இதய நோய் ஒரு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோயாக இருந்தாலும், சில எச்சரிக்கை நடவடிக்கைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் முறையான மருந்துகளால் இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும்.
மாறிவரும் வாழ்க்கைமுறை, அடிமையாக்கும் பழக்கம், ஒழுங்கற்ற மற்றும் தவறான உணவுப்பழக்கம், நீண்ட நேரம் உட்கார்ந்த படியே செய்யும் வேலைகள், உடற்பயிற்சியின்மை, பரம்பரை அல்லது மரபணு போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் மாற்றங்களை மேற்கொண்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், இதய நோய்க்கான அறிகுறிகள் பற்றியும் அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகளவில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு நபர் இதய நோயால் இறக்கிறார்கள். தற்போது இளைஞர்கள் கூட இதய நோயால் குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள். இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் பாய்வதை நிறுத்தும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. தசைகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ஆர்ட்டரிகளில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புத் தொகுதிகள் ஆர்ட்டரிகளின் அகலத்தைக் குறைத்து இரத்த விநியோகத்தைத் தடுக்கின்றன. போதியளவு இரத்தம் கிடைக்காத போது இதய தசை பாதிக்கப்பட்டு இதயம் துடிப்பதை நிறுத்தும். இதய நோயைக் கருத்தில் கொள்ளும்போது, சிகிச்சை என்பதை விட தடுப்பதே சிறந்தது.
இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இதய நோய்கள் குறிப்பாக மாரடைப்பு வராமல் இருக்க இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும்...
புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம்: புகைபிடித்தல், புகையிலைப் பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். எந்தவொரு போதை பழக்கமும் மாரடைப்பை உண்டாக்கும். எனவே எந்த விதமான புகையிலையையும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனென்றால், புகையிலை கடுமையான நோயை உண்டாக்கி, உங்கள் ஆயுளைக் குறைக்கும். புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு இறப்பு ஆபத்து 20% குறைகிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
Heart Attack : மாரடைப்பின் வகைகளும்... அதன் அறிகுறிகளும்...
புகையிலை இரசாயனங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை மோசமாக பாதிக்கின்றன. புகைபிடித்தல் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. மேலும், இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் தடையை உண்டாக்குகிறது. இது இதய பாதிப்பின் முதல் நிலை. எனவே, புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டியது அவசியம்.
எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்: அதிக எடை பல நோய்களை வரவழைக்கிறது. 1 மில்லியன் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) கரோனரி இதய நோய்க்கான ஆபத்து காரணி என்று கண்டறியப்பட்டது. எனவே, உயரத்திற்கு ஏற்றவாறு எடையை வைத்துக் கொள்வது அவசியம். எடையைக் கட்டுப்படுத்த போதுமான உடற்பயிற்சி தேவை.
உடற்பயிற்சி: மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்க அல்லது இதயத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி இதய நோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. நல்ல தூக்கத்தைப் பெறவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி மிகச் சிறந்த வழியாகும். வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், வாரத்திற்கு குறைந்தது 75 நிமிடங்கள் வேகமாக நடப்பது நல்லது.
மன அழுத்தம் முதல் உடல் பருமன் வரை : உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்..!
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்: தினமும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இதற்காக, பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், மீன், குறைந்த கொழுப்பு இறைச்சி, குறைந்த கொழுப்பு பால் பொருட்கள், தானியங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் பிற பயனுள்ள கொழுப்புகளை உணவில் சேர்க்க வேண்டும். அதிக உப்பு, அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை குறைக்க வேண்டும்.
போதுமான தூக்கம் : உடலுக்குத் தேவையான மற்றும் அமைதியற்ற தூக்கம் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். எனவே, இரவில் குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும்.
மன அழுத்த மேலாண்மை அவசியம் : தற்போது, பரபரப்பான வாழ்க்கை முறையால், மன அழுத்தம் அதிகரித்து வருவதால், மாரடைப்பு அபாயமும் அதிகரித்து வருகிறது. மன அழுத்தத்தை சமாளிக்க யோகா, தியானம், நீங்கள் விரும்பும் பொழுதுபோக்கு விஷயங்களை செய்யலாம்.
மன அழுத்தம் முதல் உடல் பருமன் வரை : உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்..!
இதய நோய் கண்டறியப்பட்ட பிறகு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்
ஒரு பக்கவாதம் வந்து போன பிறகு, மற்றொரு பக்கவாதம் நோயாளிக்கு ஆபத்தானது. எனவே, சரியான நேரத்தில் கவனிப்பது அவசியம். ஒட்டுமொத்த வாழ்க்கை முறை, உணவில் சாதகமான மாற்றங்கள், உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி, சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுதல், மருந்துகளை தவறாமல் உட்கொள்வது, போதை பழக்கத்தை தவிர்த்தல் இவை அனைத்தும் எல்லா விதமான இதய நோய்களையும் தடுக்க உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart disease