Home /News /lifestyle /

கர்ப்பிணிகளே உஷார்...கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க நீங்கள் எடுக்க வேண்டிய சரியான முடிவு இதுதான்..!

கர்ப்பிணிகளே உஷார்...கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க நீங்கள் எடுக்க வேண்டிய சரியான முடிவு இதுதான்..!

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

தொற்றின் தீவிரம் குறையும் வரை சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மிகவும் ‌கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.

சித்ராவும் அவள் மாமியாரும் டாக்டரிடம் ஆறாம் மாதத்திற்குரிய பரிசோதனையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்கள்.  மாமியாருக்கு முகமெங்கும் மகிழ்ச்சி. "எல்லாமே சரியா இருக்குன்னு சொல்லிட்டாங்க." என்று வீட்டில் உள்ள வர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அந்த வீட்டின் முதல் மருமகள் சித்ரா. குடும்பத்தின் முதல் குழந்தையை கருவில் தாங்கியிருந்தார்.வளைகாப்பு மிகவும் விமரிசையாக நடத்த வேண்டும் என்று ஏற்பாடுகளை துவங்கிவிட்டார் மாமியார்.

சித்ரா செய்திகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் ஒரு பயம் இருந்தது. இந்த கொரோனா காலகட்டத்தில் வளைகாப்பு செய்வது பாதுகாப்பானதா???! சரியானதா???! என்று.

அடுத்த வாரம் வளைகாப்பு நடத்தி விடலாம் என்று நாளை குறித்துவிட்டனர். சித்ராவிற்கு கட்டாயம் இது பற்றி தெளிவாக பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. தன்னுடைய டாக்டரிடம் தொலைபேசியில் இதுகுறித்து ஆலோசித்த போது , இதுபோன்ற வளையலணி வைபவங்கள் கொரோனா தொற்றின் ஊற்றாக மாறலாம் என்பதை புரிந்து கொண்டார்.

அடுத்த நாள் செய்தித்தாள்களில் மருத்துவர் ஒருவர் வளைகாப்பு வைபவத்திற்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ஆலோசனை செய்ததில் சித்ராவின் பயம் நியாயமானதாக அனைவருமே உணர்ந்தனர்.

வீட்டிலுள்ளோர் மட்டுமே பங்கேற்று மற்றவர்கள் காணொளி வாயிலாக காணும் வகையில் வளைகாப்பு விழாவை நடத்தினர். தாய்க்கும் சேய்க்கும் தரவேண்டிய பாதுகாப்பை கொடுத்தனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

கொரோணா இரண்டாம் அலையில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் இந்த நோய் தொற்றுக்கு உள்ளாவதைக் காண்கிறோம் . தீவிரநோய் தொற்றுக்கு உள்ளாகி காப்பாற்ற முடியாத நிலைக்கு செல்வதை பார்க்கிறோம்.தொற்றின் தீவிரம் குறையும் வரை சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மிகவும் ‌கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.

1 . கர்ப்பிணி பெண்கள் எதற்காகவும் வெளியே செல்ல வேண்டாம். எத்தகைய பொறுப்பான பதவியில் இருப்பவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

2. வீட்டில் உள்ளவர்களிடம் முடிந்தவரை ஒதுங்கியே இருங்கள். கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்று தனி அறை கொடுப்பது மிகவும் சரியானது.

3. சத்தான உணவு, மனநிம்மதி, தேவையான உறக்கம், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்வது என்று இன்னும் இரண்டு மூன்று மாதங்களை உங்களையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனிக்கும் நேரமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

4. முடிந்தவரை தேவையில்லாத செய்திகளை பார்ப்பதையும் இணையத்தில் தேடுவதையும் தவிருங்கள்.

5. கர்ப்பிணிப் பெண்ணுக்கு தலைவலி,காய்ச்சல், சளி, உடல்வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்6.சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு வேறு எந்த இணை நோய்கள் இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்து அதற்குரிய மாத்திரைகளை எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம்

7.வீட்டில் உள்ள எவருக்கும் சளிக்காய்ச்சல் இருப்பின் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள்

8.வீட்டில் பார்வையாளரையோ, விருந்தினரையோ அனுமதிக்க வேண்டாம்.

9. வீட்டிலுள்ளவர்கள் விசேஷங்களிலோ துக்கங்களிலோ கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சிப்பர் பாட்டில்களில் பால் கொடுத்தால் ஆபத்து : தொகுப்பாளினி நிஷா கூறும் தகவல்..!

10. வளைகாப்பு, பூச்சூட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செய்வதை இந்த காலகட்டத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

11. வீட்டிலுள்ளோர் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள்.

12. கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அனுமதியுடன் கூடிய விரைவில் தடுப்பூசி வழங்கப்படும்.

கொரோனா விதி முறைகளை கடைப்பிடிப்பது நம்மையும் நம் குடும்பத்தாரையும் நம் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாக்கும்.

"வருமுன் காப்போம்
தடுப்பூசிகளை எடுப்போம்
பாதுகாப்பாக இருப்போம்"

 
Published by:Sivaranjani E
First published:

Tags: COVID-19 Second Wave, Pregnancy care

அடுத்த செய்தி