கொலஸ்ட்ரால் என்பது உடலுக்குத் தேவையான ஒரு வகை கொழுப்பு ஆகும். கொலஸ்ட்ரால் உங்கள் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு கொலஸ்ட்ரால் இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் ஹார்மோன்களின் உற்பத்திக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை செரிமானம் செய்வதற்கும் தேவைப்படுகிறது.
நமது உடல் நமக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்வதைப் போலவே பெரும்பாலான உயிரினங்களிலும் கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே, அவற்றின் இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பால் பொருட்கள் அனைத்திலும் கொலஸ்ட்ரால் உள்ளது.
கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்டிரால் உள்ளன. இதில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் பற்றி இங்கே பார்க்கலாம்.
எல்டிஎல் கொலஸ்ட்ரால் / கெட்ட கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ராலில் லிப்போபுரோட்டின்கள் எனப்படும் இரண்டு வகையான புரதங்கள் உள்ளன. இந்த லிப்போபுரோட்டீன்களில் ஒன்று LDL (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) என்று அழைக்கப்படுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ரால். மற்றொன்று HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்). இது பொதுவாக "நல்ல" கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது.
LDL கொலஸ்ட்ராலில் குறைவான புரதம் மற்றும் அதிக கொழுப்பு உள்ளதால் இது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உயர் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகக் காணப்படுகிறது
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, 2015 மற்றும் 2016 க்கு இடையில், 20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களில் 12 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மொத்த கொழுப்பின் அளவு 240 mg / dL ஐ விட அதிகமாக இருந்தது. இது மிக உயர்ந்த அளவு ஆகும்.
அமெரிக்காவில் 6 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் தோராயமாக 7% பேருக்கு அதிக கொழுப்பு உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
LDL மற்றும் HDL இடையே உள்ள வேறுபாடுகள்
இந்த இரண்டு வகையான கொலஸ்ட்ரால்களும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை என்றாலும், அவற்றில் ஒன்று எப்படி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்?
எளிமையாகச் சொன்னால், அதிக அளவு எல்டிஎல் கொழுப்பு உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாய்ந்தால், அது இறுதியில் இரத்த நாளங்களில் குவிந்து, அடைப்பை ஏற்படுத்தத் தொடங்கும். இது "பிளேக்" என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் இரத்த நாளங்களில் பிளேக் உருவாவதால், இரத்த நாளங்கள் சுருங்குகின்றன. உங்கள் இரத்த நாளங்கள் மிகவும் குறுகியதாக இருந்தால், உங்கள் இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்தம் செல்வது கடினமாக இருக்கும். ரத்த ஓட்டம் குறையும் போது, நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும். மறுபுறம், HDL, கொலஸ்ட்ராலை கல்லீரலுக்குத் திருப்பித் தருகிறது, இதனால் அது உடலில் இருந்து வெளியேற்றப்படும். எனவே, HDL உடலுக்குத் தேவையான் கொலஸ்ட்ரால் வகையாகும்.
உங்கள் LDL நிலை என்னவாக இருக்க வேண்டும்?
பொதுவாக, பெரும்பாலானவர்கள் தங்கள் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
சராசரியாக, எல்டிஎல் அளவுகள் பின்வருமாறு இருக்க வேண்டும்.
· 100mg / dL க்கும் குறைவானது - மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் டோஸ்
· 100-129mg / dL – பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு கொஞ்சம் அதிகமாக இருப்பது, ஆபத்து இல்லாதது
· 130-159 mg / dL - பார்டர்லைன்
· 160-189 mg / dL - அதிக அளவு
· 190 mg / dL மற்றும் அதற்கு மேல் - மிக அதிக அளவு
அதிக கொலஸ்ட்ரால் எவ்வகையான ஆபத்தை விளைவிக்கும்
உங்கள் உடலில் எல்.டி.எல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் எவ்வளவு உள்ளது அல்லது அதிகமாக உள்ளதா என்பதை நீங்கள் அறிய வேண்டும். ஏனென்றால், இந்தப் பிரச்சனையுடன் தொடர்புடைய அறிகுறிகள் எதுவும் உங்கள் உடலில் தோன்றாமல் இருக்கலாம்.
ஆனால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமாக இருக்கும் போது ஒரு சில அறிகுறிகள் தோன்றும்.
இதய நோய் வகைகள் மற்றும் அதன் அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!
உங்கள் உடலில் அதிக அளவு எல்டிஎல் கொலஸ்ட்ரால் இருந்தால், உங்கள் தோலில் சாண்டோமாஸ் எனப்படும் சிறிய கட்டிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். கூடுதலாக, சாம்பல்-வெள்ளை நிற வட்டங்கள் கண்ணின் கார்னியாவைச் சுற்றி தோன்றும், இது கார்னியல் ஆர்க்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு அறிகுறிகளும் உங்கள் உடலில் அதிக கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.
அதிக எல்டிஎல் காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்
பொதுவாக அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கும் போது, இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கும் கூடுதலாக, "கெட்ட" கொழுப்பினால் ஏற்படும் பல தீவிர சிக்கல்களும் உள்ளன.
· கரோனரி ஆர்ட்டரி நோய்
· கார்டியோவாஸ்குலர் பாதிப்பு
· புற தமனி நோய்
· பக்கவாதம்
· சைலன்ட் ஹார்ட் அட்டாக் / மினி ஹார்ட் அட்டாக்
சிலருக்கு நீண்ட காலமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
LDL அதிகமாக இருப்பதை, அதனால் ஏற்படும் நோய்களைக் கண்டறிதல்
உங்களுக்கு எல்.டி.எல் கொலஸ்ட்ரால் இருக்கிறதா என்பதைக் கண்டறிய சிறந்த வழி, உங்கள் கொலஸ்ட்ரால் அளவைச் சரிபார்க்க இரத்தப் பரிசோதனை செய்துகொள்வதாகும். அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் சில நேரங்களில் பரம்பரை ரீதியாக உங்களுக்கும் இருக்கலாம். எனவே உங்கள் குடும்ப வரலாறு மற்றும் வீட்டில் யாருக்காவது கொலஸ்ட்ரால் இருக்கிறதா என்பதையும் உங்கள் மருத்துவரிடம் கூற வேண்டும்.
கொலஸ்ட்ரால் அளவை அறிய மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனை லிப்பிட் பேனல் எனப்படும். இந்தச் சோதனை உங்கள் எல்டிஎல், எச்டிஎல் மற்றும் பிற வகையான எச்டிஎல் அல்லாத கொலஸ்ட்ராலை அளவிடுகிறது.
உங்கள் HDL அல்லாத கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், உங்களுக்கு "அதிக கொழுப்பு" இருப்பதாகச் சொல்லலாம். மருத்துவர் அதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார் அல்லது அதற்கேற்ப சிகிச்சையை பரிந்துரைப்பார்.
யார் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்ய வேண்டும்?
அனைவருமே தங்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 20 வயதிலிருந்து, ஒவ்வொரு 4-6 வருடங்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதிப்பது நல்லது.
கணுக்காலில் வீக்கமா?... இதய நோய்கான அறிகுறியாக இருக்கலாம்... உடனே மருத்துவரை அணுகுங்கள்..!
பொதுவாக, 45 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும், 55 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட பெண்களும் 1 முதல் 2 வருடங்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் அளவைப் பரிசோதிக்க வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்.
அதிக கொலஸ்ட்ரால் அளவுக்கான ஆபத்து காரணிகள்
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. ஏனென்றால், வயதாகும்போது, கொலஸ்ட்ராலை வடிகட்டுவது நம் உடலுக்கு மிகவும் கடினமான செயலாகிறது.
உடல் பருமன் மற்றும் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் குறையும் வாய்ப்பு அதிகம். இதனால் ஏற்படும்தங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். உடல் எடையைக் குறைக்க மற்றும் உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை மருத்துவர்கள் வழங்குவார்கள்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களை அதிக ஆபத்தை ஏற்படுத்தும் சில காரணிகள் பின்வருமாறு:
· புகைபிடிப்பது இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் நல்ல கொழுப்பைக் குறைக்கிறது
· நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவு சாப்பிடுவது
· உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
· அதிகப்படியான மது அருந்துவது
உங்கள் குடும்பத்தில் அதிக கொலஸ்ட்ரால் உலா நபர்கள் இருந்தால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டியிருக்கும். நீங்கள் 40 வயதிற்குட்பட்டவராக இருந்தால், சில வருடங்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்கவும். மருந்துகள் முதல் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை அதிக அளவு "கெட்ட" கொழுப்பைக் குறைக்க பல வழிகள் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.