நித்யா அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தார். அழகு கலை நிபுணர். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார் . அன்று இரண்டாவது மாத ஸ்கேன் செய்ய வருமாறு கூறியிருந்தேன்.
எனக்கு ஒரு முக்கியமான சந்தேகம் இருக்கிறது என்று கூறினார் நித்யா.
"டாக்டர்! எனக்கு யூரின் டெஸ்ட் பார்த்து கன்பார்ம் ஆனதிலிருந்து இப்ப வரைக்கும் வாந்தி இல்லை. தலை சுத்தலும் இல்லை. உண்மையில் நான் கர்ப்பமா இருக்கேனான்னு எனக்கே டவுட்டா இருக்கு. வீட்ல இருக்குறவங்களும் கூட வாந்தி இல்லாம இருக்க கூடாது " ன்னு சொல்றாங்க. குழந்தை வளராது, குழந்தை தலைல முடி இருக்காது, அப்படின்னு சொல்றாங்க. இப்ப எனக்கு அது ஒரு பெரிய கவலையா இருக்கு. வாந்தி இல்லைனா குழந்தைக்கு ஏதாவது பாதிக்குமா ? " என்று கேட்டார்.
ஸ்கேன் செய்தேன். கருவின் வளர்ச்சி தக்கவாறு இருப்பதை உறுதி செய்ததும் நித்யாவின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியது.
என் ஆலோசனை:
கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியில் இருந்து வரக்கூடிய ஹார்மோன்களால் வாந்தி உணர்வு ஏற்படுகிறது . அந்த ஹார்மோன்களுடைய அளவும் வார வாரம் மாறிக்கொண்டே வரும். அதுபோல ஒவ்வொரு குழந்தைக்கும் சுரக்கக்கூடிய அளவு மாறுபடும். அது மட்டுமல்லாமல் அதன் பாதிப்பு ஒன்று போல இருக்காது. இது போன்ற பல்வேறு காரணங்களால் வாந்தி உணர்வு ,வாந்தி, குமட்டல் , தலை சுற்றல் போன்றவை கர்ப்ப காலத்தில் மிகவும் பொதுவான அறிகுறிகள் என்றாலும் அனைவருக்கும் ஒரே அளவாக இருப்பதில்லை.
ஒரே தாய்க்கே இரண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் மாறுபட்டு இருக்கலாம். இந்த அறிகுறிகள் கர்ப்பத்தை உறுதி செய்வதோ அல்லது கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சியையோ எந்த விதத்திலும் சுட்டிக்காட்டுவதில்லை.
அதனால் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் காண்பிப்பது போல இவற்றை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்யவும் முடியாது. கர்ப்ப காலத்தை கணிக்கவும் முடியாது அல்லது வேறு எந்த விதத்திலும் இவை நமக்கு பயன்படுவதில்லை. அத்துடன் வேலைக்கு செல்லும் தாய்க்கு கவனம் வேலையில் இருப்பதால் பல சமயங்களில் வேலை செய்யும் நேரத்தில் வாந்தி வராமல் இருக்கலாம். மற்ற நேரத்தில் மட்டுமே இருக்கிறது என்றும் கூறுவர் .
ஒரு சிலருக்கு கர்ப்பம் என்று தெரியாத வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு பிரச்சனைகள் துவங்கும். இது எல்லாமே கர்ப்ப காலத்தில் பொதுவாக நடக்கக் கூடியவை தான்.
Also Read : கர்ப்பக்காலத்தில் விட்டமின் டி3 பரிசோதனை ஏன் அவசியம்..?
"எனவே நித்யா! வாந்தி இல்லாமல் இருப்பதால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை பயப்படத் தேவையில்லை" என்று கூறினேன்.
நித்யா "இப்போதுதான் மனது தெளிவானது டாக்டர்! வாந்தி இல்லை என்றால் குழந்தை வளர்ச்சி இருக்காது. என்று சொன்னதால் மிகவும் குழம்பி விட்டேன். இப்போதுதான் புரிகிறது. மிக்க நன்றி!" அடுத்த செக்கப்பிற்கு எப்ப வரணும் டாக்டர்?! "என்றார். இரண்டு வாரங்கள் கழித்து வருமாறு கூறினேன். வேலைகளை தொடர்ந்தேன்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy Sickness, Pregnancy Symptoms, Vomiting, பெண்குயின் கார்னர்