ஆண்டுதோறும் மே 12ஆம் தேதியன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கி வரும் இந்த தேவதைகளை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. நவீன செவிலியர் பணிக்கான நிறுவனராகக் கருதப்படும் ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள் அவர்களின் பிறந்தநாள் அன்று செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.
2022ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தில் , “தலைமைக்கான ஓர் குரல் - சர்வதேச சுகாதார பாதுகாப்புக்கு செவிலியர் பணியில் முதலீடு மற்றும் மரியாதைக்குரிய உரிமைகள்’’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும், அவர்களை காப்பாற்றுவதிலும் ஹீரோவாக செயல்பட்ட மருத்துவர்களைப் போலவே இன்றியமையாத சேவைகளை செய்தவர்கள் இந்த செவிலியர்கள் ஆவர்.
கொரோனா பெருந்தொற்றை மானுட குலம் எதிர்கொள்வதில் செவிலியர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூருவதற்கு இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த அல்லது அருகாமையில் உள்ள செவிலியர்களுக்கு இந்த நாளில் சிறு வாழ்த்து கூறுவதன் மூலமாக அவர்களது சேவைகளை நீங்கள் கௌரவிக்கலாம்.
கொரோனா தடுப்புப் பணியில் செவிலியர்களின் பங்கு :
பல தலைமுறைகளாக ஓய்வின்றி உழைப்பவர்கள் தான் இந்த செவிலியர் சமூகம் ஆகும். தங்களது உடல் நலனை தியாகம் செய்து உன்னதமான பணியினை அவர்கள் செய்து வருகின்றனர். அதே சமயம், செவிலியர்களின் போராட்டங்கள் மற்றும் உடல் ரீதியான சவால்கள் குறித்து யாரும் பெரிதாகப் பாராட்டுவதில்லை. ஆனால், மருத்துவக் கட்டமைப்புக்கு செவிலியர்கள் வழங்கியுள்ள பங்களிப்பை அங்கீகரித்து, பாராட்டுவது நமது கடமை ஆகும்.
சர்வதேச அளவில் கொரோனா தடுப்பு பணிகளின் போது செவிலியர்கள் நிறைய சுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தங்களின் பாதுகாப்பு குறித்து சிறிதும் கவலைப்படாமல் எந்த நேரமும் மருத்துவர்கள் உடன் வலம் வந்தனர். சர்வதேச அளவில் பெரும் எண்ணிக்கையில் மனித உயிர்களை கொரோனா பலி வாங்கிக் கொண்டிருந்த போதிலும், செவிலியர்கள் தங்கள் பணியில் இருந்து பின்வாங்கவில்லை.
துன்பத்திலும், துயரத்திலும் உள்ள நோயாளிகளைக் காப்பாற்றவும், அவர்களுக்கு மன ரீதியாக ஊக்கம் அளிக்கவும் தங்களுடைய பணி கடமைகளைத் தாண்டியிலும் பெரும் சிரமமேற்கொண்டு சேவை செய்தவர்கள் செவிலியர்கள் ஆவர். கொரோனாவை எதிர்கொள்ளும் மன உறுதியை நோயாளிகளுக்கு கொடுத்தவர்கள் செவிலியர்களே.
கொரோனாவிலிருந்து தப்பிக்க மீண்டும் ’டபுள் மாஸ்கிங்’ அவசியமா..?ஆய்வு சொல்வது என்ன..?
உற்சாகப்படுத்திய செவிலியர்கள்
கொரோனா நோயாளிகளை குணப்படுத்த வெறுமனே மருந்தும், பராமரிப்பும் கொடுத்த கைகளோடு செவிலியர்களின் பணி முடிந்துவிடவில்லை. நோயாளிகளுக்கு மன உறுதியை வழங்கவும், அவர்களது கவலைகளை நீக்கி ஊக்கம் அளிக்கவும் புதுமையான முயற்சிகள் பலவற்றை சுய சிந்தனையில் மேற்கொண்டார்கள்.
உதாரணத்திற்கு குஜராத் மாநிலத்தில், கொரோனா வார்டு ஒன்றில் நோயாளிகளின் கவலைகளை மறக்கச் செய்யும் வகையில், கொரோனா பாதுகாப்பு கவச உடைகளுடன் பாலிவுட் திரைப்பட பாடல்களுக்கு செவிலியர்கள் நடனமாடினர்.
கொரோனாவை முறியடித்த போராளிகள்
உலகெங்கிலும் தடுப்பூசி செலுத்துவதில் செவிலியர்களின் பங்கு முக்கியமானது. இன்றைக்கு கொரோனா ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்திருப்பதற்கு அவர்களது அயராத பணிகளே காரணம் ஆகும். கொரோனா மட்டுமல்லாமல் வேறெந்த பெருந்தொற்று நோய்க்காலம் வந்தாலும் அதை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள் செவிலியர்கள். ஆக, ஒவ்வொரு நாடும் செவிலியர் கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டும். பொதுமக்களும் கூட தங்களால் இயன்ற அளவுக்கு செவிலியர்களின் சேவைகளை போற்றிப் புகழலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Health, Nurse