முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடும் என கருதப்பட்டு வந்த மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் தற்போது நடுத்தர வயது ஆண்களையும் தாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறையான வெயிட் லிப்டிங் பயிற்சிகளில் ஈடுபடுவது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 40 முதல் 70 சதவீதம் குறைக்க உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டி 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வு முடிவுகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் மருத்துவம் மற்றும் அறிவியலின் பங்களிப்பு குறித்து வெளியிட்டுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெயிட் லிப்டிங் பயிற்சியில் ஈடுபடுவது பலனளிக்கவில்லை என்றும், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் உள்ளாக பயிற்சி செய்வது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுவதும் தெரியவந்துள்ளது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கும், உடல் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏரோபிக்ஸ் சென்டர் லாங்கிட்யூடினல் சுமார் 13 ஆயிரம் நபர்களிடம் நடத்திய ஆய்வில், தசை வலிமையை அதிகரிப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக செய்யப்படும் வாராந்திர உடற்பயிற்சியானது, வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் ஏற்படக்கூடிய மெட்டா பாலிக் சிண்ட்ரோம் என்ற குறைபாட்டை 29 சதவீதமும், அதிக கொலஸ்ட்ராலால் உருவாக்கக்கூடிய ஹைபர்கொலஸ்டிரோலீமியா என்ற நோயை 32 சதவீதமும் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிற ஆராய்ச்சிகள் முடிவுகள்:
நடைபயிற்சியை விட பளுதூக்குதல் இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கோபன்ஹேகனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கார்டியோ பயிற்சிகளை விட பளு தூக்குதல் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குவதை கண்டறிந்துள்ளனர். இரண்டு வகையான உடற்பயிற்சிகளும் இதயத்திற்கு நல்லது என்றாலும், பளு தூக்குதல் கூடுதல் பலனைக் கொடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெயிட் லிப்டிங் பயிற்சிகள், இதயத்திற்கு ஆபத்தான பெரிகார்டியல் மற்றும் எபிகார்டியல் கொழுப்பு திசுக்களின் அளவைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக 32 நபர்கள் 12 வார எடை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டிஎன்ஏவுக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் இப்படியொரு தொடர்பா..? ஆய்வில் ஆச்சரியம்
பளு தூக்குதல் இதயத்திற்கு எப்படி நல்லது?
ஏரோபிக் மற்றும் வெயிட் லிப்டிங் பயிற்சிகளை ஒன்றாக மேற்கொள்வது எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பளு தூக்கும் போது இதயத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதனால் தமனிகளின் அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
யாருக்கு அதிக ஆபத்து:
நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள், குறைந்த உடல் செயல்பாடுகளை கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமுள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் முதல் சுகாதார நிபுணர்கள் வரை அனைவருமே ஆக்டீவான லைஃப் ஸ்டைலுக்கு மாறுவது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.
மாரடைப்பு ஏற்பட, புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, குறைவான உடலியல் செயல்பாடுகள், அதிக எடை, உயர் இரத்த கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகள் உள்ளன. ஆனால் இந்த ஆபத்துக் காரணிகளை நமது வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமாக குறைக்க முடியும்.
உடற்பயிற்சி, சீசனுக்கு கிடைக்கக்கூடிய பழம் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது, உடல் சார்ந்த செயல்பாடுகளை அதிகரிப்பது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதைக் குறைப்பது ஆகியன உடல் எடை மற்றும் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Exercise, Heart attack, Stroke