உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் உயிரையும் பறித்து விடுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அடையாளமாக சளி, காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் என்று ஏரளமான அறிகுறிகள் சொல்லப்பட்டுள்ளன.
COVID-19 தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் ஏறத்தாழ 80% பேர் லேசான எதிர்விளைவை அனுபவிப்பர். பெரும்பாலும் 2 வாரங்களுக்குள் குணமடைவர். வைரசால் கடும் பாதிப்பு சந்திப்பவர்கள் குணமடைய 3 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம். ஆனால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10% பேர் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒன்று, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகும் கூட நீண்டகால அறிகுறிகளை( நீடித்த சோர்வு முதல் தொடர்ச்சியான மனக் குழப்பம் வரை) அனுபவிப்பார்கள் என்பது கவலை அளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
நீண்ட கால கொரோனா அறிகுறிகளை கொண்டவர்கள் 'லாங் ஹாலர்கள்' (long-hauler) என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலை இளம் வயதினர், வயதானவர்கள், ஆரோக்கியமாக இருந்தவர்கள், நாள்பட்ட நிலையில் இருந்தவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள், சேர்க்கப்படாதவர்கள் என யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து கொரோனவுடன் வாழ நாம் பழகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனவும் நம் உடலுடன் வாழ்வதை புரிந்து கொள்ள முடிகிறது.
எவ்வளவு காலம் நீடிக்கும்?
நீண்ட COVID நிலையின் மனக்குழப்பத்தை மருத்துவர்கள் இது ஒரு "உண்மையான பிரச்சினை" என்று குறிப்பிடுகின்றனர். SARS-CoV-2 நோய்த்தொற்றின் கடுமையான தொடர்ச்சியை (PASC- Post Acute Sequelae of SARS-CoV-2 infection) என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இது பொதுவாக பிந்தைய COVID நோய் அறிகுறி என கூறப்படுகிறது. இந்த நீண்ட கால அறிகுறிகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு சிகிச்சை?
நோயின் அடிப்படை நோய்க்கிருமி வழிமுறை என்னவென்று தெரியாதபோது அதற்கான ஒரு சிகிச்சை முறையை உருவாக்குவது மிகவும் கடினம் என்று கூறும் மருத்துவர்கள், இந்த இடத்தில தான் தங்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது முற்றிலும் உண்மையான நிகழ்வு என்றாலும், சரியான நோய்க்கிருமியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தற்போது இல்லை. வழிமுறைகளை கண்டறிந்த பின்னரே பொருத்தமான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறைகளை வகுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
Also read... கொரோனாவை போல பேரழிவை ஏற்படுத்தும் ’சூப்பர்பக்’ - அந்தமான் தீவில் கண்டுபிடிப்பு!
பொதுவான அறிகுறி:
லாங் கோவிட்(Long COVID) என்பது கோவிட் தொற்றால் உடலில் ஏற்பட்ட சிக்கல்களை நீண்ட காலத்திற்கு அனுபவிக்கும் நிலை ஆகும். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிறகும் லாங் ஹாலர்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளாக சுவாசிப்பதில் சிரமம், மூட்டு வலி,நெஞ்சு வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, மிகுந்த சோர்வு உள்ளிட்டவை கூறப்படுகிறது.
நீண்டகால COVID சிக்கல்களில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது.?
தொற்றிலிருந்து மீண்டு வந்த பின்னும் கோவிட்-19 அறிகுறிகள் உங்களை வாட்டினால் நிச்சயமாக மருத்துவ உதவியை நாட வேண்டும். மருத்துவரை அணுகி உடலில் நீடித்திருக்கும் அறிகுறிகளை தெளிவாக சொல்ல வேண்டும். உடல் மற்றும் மனதை பாதிக்கும் கடுமையான செயல்களில் ஈடுபடாமல் எப்போதும் சுய அமைதி தரும் செயல்களில் ஈடுபடலாம்.