கோவிட்-19 தொற்றின் தீவிரமான முதல் மற்றும் இரண்டாம் அலை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பள்ளிகளை மூட வழிவகுத்தது. நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. வீடுகளுக்குளேயே அடைந்தபடி ஆன்லைனில் வகுப்பில் கல்வியைத் தொடர்ந்ததால் பெரும்பாலான பள்ளி குழந்தைகளின் சுறுசுறுப்பு குறைந்து மந்தமாயினர். மேலும் அதிக நேரம் ஸ்கிரீன் முன் உட்கார்ந்து கடும் சோர்வடைந்தனர். பல ஆய்வுகளின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இதனால் மனச்சோர்வு மற்றும் பதட்ட அறிகுறிகள் அதிகரித்தன.
ஆனால், சூரிச் பல்கலைக்கழகத்தின் (University of Zurich) சமீபத்திய ஆய்வில் வீட்டுக்கல்வி (ஆன்லைன் கல்வி) டீனேஜ் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. லாக்டவுன்களின் போது மாணவர்கள் வழக்கமாக தூங்குவதை விட ஒரு நாளைக்கு சுமார் 75 நிமிடங்கள் அதிகமாக தூங்கி இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வின் இணைத் தலைவர் ஆஸ்கர் ஜென்னி (Oskar Jenni) கூறுகையில், லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே கல்வி கற்ற அதே நேரத்தில், டீனேஜ் மாணவர்களின் உடல்நலம் தொடர்பான வாழ்க்கைத் தரம் கணிசமாக மேம்பட்டு உள்ளது.
அவசர அவசரமாக பாதி தூக்கத்தில் எழுந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதால் மாணவர்கள் நன்றாக, நிம்மதியாக தினமும் தூங்கி எழுந்தனர் மற்றும் அவர்களின் ஆல்கஹால் மற்றும் காஃபின் நுகர்வு குறைந்து உள்ளது என்று கூறி இருக்கிறார். ஜமா நெட்வொர்க் ஓபன் ஜர்னல் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி பருவத்தில் கிடைக்கும் அதிக தூக்கம் இள மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பான வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது என்றார். லாக்டவுன் காலத்தில் சூரிச் மாகாணத்தில் உள்ள சுமார் 3,664 உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம், அவர்களின் தூக்க முறைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆன்லைன் சர்வே ஒன்றை நடத்தினர். இந்த சர்வேயில் கிடைத்த பதில்களை கடந்த 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பழைய சர்வேயின் போது 5,308 மாணவர்கள் அளித்த பதில்களுடன் ஆய்வாளர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு : லாக்டவுன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட 3 மாதங்களில், ஆன்லைன் வகுப்பு நாட்களில் வழக்கத்தை விட சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக இளம் பருவத்தினர் காலை எழுந்தனர். ஆனால் சராசரியாக 15 நிமிடங்கள் தாமதமாக இரவு படுக்கைக்குச் சென்றனர். அதாவது அவர்களின் மொத்த தூக்கத்தின் அளவு சுமார் 75 நிமிடங்கள் அதிகரித்தது. வார இறுதி நாட்களில் இரு குழுக்களின் தூக்க நேரங்களிலும் சிறிய வித்தியாசம் இருந்தது. அதே போல லாக்டவுன் குரூப்பில் உள்ள மாணவர்கள் தங்கள் உடல்நலம் தொடர்பான வாழ்க்கைத் தரத்தை உயர்வாக மதிப்பிட்டுள்ளனர்.
தங்களது ஆல்கஹால் மற்றும் காஃபின் நுகர்வின் அளவு தொற்றுக்கு முந்தைய குழு மாணவர்களை விட குறைவாக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். லாக்டவுன் பல இளைஞர்களுக்கு மோசமான உடல்நலம் மற்றும் மோசமான நல்வாழ்வுக்கு வழிவகுத்தது தெளிவாக இருக்கிறது என்றாலும், எங்களது இந்த கண்டுபிடிப்புகள் பள்ளி மூடல்களின் தலைகீழ் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார் ஜென்னி. எங்களுடைய சமீபத்திய இந்த ஆய்வு முடிவு காலையில் பள்ளியை தாமதமாக தொடங்குவதன் நன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இதனால் மாணவர்கள் அதிக தூக்கத்தை பெற முடியும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.