பற்களை சுத்தம் செய்ய ஆயுர்வேத முறையில் உள்ள வழிமுறைகள் என்னென்ன..?

பற்களை சுத்தம் செய்ய ஆயுர்வேத முறையில் உள்ள வழிமுறைகள் என்னென்ன..?

பற்களை சுத்தம் செய்ய ஆயுர்வேத முறை

ஆயுர்வேத சிகிச்சையை பின்பற்றுபவர்கள் பல் சிதைவு பிரச்சினையால் பாதிக்கப்படுவது குறைவு என்று ஆயுர்வேத வல்லுநர்கள் கூறுகின்றனர். 

  • Share this:
நம்முடைய உடல் நலனில் வாய்வழி ஆரோக்கியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாய்வழி சுகாதாரத்தை கடைபிடிக்க ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்கவேண்டும். உங்க பற்களை வலுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் சரியாக சுத்தம் செய்ய வேண்டும். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்ற சொல்லை மக்கள் பண்டைய காலங்களில் பயன்படுத்துவர்.

இதற்கு பொருள் ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும் பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது தான். பற்களை சுத்தம் செய்ய வேப்பிலை குச்சிகளையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இப்படி ஆயுர்வேத முறைப்படி பல் துலக்குவதற்கும், நவீன வாய்வழி சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஏனெனில் ஆயுர்வேத சிகிச்சையை பின்பற்றுபவர்கள் பல் சிதைவு பிரச்சினையால் பாதிக்கப்படுவது குறைவு என்று ஆயுர்வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பண்டைய முறை சிறந்ததா?

பண்டைய காலங்களில் மக்கள் பற்களை சுத்தம் செய்ய வேப்பிலை செடிகளின் கிளைகளை பயன்படுத்தி வந்தார்கள். அதன் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் வாயில் கிருமிகளை நீக்கவும், வாயை ஆரோக்கியமாக வைக்கவும் உதவியது. இந்த மூலிகைகளின் மூலம் வாயிலிருந்து துர்நாற்றத்தையும், நச்சுக்களையும் எதிர்த்து போராட முடியும். அந்த வகையில் பார்க்கும் போது ஆலமர குச்சி, வேலமர குச்சி, வேப்பங்குச்சி, மற்றும் மா மர குச்சி போன்ற மரங்களின் கிளைகள் வாய்வழி சுகாதாரத்திற்கு பயன்படுகின்றன.குச்சிகளை வைத்து எப்படி பல் தேய்ப்பது?

நாம் எளிதாக பிடித்துக் கொள்ளும் வகையில் கைக்கு அடக்கமான நீளமுள்ள மற்றும் விரல் தடிமனுள்ள ஒரு தாவரக் குச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மேல் நுனியை பற்களால் கடித்து நசுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்தப் பகுதி ப்ரஷ் அல்லது தூாிகை போல மாறும். அதைக் கொண்டு மெதுவாக பல் தேய்க்கலாம்.

மூலிகை பற்பசையா...

இப்போது பலவகையான பற்பசைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. அவை தாவரக் குச்சிகள் அளிக்கும் பலன்களை அளிப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதோடு மூலிகை பற்பசைகளும் கிடைக்கின்றன. மூலிகை பற்பசைகள் மூலிகைத் தாவரங்களில் இருந்து தயாாிக்கப்படுவதாலும் மற்றும் அவற்றில் வேதிப் பொருட்கள் இல்லாததாலும், அவற்றை வைத்து நாம் பல் தேய்க்கலாம். மற்ற நவீன பற்பசைகளை விட மூலிகை பற்பசைகள் மிகவும் நல்லது.பல் துலக்குவதற்கான சரியான வழி:

மருத்துவர்களின் அறிவுரையின் படி, குறைந்தது 2 நிமிடங்களாவது முறையாக பல் தேய்க்க வேண்டும். உயரம் குறைந்த மற்றும் அதிக தடிமனில்லாத குச்சிகள் கொண்டு வாயின் மூலை முடுக்கு எல்லாம் மென்மையாகத் தேய்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக பற்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தேய்க்க வேண்டும். மேலும் குச்சிகளை மேலும் கீழுமாக வட்ட வடிவில் அசைத்து பற்களை சுத்தமாக தேய்க்க வேண்டும். தேய்த்துவிட்டு வெளிவரும் எச்சிலை வெளியே துவிட வேண்டும். இதைபோல் காலையிலும் மாலையிலும் நாம் தொடர்ந்து செய்யவேண்டும்.

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவினால் தலைமுடிப் பிரச்னையே இருக்காதா...

நாக்கை சுத்தம் செய்யும் முறை:

ஆயுர்வேதம் கூட பல் துலக்கிய உடனே உங்கள் நாக்கை சுத்தம் செய்ய பரிந்துரைக்கிறது. எனவே நீங்கள் நாக்கை சுத்தம் செய்ய ஸ்க்ரப்பிங் முறையை பயன்படுத்தலாம். இது அழுக்கு மற்றும் பூச்சு போன்றவற்றை நாக்கிலிருந்து அகற்ற உதவுவதோடு துர்நாற்றத்தை போக்குகிறது. இதை நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.பற்களுக்கான ஆயுர்வேத சிகிச்சைகள்:

வாய் துர்நாற்றம் :

எலுமிச்சை சாற்றை கொண்டு வாய்க்கொப்பளிக்கலாம், பற்களின் ஆரோக்கியத்திற்கு வெந்தய டீ மிகவும் நல்லது. இதனுடன் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

பற்களின் மஞ்சள் நிறமும் அசுத்தமான பற்களும்:

பற்களின் மஞ்சள் நிறம் இருந்தால் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும். இதற்கு உப்பும் எலுமிச்சையும் கலந்த கலவையால் பல் துலக்கவேண்டும். இரவு படுக்கப்போகுமுன் ஆரஞ்சு பழத்தோலை பற்களின் மீது தேய்ப்பது பற்களை வெண்மையடைய செய்யலாம்.பற்சிதைவு :

பால் தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. அதனுடன் பச்சை காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு, மஞ்சள் தூள் நல்லெண்ணெய் ஆகியவற்றின் கலவையால் தினமும் இரண்டு முறை பல் துலக்கினால் பற்சிதைவிலிருந்து நல்ல பலன் கிடைக்கும். மிதமான வெந்நீரில் அரை டீஸ்பூன் கல்லுப்பைக்கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.

ஒருவரை பார்த்த கணமே நம்மை ஈர்ப்பது அவரின் முகம் தான். அந்த வகையில் முகத்திற்கே பின்புறத்திலிருந்து சப்போர்ட் செய்வது வாயிலிருக்கும் பற்கள் தான். அந்த வகையில் வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அதற்கு மேற்சொன்ன ஆயுர்வேத டிப்ஸ்களை பின்பற்றி வாய் சுகாதாரத்தை பின்பற்றுங்கள். நீங்கள் பின்பற்றுவது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்திற்கே இதை ஒரு வழக்கமாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: