• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உணவுப் பற்றாக்குறை மன அழுத்தத்துக்கு வழிவகுக்குமா? ஆய்வில் தெரிவிக்கும் முக்கிய தகவல் என்ன?

உணவுப் பற்றாக்குறை மன அழுத்தத்துக்கு வழிவகுக்குமா? ஆய்வில் தெரிவிக்கும் முக்கிய தகவல் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

உணவுப் பற்றாக்குறையால் ஏற்படும் மன அழுத்தம், கடந்த காலங்களில் இத்தகைய அளவில் இல்லை எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

  • Share this:
கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு உணவுப் பற்றாக்குறையும் ஒரு காரணம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா என்ற ஒற்றை வார்த்தை கடந்த ஓராண்டில் நாம் எதிர்கொண்ட அத்தனை சவால்களுக்கும் காரணம். பொருளாதாரம் பாதிப்பு, வேலை இழப்பு, நிதி நெருக்கடி, ஒருவேளை உணவுக்கு தள்ளாட வேண்டிய நிலை, மன நலம் பாதிப்பு என எத்தனை எத்தனை பிரச்சனைகள். கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸின் தீவிரம் இன்றளவும் குறையவில்லை. மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை.

முதல் அலை கொரோனா வைரஸ் பரவலைக் கூட கட்டுபடுத்த முடியாமல் உலகம் தவித்து வரும் நிலையில், 2.0 என உருமாறிய கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டமாக வெளி நாடுகளில் பரவத்தொடங்கி உள்ளது. இந்தப் பாதிப்புகளில் இருந்து எப்போது மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவோம் என பலரும் உச்சக்கட்ட கவலையில் இருக்கின்றனர். காரணம், கொரோனா ஏற்படுத்திய தாக்கம், வார்த்தையில் சொல்ல முடியாத, அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடிய அத்தகைய வலியைக் கொடுத்துள்ளது.

கொரோனா ஏற்படுத்திய இறுக்கமான சூழல் காரணமாக, பலரும் மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகிய பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். பொருளாதாரம், நிதி நெருக்கடி, வேலை பளு ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், உணவு ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துமா? என என்றாவது யோசித்து பார்த்திருக்கிறோமா?. ஆனால், கொரோனா காலத்தில் உணவுப் பற்றாக்குறையும் மன அழுத்தத்துக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



வேலை இல்லாததால், வருமானம் இல்லை. இதனால், வீட்டிற்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்க முடியாத சூழல். இந்த நிலை பலருக்கும் மன அழுத்தத்தையும், ஒருவித பதட்டத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்க ஜொர்னல் ஆப் பிரிவென்டிவ் மெடிசின் (American Journal of Preventive Medicine) இதழில் வெளியாகியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற காலங்களை விட கொரோனா காலத்தில் அதிகப்படியான மன அழுத்தம் மக்களுக்கு ஏற்பட்டதாகவும், அதில் 25 விழுக்காடு மன அழுத்தம் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் ஏற்படும் மன அழுத்தம், கடந்த காலங்களில் இத்தகைய அளவில் இல்லை எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. மேலும், "இலவசமாக கொடுக்கப்பட்ட உணவுகள், இதர அத்தியாவசியப் பொருட்கள் மக்களிடையே இத்தகைய மன அழுத்தத்தை குறைத்திருப்பதாகவும்" ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், குழந்தை மருத்துவத்துறையின் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேசன் நகாட்டா (Jason Nagata) பேசும்போது, உலகளவில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.

முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவிய வூஹான் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது!

வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் வறுமையின் அளவு உட்சபட்ச நிலையை எட்டியிருப்பதாக தெரிவித்தார். கடந்த ஆண்டில் மன அழுத்தம் தொடர்பாக 63, 647 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 65 விழுக்காட்டினர் கவலையுடன் இருந்ததாகவும், 52 விழுக்காட்டினருக்கு மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசி, போதுமான அளவு உணவு இல்லாமை ஆகிய காரணங்களும் அவர்களின் மன அழுத்தத்துக்கு காரணமாக இருந்துள்ளது.



இதுபோன்ற மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்போது, இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விரைவாக வெளியே வந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறியுள்ளனர். அத்தியாவசிய தேவையான உணவு தட்டுபாடில்லாமல் கிடைக்கும்போது அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கு உணவுப் பற்றாக்குறை இல்லை என்ற திருப்தி இருக்கும்போது, ஒருவர் தன்னுடைய வேலைகளில் இயல்பாக கவனம் செலுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை மற்றும் வறுமையைப் போக்க இந்தியா உள்ளிட்ட அனைத்து நாட்டு அரசுகளும், உணவு சார்ந்த திட்டங்களிலும், அத்தியாவசியப் பொருட்கள் குறைந்தவிலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் அதற்கேற்ப திட்டங்களை வகுத்து ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: