முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பழுதடைந்த இதயத்தை சீரமைக்க கார்டியாக் புரதம் - கௌஹாத்தி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

பழுதடைந்த இதயத்தை சீரமைக்க கார்டியாக் புரதம் - கௌஹாத்தி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

கார்டியாக் புரதம்

கார்டியாக் புரதம்

மனிதர்களுக்கு இதய செல்கள் பாதிப்பு அடையும்போது, புதிய செல்கள் உருவாகுவதற்குப் பதிலாக பழுதடைந்த செல்கள் வடுக்களாக மாறி விடுகின்றன

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கௌஹாத்தி ஐஐடி தொழில்நுட்பக் கழகத்தில், உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் துறையின் உதவி பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர் ராஜ்குமார் பி தும்மர், அவரது ஆராய்ச்சி உதவியாளர் கிருஷ்ண குமார் ஹரிதாஸ்பளவன் ஆகியோர் இணைந்து இதய நலனை மேம்படுத்துவதற்கான புதிய தீர்வுகளை கண்டறிந்துள்ளனர்.

ஒரு நபரின் ஆரோக்கியமான சரும செல்கள் அல்லது வேறு ஏதேனும் சொமேடிக் செல்களை எடுத்து, அவற்றை இதய செல்களாக மாற்றம் செய்யத் தகுந்த 6 விதமான சிறப்பு புரதங்களை இவர்கள் கண்டறிந்துள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள இதய செல்களானது, ஒரிஜினல் இதய செல்களைப் போலவே செயல்படுகின்றன.

குறிப்பாக, பழுதடைந்த இதய செல்களை அவை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதன்படி ஆரோக்கியமான இதய செல்களை ஆய்வகத்திலேயே உருவாக்க முடியும்.

இதயத்தின் ஒரு பகுதி பாதிக்கப்படும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். அதே சமயம், வரிக்குதிரை மீன் போன்ற சில விலங்குகளை பொருத்தவரையில், பழுதடைந்த இதய செல்கள் மீண்டும் வளர்ச்சி அடைகின்றன. ஆனால், மனிதர்களுக்கு இதய செல்கள் பாதிப்பு அடையும்போது, புதிய செல்கள் உருவாகுவதற்குப் பதிலாக பழுதடைந்த செல்கள் வடுக்களாக மாறி விடுகின்றன.

மனிதர்களைப் பொருத்தவரையில் இதய நோய்க்கான ஒரே தீர்வு என்பது இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. அதிலும், உறுப்பு மாற்று சிகிச்சைக்கு போதுமான அளவில் இதயம் கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாமல் வேறொரு நபரின் இதயத்தை எடுத்து ஒருவருக்குப் பொருத்தும்போது, அந்த வெளி உறுப்பை அவரது உடல் ஏற்றுக் கொள்ள நீண்ட காலம் பிடிக்கிறது.

இதையடுத்து, மனித உடல்களில் உள்ள பொதுவான செல்களை இதய செல்களாக மாற்றுவது தொடர்பாக உலக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவ்வாறு மாற்றப்படும் செல்கள் ஆபத்தானவையாக இருப்பதே பெரும் சவாலுக்குரிய விஷயமாக உள்ளது. இதனால், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதே சமயம், வேறொரு ஆதாரங்களின் மூலமாக நமக்கு கிடைக்கப் பெறும் புரதங்களைக் கொண்டு, தேவையான செல்களாக மாற்றிக் கொள்ளத் தகுந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு பெயர் செல்லூலார் ரீப்ரோகிராமிங் ஆகும். இதில், குறிப்பிட்ட சில புரதங்கள், செல்களின் மரபுகளில் வினை புரிந்து, அவற்றை புதிய செல்களாக உருவாக்குகின்றன.

ஐஐடி வெற்றி

மனிதர்களின் சரும செல்களை எடுத்து இதய செல்களாக மாற்றும் உத்தியை கௌஹாத்தி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலான குழுவானது, கர்நாடகாவில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சிப் பிரிவை சேர்ந்த மருத்துவர் விஸ்வாஸ் காவீஷ்வருடன் இணைந்து பணியாற்றி இந்த முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

Also Read : Heart Disease : இதய நோய் ஏன் வருகிறது..? தடுப்பதற்கான வழிகள் என்ன..?

இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில், “புரத அடிப்படையிலான செல் மீட்டுருவாக்க நடவடிக்கை என்பது மற்ற அணுகுறைகளைக் காட்டிலும், மாற்று சிந்தனை கொண்ட பாதுகாப்பான நடவடிக்கையாக அமைகிறது. இந்த புரதங்கள் ஏற்கனவே உள்ள செல்களின் ஜெனோம்களை மாற்றாது. இதற்குப் பதிலாக அவற்றை உயர் தர மதிப்பு கொண்டதாக மீட்டுருவாக்கம் செய்யும்’’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Heart disease, Heart Failure, Heart health