள்ளது. மேலும் சுகாதாரத்துறையினருக்கு இது பெரும் சவாலான காலகட்டமாகக் கருதப்படுகிறது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பில் நேற்றைய தினம் தமிழகம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 35,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,299 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 397 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக குறைந்து வருவதாக கூறப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அரசு புதிய வழிமுறைகளை அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூட்டம் ஒன்றில் பேசும்போது, வீட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால் அவர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு, குடும்பத்தினரை பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணியும் நேரம் வந்து விட்டது. வீட்டில் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தால் அவரும், அந்த வீட்டில் உள்ளவர்களும் மாஸ்க் அணிவது கட்டாயம். கொரோனா பாதிக்கப்பட்டவர் தனியறையில் தங்க வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்கு விருந்தினர்களை அழைப்பதையும் தவிர்க்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் தனியாக இருக்க முடியாத சூழல் இருந்தால் கொரோனா முகாமுக்கு செல்லலாம். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மட்டும் ஒரே தீர்வு இல்லை. ஏனெனில் மருத்துவமனை படுக்கைகள் உண்மையில் தேவைப்படுவர்களுக்கு மிகவும் முக்கியம். என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, மக்களின் தேவையில்லாத பதட்டம் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானவர்கள் தங்களுக்கு ஆக்ஸிஜன் அளவு நல்ல நிலையில் இருந்தாலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட முயற்சி செய்கிறார்கள். இது உண்மையில் மருத்துவமனையில் இடம் தேவைப்படுபவர்களை பாதிக்கிறது. மருத்துவமனை முன்பு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறது. வீடுகளில் மருந்துகளை பதுக்கி வைப்பது உண்மையில் தேவைப்படுபவரகளுக்கு அந்த மருந்துகள் கிடைக்கப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது.

மேலும் ரெம்டெசிவிர் மருந்துகள் தீவிர தொற்று பாதித்தவர்களுக்கு 5வது நாள் முதல் 7வது நாளில் இருந்து அளிக்கப்படும். நோய் தொற்று தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தினால் எந்த பலனும் இல்லை. பின்விளைவுகளையும் அந்த மருந்து ஏற்படுத்தும் . தொற்று நோய் பாதித்த 85 சதவிகிதம் பேருக்கு லேசான அறிகுறிகளே இருக்கின்றன. அவர்கள் காய்ச்சல், சாதாரண சளி போன்றவற்றிற்கு அளிக்கும் மருந்துகள் அளித்தாலே போதும் என்றார்.
Published by:Arun
First published: