சிலர் மிகவும் விரைவாக தங்களின் உடல் எடையை குறைப்பார்கள், சிலர் கடுமையான முயற்சிகளுக்கு பின்பும் கூட எதிர்பார்த்த அளவில் பாதியை கூட அடைந்து இருக்க மாட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் - அல்லது கண்மூடித்தனமாக - மிகவும் விரைவாக உடல் எடையை குறைக்க சிலர் முறையற்ற வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அது தசை வெகுஜன இழப்புக்கு, அதாவது 'லாஸ் ஆஃப் மசில் மாஸ்'க்கு (Loss of muscle mass) வழிவகுக்கும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் உடல் எடையை குறைக்கும்போது, தசை, எலும்பு, கொழுப்பு, திரவங்கள் அல்லது கழிவுப் பொருட்கள் போன்ற உடல் எடையின் எந்த பகுதியை இழக்கிறீர்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியாது. ஒருவேளை கொழுப்பிற்கு பதிலாக நீங்கள் உங்களின் தசையை இழந்ததால், அப்படியான 'வெயிட் லாஸ்' நிச்சயம் ஆரோக்கியமற்றது தான். இதற்கு என்ன தீர்வு? ரொம்பவே சிம்பிள்!
1. வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை எடுத்துக்கொள்ள வேண்டும் :
வைட்டமின் டி ஒருவருக்கு வலுவான பற்கள் மற்றும் எலும்புகளைப் பெற உதவுவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறைக்கும் உதவுகிறது. ‘லெப்டின்’ என்கிற ஹார்மோன், உணவு உண்ட பிறகு நம்மை நிறைவாக உணர செய்கிறது. இந்த லெப்டினின் செயல்திறன் உடலில் உள்ள வைட்டமின் டி அளவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதிக அளவில் வைட்டமின் டி-யின் உதவியை நாடுபவர்கள் அதிகமாக உடல் எடையை குறைப்பதாகவும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
2. உடற்பயிற்சியை முறையாக கடைபிடிக்கவும் :
உணவுப் பொருட்களில் பல வகையான கொழுப்புகள் இருப்பதைப் போலவே, உடலில் பல வகையான கொழுப்புகளும் உள்ளன. வெள்ளை கொழுப்பு (white fat) உடல் பருமனுக்கு பங்களிக்கும் அதே வேளையில், பிரவுன் கொழுப்பு (brown fat) மிகவும் சிறந்த கொழுப்பு வகையாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. முறையான மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்பவருக்கு, ஐரிசின் என்ற ஹார்மோன் உடலில் உள்ள வெள்ளை கொழுப்பை பிரவுன் கொழுப்பாக மாற்ற உதவும். இதன் வழியாக உடலில் பிரவுன் கொழுப்பின் அளவு அதிகரிக்கும், வெயிட் லாஸ் சாத்தியமாகும்!
இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும் 6 ஆபத்தான உணவுகள் : இன்றே அவற்றை நிறுத்துங்கள்..!
3. க்ரீன் டீ குடிக்கவும் :
கிரீன் டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது உடல் குறைந்த கொழுப்பை உறிஞ்சுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், அதிக கொழுப்பை அகற்றவும் உதவுகிறது. தினமும் 3 முதல் 5 கப் க்ரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
4. மரபணுக்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள் :
நினைவில் வைத்து கொள்ளுங்கள்! ஒரு நபரின் 'பாடி மாஸ் இன்டெக்ஸை' (body mass index) பாதிக்கும் முப்பது வகையான மரபணுக்கள் உள்ளன. இருப்பினும் எல்லா மரபணுக்களுமே சக்தி வாய்ந்தவைகள் அல்ல. வழக்கமான வெயிட் லாஸ் உடற்பயிற்சிகள் மற்றும் அது தொடர்புடைய பழக்க வழக்கங்கள் மரபணுக்களை மாற்ற உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் பருமனுக்கு காரணம் மரபணு தான், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்; அப்படி சொல்பவர்களின் பேச்சுக்களுக்கு காது கொடுக்க வேண்டாம்.
5. உட்கார்ந்தே கிடக்காதீர்கள் :
உடல் எடையை குறைக்க உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று உடற்பயிற்சி என்றாலும் கூட, அவ்வப்போது நடப்பது, உட்கார்ந்தே கிடைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்வதும் கூட உடல் எடையை குறைக்க உதவும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.