பி.சி.ஓ.எஸ் பிரச்சனை ஒழுங்கற்ற மாதவிடாய், உயர் இரத்த அழுத்தம், முகம் மற்றும் உடம்பில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) அல்லது நீர்க்கட்டி பிரச்சனை இந்தியாவில் பத்தில் ஒரு பெண்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறு ஆகும்.
இது இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது மற்றும் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் உள்ள பல சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சியால் வெளிப்படுகிறது. இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படுகிறது.
பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம், மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
பி.சி.ஓ.எஸ்- ஐ ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காணும் முறைகள் :
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்சையின் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.
பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகு நிகழும்போதும், இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தாலோ மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.
உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40–80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்கள் ஆகும்.
ஆண் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு மற்றும் முடி வளர்வது. குறிப்பாக முகத்தில் அதிகளவு முடி வளர்வது ஒரு முக்கிய அறிகுறியாகும்.
உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.
டைப் 2 நீரிழிவு நோய் மற்றொரு முக்கிய அறிகுறியாக உள்ளது. இதனால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.
மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.
பி.சி.ஓ.எஸ் நோயை கண்டறியும் மருத்துவ முறைகள் :
பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை. எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு பின்வரும் வழிகளை கையாளுவார்கள்.
ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனை
இரத்த பரிசோதனைகள்
அல்ட்ராசவுண்ட் சோதனை
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் பி.சி.ஓ.எஸ்-ஐ குணப்படுத்துதல் :
பி.சி.ஓ.எஸ் உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல, ஆனால் நீண்டகால சிக்கல்களை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், சில எளிய வாழ்க்கை முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பி.சி.ஓ.எஸ்-ஐ குணப்படுத்தலாம்.
சத்தான உணவை உட்கொள்வதன் மூலமும், வழக்கமான உடல் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறலாம்.
பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்றாகும்.
வழக்கமான உடல் உடற்பயிற்சி, நடை பயிற்சியில் ஈடுபடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பது இன்சுலின் அளவை சீராக வைத்து கொள்ளலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும்
மன அழுத்தம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, ஆனால் பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PCOD, PCOS, Women Health