தற்போதைய நவீன காலத்தில் பல தம்பதிகளிடையே காணப்படும் முக்கிய பிரச்னை கருவுறுதலில் ஏற்படும் சிக்கல். உலகளவில் சுமார் 15% தம்பதிகளை கருவுறாமை பிரச்சனை பாதிக்கிறது. மலட்டுத்தன்மையை எதிர்த்து போராடும் விஷயத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் பங்கும் இருக்கிறது.
என்ன தான் ஒரு பெண் குழந்தையை சுமந்து பிரசவிப்பவராக இருந்தாலும், கருவுறுதலில் ஆணுக்கும் முக்கிய பங்கு உண்டு. பெண் வெற்றிகரமாக கருத்தரிக்க ஆணின் விந்தணுக்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு பெண்ணின் கருமுட்டையில் ஊடுருவி செல்லும் ஆரோக்கியமான விந்துக்கள் தான் வெற்றிகரமாக கருத்தரிப்பதை எளிதாக்குகின்றன. அதே போல பெண்ணின் கருமுட்டையை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு ஆணின் விந்தணுக்கள் வலுவாக இருக்க வேண்டும்.
பெண்ணின் கருமுட்டையிலிருந்து முட்டை வெளியேறும் ஓவலேஷனின் போது உடலுறவு கொள்ள தம்பதிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் பெண்ணின் கருத்தரிப்பில் முக்கிய பங்கு வகிப்பதால் ஒரு ஆண் தந்தையாகும் வாய்ப்புகளை எவ்வாறு மேம்படுத்தி கொள்ளலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
குழந்தைகளை பெற்று கொள்ளவிரும்பும் ஆண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இங்கே...
சீரான மற்றும் ஆரோக்கிய உணவு:
ஒரு ஆண் தன்னுடைய விந்தணுவை நல்ல நிலையில் வைத்திருக்க, ஆரோக்கிய உணவுகளை தவறாமல் சாப்பிடுவது மற்றும் தகுந்த உடல் எடையை பராமரிப்பது அவசியம். அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கு மாற வேண்டும். தரமான விந்தணுவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுவதும் அவசியம். பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரிச்சை, அத்திப்பழம் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளயும் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் டயட்டில் பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை, இறைச்சிகளையும் சேர்த்து கொள்ளவும்.
போதுமான உறக்கம்:
கருத்தரித்தல் நடக்க ஒரு மனிதனுக்கு விறைப்புத்தன்மை இருக்க வேண்டும், போதுமான விந்தணுக்கள் இருக்க வேண்டும், அவை சரியான வடிவத்தில் இருக்க வேண்டும். இதற்கு ஒருவர் மனஅழுத்தம் இன்றியும், போதுமான துக்கத்தை பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். மனஅழுத்தம் அது லிபிடோவை பெரிதும் பாதிக்கலாம் மற்றும் விந்தணு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம்.
அடிப்படை மருத்துவ நிலை:
ஒரு ஆணுக்கு இருக்கும் அடிப்படை மருத்துவ நிலைமைகள் அல்லது நோய் தொற்று கூட கருவுறுதலை பாதிக்கும். இனப்பெருக்க அமைப்பு அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று விந்தணுக்களின் தரத்தை வெகுவாக பாதிக்கிறது.
புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்திற்கு நோ:
புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் கருவுறுதலை பெரிதும் பாதிக்கும் பழக்கங்கள் ஆகும். ஏனென்றால் இந்த பழக்கங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் கருவுறும் வாய்ப்பை குறைக்கும்.
இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும்:
விரைப்பைகள் உங்கள் உடலுக்கு வெளியே இருப்பதால், சிறந்த தரமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய அவை உங்கள் மற்ற பகுதிகளை விட குளிர்ச்சியாக இருக்க வேண்டும். எனவே இறுக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் பேண்ட்கள் அணியும் பழக்கம் இருந்தால் தவிர்க்க வேண்டும்.
பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள்:
விந்தணுவின் தரம் மற்றும் இனப்பெருக்க அமைப்புக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்த கூடிய பால்வினை நோய்கள் காரணமாக கருவுறுதல் பாதிக்கப்படுகிறது. எனவே ஆரம்பகால நோயறிதலை (early diagnosis) பெறுவது எதிர்காலத்தில் தோன்ற கூடிய கருவுறுதல் பிரச்சினைகளிலிருந்து ஒருவரை பாதுகாக்கும்.
தவறாமல் வொர்கவுட்:
அதிக உடல் எடை கொண்டவர்கள் கருத்தரிப்பது கடினமான விஷயம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடை அளவுக்கு அதிகமாக இருப்பது அல்லது மிகவும் குறைவாக இருப்பது ஆகிய இரண்டுமே உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் குழந்தைக்கு முயற்சி செய்யும் ஆண்கள் தகுந்த உடல் எடையை பராமரிப்பது அவசியமாகிறது. டயட் உடன் கூடவே ரெகுலர் வொர்கவுட் எடை பராமரிப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Male infertility