Home /News /lifestyle /

பெண்குயின் கார்னர் 37 : கருத்தரிக்க கருமுட்டை வெளிவரும் நாளை எப்படி கண்டறிவது? அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பெண்குயின் கார்னர் 37 : கருத்தரிக்க கருமுட்டை வெளிவரும் நாளை எப்படி கண்டறிவது? அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

ஒரு மாதத்தில் கருத்தரிக்கும் காலம் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் மட்டுமே. அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் ஏராளமான அறிகுறிகள் உண்டாகலாம் .

சவிதாவும் அவர் தோழியும் அன்று மருத்துவமனையில் காத்துக்கொண்டிருந்தனர்.இருவருமே மென் பொறியாளர்கள்.
வேலை முடிந்து இருவரும் நேராக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் போலும், கழுத்தில் மாட்டி இருந்த அடையாள அட்டையுடன் வந்திருந்தனர். ஜீன்ஸ் அணிந்து லேசான ஒப்பனையுடன் சீர் செய்யப்பட்ட கூந்தலோடு அழகாக இருந்தனர். சவிதாவிற்கு திருமணமாகி ஆகி ஐந்து மாதங்கள் ஆகிறது.

சவிதா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். " டாக்டர்!நான் பேபி வேணும்னு பிளான் பண்றேன். இந்த 4 மாதத்தில் சக்ஸஸ் ஆகல.

எனக்கு கருமுட்டை வெளிவரும் நேரத்தை எப்படி கண்டுபிடிக்கிறது சொல்லுங்க!?. நான் கூகுள் பண்ணி பார்த்ததில, அப்ப பாடி ஹீட் அதிகமாகும். ஒயிட் சார்ஜ் வித்தியாசமாக இருக்கும். வயிற்றில் வலி இருக்கும். இப்படி எல்லாம் போட்டு இருக்கு. ஆனால் நான் செக் பண்ணி பார்க்கிறப்ப, இதுல எதுவுமே எனக்கு இல்ல, டாக்டர்!! எனக்கு கருமுட்டையே இல்லையா? வராதா? இப்ப என்ன செய்யறது?

என் ஆலோசனை:

இணையத்தின் இணையில்லாத பயன்பாட்டுக்கு பிறகு ஏராளமான இளம் பெண்கள் கூகுளில் படித்துவிட்டு ,இல்லாத நோயை தாங்களே உண்டாக்கி கொள்கிறார்கள். பெரும்பாலும் இணையத்தில் இருக்கும் மருத்துவ செய்திகள் தரமற்றதாகவே இருக்கின்றன. அதனால் நான் பொதுவாக மக்களுக்கு சொல்லுவது,

"எதை வேண்டுமானாலும் இணையத்தில் தேடுங்கள், மருத்துவத்திற்கு மட்டும் மருத்துவரையே நாடுங்கள்" என்பது தான்.

ஒரு மாதத்தில் கருத்தரிக்கும் காலம் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் மட்டுமே. அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் ஏராளமான அறிகுறிகள் உண்டாகலாம் . குறிப்பாக உடலின் வெப்பநிலை அரை டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரித்து நீடித்தால் கருமுட்டை வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளை படுதல் தண்ணீர் போல அதிகமாக உண்டாகும். ஒரு சிலருக்கு கருமுட்டை வெளிவரும் நேரத்தில் அடிவயிற்றில் வலி உண்டாகலாம்.மருத்துவரீதியாக மூன்று முறைகளில் கருமுட்டை வெளி வருவதை கண்டறியலாம்.

ஒன்று- ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களின் அளவை பரிசோதிக்கும் போது

இரண்டாவது அல்ட்ராசவுண்ட் மூலமாக கருமுட்டை உருவாவதையும், படிப்படியாக அடுத்தடுத்த தொடர்ந்த ஸ்கேன்களால் கருமுட்டை வெளியாவதையும் கண்டுபிடிக்கலாம்.

மூன்றாவதாக ஓவ்யுலேஷன் கிட் எனப்படும் டெஸ்ட்டுகள் சிறுநீரை உபயோகப்படுத்தி கருமுட்டை வரும் நேரத்தை கண்டறிவதற்கு பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அவை துல்லியமாக இல்லை .ஏராளமான தவறான முடிவுகளை காட்டுவதால் பெரும்பாலும் உபயோகிப்பதில்லை .

கர்ப்பம் தரிக்க செக்ஸ் பொசிஷனும் அவசியமா..?

உடலின் வெப்ப நிலையை வைத்து கண்டுபிடிக்க முயல்வது பெரும்பாலும் கடினமானது. ஏனெனில் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்னர் தரமான ஒரு தெர்மாமீட்டரை வைத்து வெப்பநிலையை அளக்க வேண்டும் . அதனால் இது நடைமுறையில் மிகவும் ஒரு கடினமான முறை. அத்துடன் தூக்கமின்மை ,வேலைப்பளு, மன அழுத்தம் ,லேசான சளி ,காய்ச்சல் வேறு பல பிரச்சினைகள் என்று இந்த வெப்பநிலை மாறுதலில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே இது ஒரு நம்பத்தகுந்த ஒருமுறை அல்ல.இரண்டாவது வெள்ளைப்படுதலும் ஹார்மோன் அளவைப் பொறுத்து மாறுபடும். ஒரு சில மாதங்களில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். அந்த வைத்து கருமுட்டை வெளிவரும் நேரத்தை, கருத்தரிக்கும் காலத்தை கண்டறியலாம் .ஆனால் எல்லா மாதங்களும் அதேபோல இருக்காது. இன்னொன்று ஒரு சில தம்பதியருக்கு தொடர்ந்து தாம்பத்திய உறவு கொள்வதால், வெள்ளை படுதலின் இயல்புத்தன்மை மாறியிருக்கும். அதனால் இதுவும் ஒரு நம்பத்தகுந்த ஒரு பரிசோதனை அல்ல.

100% இன்றுதான் கருமுட்டை வந்தது என்று யாராலும் கூற முடியாது. ஆனால் ஸ்கேன் செய்து பார்க்கும் போது கருமுட்டை வளர்வது மற்றும் வெளி வருவதையும் ஓரளவு 24 மணி நேர இடைவெளியில் கூறமுடியும்.

பெண் குயின் கார்னர் : பரிசோதனையில் கர்ப்பம்... ஸ்கேன் செய்தால் கரு உருவாகவில்லை... என்ன காரணம்..?

அதோடு புதிதாக திருமணமான பெண்களுக்கு மகப்பேறு மருத்துவராக என்னுடைய அறிவுரை என்னவென்றால் முதல் ஒரு வருடம் இது போன்று குறிப்பிட்ட கருமுட்டை வரும் காலம் என்பதை எல்லாம் பார்த்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டாம். பொதுவாக மாதவிடாய் வந்த முதல் ஒரு வாரமும் மாதவிடாய் வரப்போகின்ற கடைசி ஒரு வாரமும் தவிர்த்து நடுவில் உள்ள இரண்டு வாரங்களும் கருத்தரிக்கும் காலமாக கொள்ளலாம் . இந்த இரண்டு வாரங்களில் குறைந்தது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாம்பத்திய உறவு கொள்ளும்பொழுது கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

சவிதாவின் திருப்திக்காக அந்த மாதம் மாதவிடாய் துவக்கத்திலிருந்து ஸ்கேன் செய்து கருமுட்டை வருவதை உறுதி செய்து கொண்டோம். சவிதா விரைவில் கர்ப்பகால பரிசோதனைக்காக வருவார் என்று நம்புகிறேன்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
Published by:Sivaranjani E
First published:

Tags: Ovulation Time, Pregnancy, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி