கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், வைட்டமின்கள், மினரல்கள், உற்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் உறுப்புகள் சீராக செயல்படவும் அவசியமானவை. இவற்றில் இரும்புச்சத்து மிகவும் முக்கியமான ஒரு மினரல் ஆகும். நுரையீரலிலிருந்து உடலில் உள்ள செல்களுக்கும் திசுக்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு இரும்புச்சத்துக்கு உள்ளது. அதுமட்டுமின்றி உடலின் பல்வேறு உறுப்புகள் சரியாக வளரவும், செயல்படவும் இரும்புச்சத்து அவசியம்.
இரும்பு சத்து குறைபாட்டால் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது. உடல் ரீதியான செயல்பாடுகளை இரும்பு சத்து குறைபாடு பாதிப்பதால், இரும்பு சத்து குறைபாடு என்பதே அனீமியா என்ற ஒரு நோயாகவும் கருதப்படுகிறது.
உலக சுகாதார மையத்தின் அறிக்கைப்படி இரும்புச்சத்து குறைபாடு, சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. ஐந்து வயதுக்கும் குறைவான 42% குழந்தைகளுக்கும், 40% கர்ப்பிணிப் பெண்களும் அனீமியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.
இரும்புச்சத்து உடலுக்கு எத்தகைய நன்மைகளை அளிக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.ஆக்சிஜன் சுமந்து செல்வது முதல், சிவப்பு அணுக்களை உருவாக்குவது வரை, இரும்பு சத்து மிகப்பெரிய தூணாக இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மையம், மேம்பட்ட மூளை திறன், நினைவுகள், கவனம் மற்றும் எளிதாக காயம் ஆறுதல் உள்ளிட்ட உடலின் பல செயல்பாடுகளுக்கும் இரும்புச் சத்து அவசியம்.
உங்களுக்கு அனீமியா என்று கூறப்படும் இரும்பு சத்து குறைபாடு இருக்கிறதா என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எப்போதுமே சோர்வு: நீங்கள் பெரும்பாலான நேரத்தில் சோர்வாகவும், உங்கள் ஆற்றிலே இல்லாதது போலவும் உணர்ந்தால் அதற்கான காரணம் நீங்கள் இரும்புச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதுதான். அதுதான் உங்கள் உடலில் உப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதற்கு உதவுகிறது. இரும்பு சத்து குறைவாக இருந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். மேலும், உங்கள் உடலிலுள்ள திசுக்களுக்கும், தசைகளுக்கும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காது. அதுமட்டுமின்றி உங்கள் உடலுக்கு தேவையான அளவு சிவப்பு அணுக்கள் உற்பத்தி ஆகாது/ இதனால் உடல் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
மூச்சு விடுவதில் சிரமம்: மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது, பொதுவாகவே பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாகவே காணப்படுகிறது. ஆனால் மேலே கூறியுள்ளது போல நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலுக்கு கொண்டு சேர்ப்பதறகு உடலுக்கு இரும்பு சத்து அவசியம். அதன் அளவு குறைந்தால், ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். நடக்கும்போது படியேறும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் நீங்கள் அனீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.
இதயம் படபடப்பு:இரும்புச் சத்து உடலில் இருக்கும் உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் இணைந்து செயல்பட வைக்கிறது. உங்கள் உடலில் போதுமான அளவு இரும்பு சத்து இல்லை என்றால் ஏற்கனவே கூறியுள்ளது போல உடலுக்கு தேவையான அளவு ரத்தமும் ஆக்சிஜனும் கிடைக்காது. உங்கள் இதயம் அதிகப்படியாக செயல்பட ஆரம்பிக்கும். இதன் விளைவாக உங்களுக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கும்.
இந்த அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் உடன மருத்துவரை அணுகி இதயப்படபடப்புக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அனீமியாவால் உங்கள் இதயம் செயலிழந்து போகும் அபாயம் உள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான அறிகுறிகள் தவிர்த்து, சத்துக்குறைபாடு பல்வேறு அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். அடிக்கடி தலைவலி மற்றும் தலைசுற்றல், வெளிறிய சருமம், பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய், தடிமனான நாக்கு, கவனக்குறைவு, ஆர்வமின்மை ஆகியவையும் இரும்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.