Home /News /lifestyle /

பெண்களுக்கு ஓவரியன் கேன்சர் வருவதற்கான ஆபத்து காரணிகள் மற்றும் அறிகுறிகள்..!

பெண்களுக்கு ஓவரியன் கேன்சர் வருவதற்கான ஆபத்து காரணிகள் மற்றும் அறிகுறிகள்..!

ஓவரியன் கேன்சர்

ஓவரியன் கேன்சர்

பெண்களின் உயிரை பறிக்கும் முதல் 5 புற்றுநோய்களில், சினைப்பை புற்றுநோயும் உள்ளது.

ஓவரிஸ் (ovaries) அதாவது சினைப்பைகள் ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் ஒரு முக்கிய பகுதி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சினைப்பை புற்றுநோய் (Ovarian Cancer) என்பது பெண்களுக்கு ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்ட பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும்.

பெண்களின் உயிரை பறிக்கும் முதல் 5 புற்றுநோய்களில், சினைப்பை புற்றுநோயும் உள்ளது. நிகழ்தகவின் அடிப்படையில் பார்க்கும் போது 78 பெண்களில் ஒருவருக்கு இந்த கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சினைப்பை புற்றுநோயானது சினைப்பைகளில் உள்ள உயிரணுக்களின் அபரீத வளர்ச்சியால் ஏற்படுகிறது. இது ஆரோக்கியமான திசுக்களை ஆக்கிரமித்து அழிக்க கூடியது. பெண் இனப்பெருக்க அமைப்பில் 2 சினைப்பைகள் (கருப்பைகள்) உள்ளன. ஒவ்வொரு கருப்பையும் முட்டைகளை உற்பத்தி செய்கிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்வதும் கருப்பைகளின் பொறுப்பு.

பெங்களூரு காவேரி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் திவ்யா, ஒரு பெண்ணுக்கு சினைப்பை புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்து காரணிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Ovarian Cancer தற்போது அதிகரித்து கொண்டே வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று கூறியுள்ளார் திவ்யா.



* குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஏற்கனவே Ovarian Cancer-ஆல் பாதிக்கப்பட்டிருப்பது

* உடல் பருமன்

* ஹார்மோன் சிகிச்சை அல்லது கருவுறுதல் மருந்துகள் அதிகம் எடுத்து கொள்வது

* எண்டோமெட்ரியோசிஸ்

* கடந்த காலத்தில் மார்பகம் அல்லது பெருங்குடல் புற்றுநோய் இருந்தது

* தாமத குழந்தைபேறு

உள்ளிட்டவை இவ்வகை புற்றுநோய்க்கான ஆபத்தை காரணிகளாக உள்ளன.



ஓவரி கேன்சரின் பொதுவான அறிகுறிகள்..

முதுகுவலி, பலநாள் நீடிக்கும் சோர்வு, எடை இழப்பு, உடலுறவின் போது வலி, பசியின்மை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது பிற குடல் இயக்க மாற்றங்கள், மாதவிடாய் மாற்றங்கள், மாதவிடாய் இல்லாத போதும் ரத்த போக்கு, அடிக்கடி வயிறு அல்லது இடுப்பு வலி. இவ்வகை அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆனால் எந்த ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலமாகவும் ஓவரியன் கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியாது. எனவே ஸ்கிரீனிங் டெஸ்ட்களுக்கு பதிலாக, இந்த வகை கேன்சரை கண்டறிய இடுப்பு பரிசோதனை (Pelvic exam), வெஜினல் அல்ட்ராசவுண்ட் (Vaginal ultrasound), CA125 மற்றும் பயாப்ஸி போன்ற பல சோதனைகள் ஒன்றாக செய்யப்படுகின்றன.

நீங்கள் மெனோபாஸ் காலத்தை நெருங்கிவிட்டீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 6 அறிகுறிகள்

பல ஆய்வுகள் ஓவரியன் கேன்சர் விஷயத்தில் கருத்தடை மாத்திரைகள் ஒரு தடுப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறி இருக்கின்றன. ஆனால் கருத்தடை மாத்திரைகள் சில பக்க விளைவுகளை கொண்டிருப்பதால், அவற்றை எடுத்து கொள்வதற்கு முன் தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார் டாக்டர் திவ்யா. தங்களுக்கு ஓவரியன் கேன்சர் முற்றும் வரை பலர் அறிகுறிகளை கவனிக்கவில்லை. எனவே சீரான இடைவெளியில் இந்த புற்றுநோய்க்கான அபாயம் உள்ளதா என்பதை அறிய மருத்துவரை சந்தித்து பரிசோதித்து கொள்வது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Ovarian Cancer, Women Health

அடுத்த செய்தி