அன்று தீப்தி தன் தாயுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். இருவர் முகமும் வாட்டமாக இருந்தது.
தீப்திக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகியிருந்தது. செல்லமாக வளர்த்த ஒரே பெண் என்பதால் அதிக செலவு செய்து விமரிசையாக திருமணத்தை நடத்தியிருந்தனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் தீப்தியின் கணவன் விபரங்கள் எதுவும் சொல்லாமல் அவளை , தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தாய் மகளிடம் பேசியதில் தீப்திக்கும் அவர் கணவருக்கும் இடையே தாம்பத்திய உறவில் பிரச்சினை இருப்பதை கூறியிருக்கிறார்.
பட்டப்படிப்பை முடித்து இருந்தாலும் தீப்தி இயல்பாகவே பயந்த சுபாவம் உள்ளவர். பெற்றோர் பேசி முடித்த திருமணம் என்பதால் கணவர் வீட்டார் அனைவரும் அவருக்கு சிறிது காலமே அறிமுகமானவர்கள். தீப்திக்கு உடலுறவு குறித்த எந்தவிதமான தெளிவான அறிவும் இல்லை. அதனால் கணவன் மனைவியிடையே முழுமையான தாம்பத்திய உறவு ஏற்படவில்லை. இருவருமே அதை பெற்றோரிடமோ அல்லது மருத்துவரிடமோ பகிர்ந்து கொள்ளவில்லை. மனக்கசப்பு முற்றியதும் ஒரு கட்டத்தில் தீப்தியின் கணவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
"தீப்தியும் தனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது, தாம்பத்திய உறவுக்கோ அல்லது ஒரு குழந்தைக்கு தாயாகவோ தனது தகுதி இல்லை" என்று எண்ணி, குழம்பி, அது அவர் தன்னம்பிக்கையை முற்றிலுமாகக் குலைத்து விட்டது.
இதுபோன்ற சூழ்நிலையை எவ்வாறு அணுகுவது?
மனநல மருத்துவர், மகப்பேறு மருத்துவர் , ஆண்களுக்கான சிறப்பு மருத்துவர் , அனைவருடைய ஆலோசனையும் இந்த தம்பதிக்கு தேவை.
தீப்திக்கு அடிப்படை பரிசோதனைகள், ரத்தப் பரிசோதனைகள் செய்ததில் அதில் எல்லாம் இயல்பு நிலையில் இருந்தது.
அவருடைய தைராய்டு மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் அளவும் சராசரியாக இருந்தது.
ஸ்கேன் செய்தபோது அவருடைய கர்ப்பப்பை மற்றும் முட்டைப்பையும் நார்மலாகவே இருந்தது.
அவருக்கு மருத்துவரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்று உறுதி கூறியதுமே, தீப்திக்கு பாதி தெளிவு பிறந்தது.
தீப்தியின் பெற்றோர்கள் மற்றும் அவரது கணவரது பெற்றோர்கள் இருவரும் பேசி தீப்தியின் கணவரையும் மருத்துவ ஆலோசனைக்கு சம்மதிக்க வைத்தனர்.
தீப்தியின் கணவரை ஆண்களுக்கான சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். தீப்தியின் கணவருக்கும் உடல்ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன்.
தீப்தியையும் அவர் கணவரும் பாலியல் பிரச்சனைகளுக்கான சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனைக்கு சென்றனர்.
இந்த முதல்கட்ட ஆலோசனைகள் முடிவதற்கு 2-3 மாதங்கள் ஆயிற்று. இரண்டு மாதங்களின் முடிவில் இருவருமே ஓரளவு தங்களால் இயல்பான ஒரு கணவன் மனைவி வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கையை பெற்றிருந்தனர்.
பெண்குயின் கார்னர் : ப்ரக்னன்சி டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை நாட்களில் எடுக்கலாம்..?
தீப்தி, அவர் கணவர், இரு வீட்டார் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், ஒரு இளம் தம்பதியின் பிரச்சனையை தீர்த்து அவர்களுடைய வாழ்க்கை உடைந்து போகாமல் காப்பாற்ற முடிந்தது. திருமணமான புதிதில் ஏற்படும் இதுபோன்ற பாலியல் உறவு சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு ஆரம்பத்திலேயே சரியான மருத்துவ ஆலோசனை பெற்று, அது சிறிய அளவாக இருக்கும் போதே எளிதாக சமாளிக்கலாம். கணவன் மனைவி இடையே பெரிய விரிசல் வருவதற்கு முன்னால் இந்த பிரச்சினையை சரி செய்தால் அவர்கள் மணவாழ்வில் உண்மையில் மணம் வீசும்.
இதைவிட கடுமையான பிரச்சனை உள்ள ஒரு சிலரை வரும் வாரங்களில் பார்க்கலாம்.
மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Relationship Tips, Sex doubts