Home /News /lifestyle /

ஆண்களே.. பெண்கள் தினத்தில் உங்கள் பரிசு ’அக்கறை’ யாக இருக்கட்டும்..!

ஆண்களே.. பெண்கள் தினத்தில் உங்கள் பரிசு ’அக்கறை’ யாக இருக்கட்டும்..!

உலக பெண்கள் தினம்

உலக பெண்கள் தினம்

உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நபர்களின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டும் பெண்களுக்கு திருப்பி நீங்கள் செய்யும் நன்றி அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதுதான்.

மல்டி டாஸ்கிங் பெண்களுக்குக் கை வந்த கலை. வீடு, அலுவலகம் என இரண்டையும் சரியாக கையாண்டு அதை பிரச்னைகள் இல்லாமல் கொண்டு செல்வதில் பெண்களுக்கு இருக்கும் திறமை மலைக்க வைக்கும். அதனால்தான் அவர்களை இன்றளவும் உலகமே போற்றிக் கொண்டாடுகிறது.

ஆனாலும் இத்தனை விஷயங்களைக் கையாளும் பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டும் கண்டுகொள்ளத் தவறுவதாக மனநல ஆய்வுகளே தெரிவிக்கின்றன.

சத்தான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள் என்றாலும் சில நோய்கள் பெண்களை மட்டுமே தாக்கும் குணம் கொண்டது. அதுகுறித்த விழிப்புணர்வு , புரிதல் அவசியம். ஆண் , பெண் உடல் மாற்றங்களுக்கு ஏற்ப நோய்களும், நோய் அறிகுறிகளுமே வெவ்வேறாகவே இருக்கின்றன.

உதாரணத்திற்கு இன்றைய பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னை பிசிஓடி, பிசிஓஎஸ். சினைப்பைக் கட்டிகளின் காரணமாக மாதவிடாய் வராமல் போதல் அல்லது நிற்காமல் வரும் உதிரப்போக்கு. இந்த பிரச்னையால் பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கின்றனர். இதற்கு முறையான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாமலேயே தவிர்க்கும் பெண்கள் ஏராளம். இனியும் இப்படி இல்லாமல் இதை கவனிப்பது அவசியம். நாட்கணக்காக உங்கள் வீட்டுப் பெண்கள் சொல்லிப் புலம்புகிறார்கள் எனில் இனியும் தாமதிக்காமல் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைக்கொடுங்கள்.அதேபோல் ஆண்களைக் காட்டிலும் பெண்களுத்தான் அதிகமாக தைராய்டு பிரச்னை வருவதாக ஆய்வுகளிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கருத்தடை, மாதவிடாய் நிற்றல் , மார்பகப் புற்றுநோய், திடீரென உடல் எடை அதிகரித்தல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற உடல்நலப் பிரச்னைகள் பெண்களையே அதிகம் தாக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களுக்கு உரிய மருத்துவம் அளியுங்கள். இதுவரை அவர்களுக்கு எதுவும் இல்லை என்றாலும் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

 

இதைத் தொடர்ந்து தினசரி உடற்பயிற்சி, அடிக்கடி முழு உடல் பரிசோதனை அவசியம். அடுத்ததாக அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம், தனிமையை நாடுதல், கவனமின்மை, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என அர்த்தம். இது பெண்களின் உடல் ஹார்மோன்களில் அடிக்கடி நிகழும் மாற்றங்களால் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் பிரச்னை என்ன என்பதை பேசி அதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதும் உங்கள் பொருப்புதான் என்பதை மறவாதீர்கள்.செக்ஸ் வாழ்க்கையில் திடீரென நாட்டமின்மை அல்லது உடலுறவில் திருப்தியின்மை என பாலியல் தொடர்பான பிரச்னைகளை அவர்கள் வெளிப்படையாக உங்களிடம் பேசாமல் இருக்கலாம். கணவராகிய நீங்கள் இந்த பிரச்னையை உணர்ந்தால் உடனே அதற்கு தீர்வு காணுங்கள். அதேபோல் குழந்தை வேண்டாம் என முடிவு செய்தால் கருத்தடை உபகரணங்களை பயன்படுத்துங்கள். இதனால் தேவையற்ற கரு உருவாதல் , கருக்கலைப்பு போன்றவற்றால் பெண்களின் உடலை அச்சுருத்தாதீர்கள். இதனால் அவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.

அடுத்ததாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவர்களின் உணவுப் பழக்கம். பல பெண்கள் வைட்டமின் சத்து குறைபாட்டால், முதுகு வலி, இடுப்பு வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு கால்சியம் சத்து, வைட்டமின் D அவசியம். இப்படி அவர்களின் கர்பப்பை, எலும்பு என ஆரோக்கியத்தை பாதுகாக்கும் காய்கறி , பழங்களை வாங்கிக் கொடுப்பது அவசியம்.

உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த நபர்களின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டும் பெண்களுக்கு திருப்பி நீங்கள் செய்யும் நன்றி அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதுதான். இந்த பெண்கள் தினத்திற்கு அவர்களுக்காகத் தரும் பரிசு உங்கள் அக்கறையாக இருக்கட்டும்..!

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Women's Day

அடுத்த செய்தி