ரேவதியும் அவர் கணவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ரேவதிக்கு முதல் கர்ப்பம். இரண்டாவது மாதம் தொடங்கி இருந்தது . ஸ்கேன் செய்து கர்ப்பத்தை உறுதி செய்தாகிவிட்டது. தேவையான ரத்தம் மற்றும் யூரின் டெஸ்ட்களை செய்து முடிவுகளை எடுத்துக் கொண்டு ஆலோசனைக்காக வந்திருந்தார்.
வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு, பரிசோதனை முடிவுகளை பார்த்துக் கொண்டே வந்தேன். ரத்தம் போதுமான அளவு இருந்தது தைராய்டு, சர்க்கரை போன்றவையும் இயல்பான அளவிலேயே இருந்தன.
கடைசியாக சிறுநீர் கிருமி வளர்ச்சி பரிசோதனை ,கல்ச்சர் டெஸ்ட் (urine culture and sensitivity) என்று கூறுவோம். பார்த்த போது, அதில் கிருமிகள் இருப்பதையும் ஒரு லட்சத்திற்கு அதிகமான கிருமிகள் வளர்ச்சி பரிசோதனையில் காணப்படுவதையும் காண்பித்தது.
நான் ரேவதியிடம் அவருக்கு சிறுநீரில் கிருமி தொற்று இருப்பதால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினேன்.
ரேவதியின் கணவர் உடனே, டாக்டர் யூரின் இன்ஃபெக்ஷன் என்றால் ஏதாவது தொந்தரவுகள் இருக்க வேண்டும் இல்லையா? காய்ச்சல் அல்லது யூரின் போகும் போது எரிச்சல், வயிற்றில் வலி இப்படி எந்த பிரச்சினையுமே இல்லாத போது எதற்காக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் ? அப்படி எதுவுமே இல்லாத போது எப்படி டெஸ்டில் மட்டும் இன்பெக்ஷன் பாசிட்டிவ் என்று வருகிறது? இப்படி இருந்தால் மாத்திரை கட்டாயம் எடுக்க வேண்டுமா ? அப்படி எடுக்காவிட்டால் என்னவாகும்? இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?என்று கேள்விக் கணைகளை தொடுத்தார்.
என் பதில்:
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அத்துடன் கர்ப்ப காலத்தில் சிறுநீர் பாதையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களால் எப்பொழுதும் சிறிதளவு சிறுநீர், பாதையில் தங்கி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனால் லேசாக ஒரு கிருமி தொற்று சிறுநீர் பாதையில் உண்டானால் கூட சில நேரங்களில் இது போன்ற எந்த விதமான அடையாளங்களும் வெளியே இல்லாமல் இருப்பினும், கிடுகிடுவென சிறுநீரகம் வரை பரவி , கடுமையான அறிகுறியாக வெளிப்படும். அவ்வாறு தீவிர தொற்றாகும்போது கடுமையான காய்ச்சல், வயிற்று வலி போன்றவை உண்டாகும்.
Also Read : கர்ப்ப காலத்தில் சத்து மாத்திரைகள் கட்டாயம் எடுக்கனுமா..? உணவின் மூலம் ஊட்டச்சத்து கிடைக்காதா..?
இதை அறிகுறியற்ற சிறுநீர் பாதை தொற்று(asymptomatic bactriuria) என்று குறிப்பிடுவோம்.
அதனுடைய தாக்கத்தால் கருச்சிதைவு ,குறைமாத பிரசவம் ,கரு வளர்ச்சி குறைவு போன்றவை நடக்கலாம். இந்த காரணங்களால் கர்ப்ப காலத்தில் எந்தவிதமான வெளிப்புற அடையாளங்களும் இல்லாவிட்டாலும் , சிறுநீர் கிருமி வளர்ச்சி பரிசோதனை செய்யப்பட்டு லேசான தொற்றை கண்டுபிடித்தால் கூட அவருக்கு அதற்குரிய சிகிச்சை தரப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற சிகிச்சைகளில் குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் குழந்தையை பாதிக்காத வண்ணம் வேலை செய்யக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளன. குறிப்பிட்ட அந்த ஆன்டிபயாடிக் மருந்துகளை மட்டுமே கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவோம். அதனால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை . எனவே தைரியமாக பரிந்துரைக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்." என்று முடித்தேன்.
"நன்றாக புரியும்படி விளக்கி சொன்னீர்கள் மேடம் ,மிக்க நன்றி!" என்று மருந்துகள் எழுதிய சீட்டை எடுத்துக் கொண்டு இருவரும் புறப்பட்டனர்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Urinary Tract Infection, பெண்குயின் கார்னர்