ஏதோ சில காரணங்களால் பார்வை திறன் பாதிக்கப்பட்டு, அதற்காக கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அதற்கு பிறகான காலத்தில் கண்களின் ஆரோக்கியம் குறித்து மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். பொதுவாக கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அன்றைய தினமே வீட்டுக்கு திரும்பி விடலாம்.
ஆனால், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே மருத்துவமனை படுக்கை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். எப்படியாகினும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண்களுக்கு பிளாஸ்டிக் ஷீல்டு பொருத்தி அனுப்புவார்கள். அதை ஓரிரு நாளில் அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்.
கண்புரை அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களிலேயே முழுமையான பார்வைத் திறன் திரும்பியதை போன்ற உணர்வு ஏற்படும் என்றாலும் கூட, முழுமையாக குணம் அடைவதற்கு சில நாட்கள் தேவைப்படலாம். மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்றினால் பதற்றம் அடையத் தேவையில்லை.
கண்களில் இருந்து நீர் கசிவது, பார்வை மங்கலாக தெரிவது, இரட்டைப் பார்வை கொண்டிருப்பது, கண்கள் சிவந்து போய் காணப்படுவது என்பதெல்லாம் இயல்பான விஷயங்கள் தான். இவையெல்லாம் குணமடைய சில நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் கூட தேவைப்படலாம். உங்கள் கண்களுக்கு புதிய கண்ணாடி தேவைப்பட்டால் சிகிச்சை முடிந்த 2 முதல் 6 வாரங்களில் மாற்றிக் கொள்ளலாம்.
எப்போது மருத்துவ உதவி தேவை?
கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்கள் பார்வைத் திறன் முழுவதுமாக குறையத் தொடங்குகிறது அல்லது கண்களில் ரத்தச் சிவப்பு மற்றும் வலி போன்ற தொந்தரவுகள் மிகுதியாக இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
என்ன செய்யலாம்?
கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கீழ்காணும் நடவடிக்கைகளை அச்சமின்றி மேற்கொள்ளலாம்..
2 முதல் 3 நாட்களுக்கு ஓய்வெடுக்கவும். பரிந்துரைக்கப்பட்ட கண் மருந்துகளை உபயோகிக்கவும். கண்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ள ஷீல்டுகளை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு இரவில் பயன்படுத்தவும். எப்போதும் போல குளிக்கலாம். புத்தகம் வாசிப்பது, டிவி அல்லது கம்ப்யூட்டர் பார்ப்பதை மிக கட்டுப்பாடுடன் மிதமான அளவில் மேற்கொள்ளலாம்.
வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஷீல்டு அல்லது சன் கிளாஸ் பயன்படுத்தவும். தேவைப்படும் பட்சத்தில் உங்களுக்கான உதவியாளரை வைத்துக் கொள்ளலாம்.
செய்யக் கூடாதவை :
4 முதல் 6 வாரங்களுக்கு நீச்சல் அடிக்கக் கூடாது. மருத்துவர் அறிவுறுத்தும் வரை வாகனங்களை ஓட்டக் கூடாது. மிக முக்கியமாக கண்களை தேய்க்க கூடாது. வீட்டில் கடுமையாக வேலை செய்வது அல்லது பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எதையும் அவசர கதியில் செய்ய வேண்டாம்.
Also Read : கண்புரை அறுவை சிகிச்சையை தாமத்திக்காதீங்க... மருத்துவரின் அட்வைஸ்..!
என்னென்ன கண்காணிப்பு தேவை?
அறுவை சிகிச்சை செய்த கண்ணில் மட்டும் மருந்து விடவும். மருந்துகளை உபயோகிக்கும் முன்பாக கைகளை சுத்தமாக கழுவவும். கண்களை அழுத்தவோ, தேய்க்கவோ கூடாது. நாளொன்றுக்கு இரண்டு முறை கண்ணுக்கு மருந்து போடவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eye care, Eye Problems