ஜெயா தன்னுடைய தாயுடன் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தார் தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தில் இருக்கிறார். கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டிய பரிசோதனைகளை முடித்து, முடிவுகளை காண்பிப்பதற்காக வந்திருந்தார்.
ஜெயாவிற்கு ஏற்கனவே தைராய்டு குறைபாடு இருப்பதால் தைராய்டு மாத்திரை 100 மைக்ரோ கிராம் அளவு தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தார்.
அவருடைய பரிசோதனை முடிவுகளை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தேன். அதில் தைராய்டு மூன்று அளவீடுகளாக பார்க்கப்பட்டிருந்தது மூன்றுமே, தைராய்டு நம் உடல் தேவையான அளவு இருக்கிறதா என்பதை சொல்லக்கூடியவை.
இதில் டி3(T3), டி4 (T4)ஆகியவை தைராய்டு ஹார்மோன்கள். டி எஸ் ஹெச் ( TSH ) என்பது தைராய்டை சுரக்க வைக்கும் ஹார்மோன் ஆகும்.
ஜெயாவிற்கு தைராய்டு மூன்று அளவுகளுமே சரியாக இருந்தன.
இப்போது ஜெயா கேட்டார். "டாக்டர்!! எல்லா அளவும் கரெக்டா இருக்கு. அப்ப நான் மாத்திரை நிறுத்திடலாமா? எதற்காக மாத்திரை சாப்பிடணும்?
என் பதில்: எல்லோரும் பொதுவாக செய்யக்கூடிய தவறு இதுதான். தைராய்டு அளவை பார்க்கும் போது , சரியாக இருந்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, நாம் சாப்பிடும் மாத்திரையின் அளவு போதுமானது என்பதே.
தைராய்டு மாத்திரை பொதுவாக 100 மாத்திரைகள் ஒரு டப்பாவில் இருக்கும். இன்னும் சிலர் 100 மாத்திரைகள் முடிந்த பிறகு மாத்திரையை நிறுத்திவிட்டு டெஸ்ட் எடுப்பார்கள். எடுத்துவிட்டு பிறகு தொடரலாமா? இல்லையா? என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று காத்திருப்பார்கள். சிலர் ஒரு மாதம் இரு மாதம் என்று பல மாதங்கள் கூட அவ்வாறு மாத்திரையை நிறுத்தி விடுவார்கள். அதுவும் தவறு . தைராய்டை கண்காணிக்க, மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கும்போதே டெஸ்ட் செய்ய வேண்டும். அது மிக மிக முக்கியம்.
அதுபோல ஒருமுறை தைராய்டு ஹார்மோன் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் பொதுவாக தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்படி இருக்கும் தேவையை பொறுத்து அளவு மாறலாம். மிக மிக குறைந்த அளவு எடுத்துக் கொள்பவர்கள் நிறுத்துவதற்கு வாய்ப்பு உண்டு.
இன்னும் ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் தைராய்டு குறைபாடு உண்டாகும் அவ்வாறு இருந்தால் அவர்கள் கர்ப்ப காலத்தில் தைராய்டு மாத்திரை எடுத்துக்கொண்டு பிரசவமான பிறகும் மாத்திரையை தொடர வேண்டும். ஆனால் பிரசவமான பின் மீண்டும் தைராய்டு டெஸ்ட் எடுத்து பார்த்து அதனுடைய அளவை பொறுத்து மாத்திரையை தொடர்வதா இல்லையா?! என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு முடிவு செய்ய வேண்டும்.
Also Read : கர்ப்ப காலத்தில் ஏன் ஹீமோகுளோபின் அளவை தக்க வைப்பது அவசியம்..? இரத்த சோகை வந்தால் என்ன ஆகும்..?
தைராய்டு ஹார்மோன் ஒரு அனபாலிக் ஹார்மோன் என்று கூறுவோம். அதாவது வளர்ச்சியை கொடுக்கக்கூடிய ஹார்மோன். உடலின் எல்லா வேலைகளுக்கும் இயங்குதலுக்கும் தைராய்டு ஹார்மோன் மிக மிக அவசியமானது. அதனால் தான் தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு சோர்வு, சோம்பல் பசியின்மை, ரத்தம் குறைவு ,உடல் வீக்கம் ,எலும்புகள் வலி ,மூட்டு வலி செரிமான குறைவு, மலம் கட்டுதல் அதிகமான தூக்கம் மற்றும் சோர்வான மனநிலை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உண்டாகலாம்.
பெண்களுக்கு குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைகள் உண்டாகலாம் அவர்களுக்கு கர்ப்பம் அடைவதும் தாமதமாகும். அதுபோல கர்ப்பிணி தாய்க்கு தைராய்டு மிக மிக அவசியம் அவருடைய உடல் இயங்குதலுக்கு மட்டுமல்லாமல் குழந்தையின் வளர்ச்சிக்கும் மிக அவசியம். அதனால் தான் கர்ப்ப காலத்தில் சிறிதளவு தைராய்டு குறைபாடு இருந்தாலும் அதை சரி செய்ய வேண்டும்.
அதுபோல கர்ப்ப காலத்தில் தைராய்ட் டெஸ்ட் எடுக்கும் பொழுது முக்கியமாக பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. சாதாரணமாக தைராய்டு ஹார்மோன் டெஸ்ட் முடிவுகளுக்கும் கர்ப்ப காலத்தில் எடுக்கும் முடிவுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை பிரக்னன்சி ஸ்பெசிவிக் ரேஞ்ச் என்று கூறுவோம்.
அதாவது கர்ப்பமில்லாத நிலையில் TSH-5 என்பது சரியான அளவாகும். கர்ப்ப காலத்தில் எந்த மாதத்திலும் 3.5 தான் சரியான அளவாகும். அதற்கு மேலே இருந்தால் அவர்களுக்கு தைராய்டு மாத்திரைகள் தேவை . இதையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் பல கர்ப்பிணி பெண்களும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரும் பொழுது அதற்கு அருகிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் லேப் நார்மல்( lab normal) எனப்படும் அளவுகளை பார்த்து எனக்கு சரியாகத்தான் இருக்கிறது நான் எதற்கு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள். கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் தைராய்டு அளவு பிரக்னன்சி ஸ்பெசிபிக் ரேஞ்ச்( pregnancy specific range) எனப்படும் தனியாக உள்ள அளவுகளோடு தான் ஒப்பிட வேண்டும்.
Also Read : கர்ப்பிணிகள் அடிக்கடி ஸ்கேன் செய்வது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா..?
அதுபோலவே கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திலும் தைராய்டு ஹார்மோன் அளவை பரிசோதனை செய்வது அவசியமாகும். தேவைப்பட்டால் மருந்தினுடைய அளவை மாற்ற வேண்டி இருக்கலாம்.
"நன்றாக புரிந்தது, டாக்டர்!! நான் தைராய்டு மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வேன். விரிவாக நீங்கள் ஆலோசனை கூறியது நல்ல தெளிவை கொடுத்தது. மிக்க நன்றி!" என்று கூறி இருவரும் விடைபெற்றனர்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Pregnancy changes, Thyroid, பெண்குயின் கார்னர்