கொரோனா வைரஸ் மற்றும் ஃப்ளூ என்று சொல்லக் கூடிய சளிக் காய்ச்சல் ஆகிய இரண்டுமே நமது சுவாசப் பாதைகளில் தொற்று ஏற்படுத்தக் கூடிய நோய்கள் தான். கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தியதைப் போலவே சளிக் காய்ச்சலுக்கு எதிராகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு நோயின் தீவிரத்தன்மையை மக்கள் எப்போது உணர்கிறார்களோ, அப்போது மட்டுமே அதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கின்றனர். இல்லாவிட்டால் நோய் தடுப்புக்கான விதிமுறைகளை சில காலம் கடைபிடித்துவிட்டு, பிறகு அதை அப்படியே மறந்து விடுகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாம் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறோம். ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் வைரஸ் தொற்று போன்ற வார்த்தைகளை கடந்த 3 ஆண்டுகளில் அடிக்கடி கேட்டிருப்போம். இத்தகைய சூழலில், கொரோனா தடுப்பூசி வரம் போல அமைந்தது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அது மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கொரோனா 3ஆவது அலையை கட்டுக்குள் கொண்டு வரவும் அது உதவிகரமாக இருந்தது.
கொரோனா மற்றும் சளிக் காய்ச்சல்
இரண்டுமே சுவாசத் தொற்று நோய்கள் தான் என்றாலும் கூட, இரண்டுக்கும் காரணமான வைரஸ் என்பது வெவ்வேறாக இருக்கிறது. இதன் அறிகுறிகள் ஒன்று போலவே இருக்கும். கோவிட் பாதிப்பு என்பது கொரோனா வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. அதே சமயம், சளிக் காய்ச்சல் என்பது ஏ, பி, சி மற்றும் டி என்னும் 4 வகையான சீதோஷ்ன வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. ஆகவே, முறையான மருத்துவப் பரிசோதனை செய்யாமல், ஒரு நபருக்கு எந்த வகையான தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை சரியாக சொல்லிவிட முடியாது.
அதே சமயம், இரண்டு நோய்களுக்கு எதிராகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது. இருமல், மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல் ஆகியவை இந்த இரண்டு நோய்களுக்குமான பொதுவான அறிகுறிகள் ஆகும். தொற்று பாதித்த நபர்களின் இருமல், தும்மல், மூச்சுக்காற்று போன்றவற்றின் மூலமாக வெளியேறும் இந்த வகை வைரஸ்கள், எதிரே உள்ள நபரின் மூக்கு, கண்கள் அல்லது வாய் வழியாக உள்நுழைந்து அவர்களையும் தாக்குகிறது.
also read : உங்களுக்கு வந்திருப்பது கோவிட் தொற்றா? ஃப்ளூவா? அல்லது வெப்பம் சார்ந்த நோயா என்பதை எப்படி அறிவது..?
தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி சில நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக இந்த இரண்டு நோய்களில் இருந்தும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமான பகுதிகளை தவிர்க்க வேண்டும். கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து, முறையான காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.
இருமல், தும்மல் போன்ற சமயங்களில் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன், அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
also read : நீங்கள் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் : எப்படி தெரியுமா..?
ஒரே சமயத்தில் இரண்டு பாதிப்பும் ஏற்படுமா?
நிச்சயமாக ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இரண்டு நோய் பாதிப்புகளுக்காகவும் மருத்துவமனை செல்லாமல் தவிர்க்க வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாகும். அதே சமயம், கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் சளிக் காய்ச்சலும் ஏற்பட்ட மக்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பூசியுடன், சளிக் காய்ச்சலுக்கும் தடுப்பூசி அவசியமா?
கட்டாயம் அவசியம் தான். நோய் தொற்றை ஏற்படுத்தக் கூடிய வைரஸுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறுவதே தடுப்பூசியின் நோக்கம் ஆகும். கொரோனா மற்றும் சளி காய்ச்சல் ஆகிய இரண்டும் வெவ்வேறு வைரஸ் மூலமாக ஏற்படுவதால் தனித்தனி தடுப்பூசி அவசியமாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.