முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நெஞ்சில் 'சுருக்'னு வலிக்குதா? மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்.. இதய நோய் குறித்து தெரிஞ்சுக்கோங்க!

நெஞ்சில் 'சுருக்'னு வலிக்குதா? மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்.. இதய நோய் குறித்து தெரிஞ்சுக்கோங்க!

மாரடைப்பு

மாரடைப்பு

Heart Attack : குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட  இதய செயலிழப்பால் இறந்து வருகின்றனர்.

உடலமைப்பில் கட்டுமஸ்தானவர்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். அந்த எண்ணம் தவறானது. விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக இறந்து வருவதை செய்திகளில் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆரோக்கியமானவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதைக்கூட பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் என்ன? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக பலருக்கும் இருக்கிறது. இதய நோய் என்பது திடீரென்றெல்லாம் வருவதில்லை. அது நமக்கு சில அறிகுறிகளையும் கொடுக்கிறது. நெஞ்சில் அடிக்கடி சுருக்கென வலி வருவது, ஒருபக்கம் வலி என சில அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் விடுவதும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

இது குறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் இன்டர்நேஷ்னல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டாக இருக்கும் மருத்துவர் டாக்டர் அமன் மகிஜா பேசும்போது, மாரடைப்பு (Heart Attack) மற்றும் திடீர் இதய பாதிப்பு (Cardiac Arrest) என்பது ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எனத் தெரிவித்துள்ளார். தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஒரு நபருக்கு திடீர் மார்பு வலி, வியர்வை, படபடப்பு மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்படும் என விளக்கம் அளித்துள்ளார். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்று டாக்டர் அமன் மகிஜா கூறியுள்ளார்.

இதய நோய்க்கான காரணங்கள்:

இருதய நோய்களுக்கான முதன்மை காரணம் ஆரோக்கியமற்ற, செயலற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து உள்ளவர்கள், எந்த செயல்பாடும் இல்லாத வாழ்க்கை முறையில் இருந்தால் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை, மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இதயம் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும் இதய நோய்கள் வருவதற்கான காரணங்கள் என கூறும் மருத்துவர்கள், பரம்பரையாக இதய நோய் வருவதற்கும் சாத்தியம் உள்ளதாக கூறுகின்றனர். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, அர்ரித்மியா, கரோனரி இதயநோய் உள்ளிட்டவை பிற இதய நோய்களாகும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க : 

பரம்பரை இருதய நோய் ஆபத்து இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த வாரத்துக்கு மூன்று அல்லது 4 முறை மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிக நேரம் வேலை செய்தல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுபவராக இருந்தால் கூட மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை சமச்சீராக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் இதயம் உள்ளிட்ட பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு, தலைவலி, மார்பு வலி போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. இவை திடீர் மாரடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதுகுறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.
First published:

Tags: Heart attack, Heart disease, Heart Failure, Heart health