International Nurses Day 2021: கொரோனா அபாயத்தில் இருந்து நம்மை காக்கும் ஹீரோக்களை கொண்டாடி வரும் மக்கள்!

சர்வதேச செவிலியர் தினம்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக சுகாதார ஊழியர்களில் பாதிக்கும் மேலானவர்கள் செவிலியர்கள் தான், இருப்பினும் கூட உலகளவில் 5.9 மில்லியன் செவிலியர்களின் பற்றாக்குறை இருப்பதாக WHO தெரிவித்துள்ளது.

  • Share this:
சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.1965-ம் ஆண்டு உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை முதன்முதலாக கொண்டாடியது. பின்னர், 1974ம் ஆண்டில் இருந்து இந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.

உலகின் மிகவும் பிரபலமான செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேலை கொண்டாடும் விதமாக அவர் பிறந்த தினம் சர்வதேச செவியலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1820ம் ஆண்டு மே 12ம் தேதி பிறந்தார். இங்கிலாந்தில் ஆண்டு தோறும் இன்றைய தினத்தில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.

இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. முதன்முதலில் நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். இந்தப் போரின்போது அவர் கடைப்பிடித்த நோயாளிகள் பராமரிப்பு சார்ந்த வழிமுறைகளும், நெறிமுறைகளும் இன்றளவும் மருத்துவ உலகால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. லண்டனில் 1860ம் ஆண்டு நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.

International Nurses Day 2021 : செவிலியர்களின் சேவை மகத்தானது...ஏன் தெரியுமா..?

கிரிமியன் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையில் கையில் விளக்குடன் வலம் வந்து சேவை அளித்ததற்காக 'கை விளக்கேந்திய காரிகை' (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்டார். அவரது தன்னலமற்ற சேவை காரணமாக, செவிலியர் பணி மிகுந்த மதிப்புடன் பார்க்கப்படும் நிலை உண்டானது. நைட்டிங்கேல் காட்டிய பாதையில் தொடர்ந்து செவிலியர்கள் மனித வடிவிலான தேவதைகளாக மருத்துவமனைகளில் சேவை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மற்ற செவிலியர்கள் மற்றும் மக்களால் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் மற்ற ஆண்டுகளை போல் அல்லாமல் இந்த ஆண்டு சர்வதேச செவிலியர் தினம் அதிக வரவேற்பையும், மதிப்பையும் பெற்றுள்ளது. அதற்கு காரணம் கொரோனா எனும் கொடிய வைரஸ். கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் செவிலியர்கள் தினசரி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை காப்பாற்றி வருகின்றனர். COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் செவிலியர்கள் முன்னணியில் உள்ளனர். மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களைப் போலவே, செவிலியர்களும் தொடர்ச்சியாக உயர் தரமான பராமரிப்பை வழங்குகிறார்கள்.அவர்களின் இந்த அயராத பணி கடவுளுக்கு ஈடானது. தற்போது வரை மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளின் முதுகெலும்பாக இருக்கும் செவிலியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மில்லியன் கணக்கான கொரோனா நோயாளிகளை பல மாதங்களாக காப்பாற்றி வருகின்றனர். இப்பேற்பட்ட முன்கள பணியாளர்களை இந்த தினத்தில் போற்றி கொண்டாடுவதே சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் செவிலியர்களின் சேவைக்கு எண்ணற்ற பிரபலங்களும், தேசிய தலைவர்களும், மக்களும், இணையவாசிகளும் மரியாதையையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக சுகாதார ஊழியர்களில் பாதிக்கும் மேலானவர்கள் செவிலியர்கள் தான், இருப்பினும் கூட உலகளவில் 5.9 மில்லியன் செவிலியர்களின் பற்றாக்குறை இருப்பதாக WHO தெரிவித்துள்ளது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இந்த தேவை அதிகம் காணப்படுகிறது.

சர்வதேச நர்சிங் தினத்தின் தீம்:

இந்த ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்திற்கான கருப்பொருள் "செவிலியர்கள்: வழிநடத்த ஒரு குரல் - எதிர்கால சுகாதாரத்துக்கான பார்வை" (Nurses: A Voice to Lead - A Vision for Future Healthcare) என்பதாகும். COVID 19 க்கு இடையில், உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டி வருகின்றனர். மற்றவர்களைக் கவனிப்பதற்காக தனிப்பட்ட தங்களது உயிரை தியாகம் செய்கின்றனர். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "புதன்கிழமை சர்வதேச செவிலியர் தினத்திலும், பின் வரும் ஒவ்வொரு நாளும் ஒற்றுமையைக் காட்டுங்கள் ”என்று வெளியிட்டுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published: