• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வேகமெடுக்கும் கொரோனா - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு..மக்கள் செய்ய வேண்டும்..? மருத்துவர் அனிதா ரமேஷ் 

வேகமெடுக்கும் கொரோனா - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு..மக்கள் செய்ய வேண்டும்..? மருத்துவர் அனிதா ரமேஷ் 

கொரோனா இரண்டாம் அலை | corona second wave

கொரோனா இரண்டாம் அலை | corona second wave

முதல் அலையின்போதே தமிழகத்தின் பாதிப்பு அதிகம். இப்போதும் அதன் எண்ணிக்கை கூடிவருகிறது. இதையடுத்து ஏற்கெனவே இருந்த நிலையான கட்டுப்பாடுகளுடன், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

  • Share this:
இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்துள்ள கொரோனா வைரஸ், பொதுமக்களை அச்சுறுத்த தொடங்கிவிட்டது. இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவித்து வருகின்றன. 2019 ஆம் டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று 2020 ஆம் ஆண்டினை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்த நிலையில், 2021 ஆம் ஆண்டையும் ஆட்டிப்படைத்து விடுமோ என மக்களை அச்சப்பட வைத்துள்ளது.

இந்தியாவில் பெரும் தாக்குதலை நடத்திய கொரோனா, கடந்த ஓரிரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதல் அலையின்போதே தமிழகத்தின் பாதிப்பு அதிகம். இப்போதும் அதன் எண்ணிக்கை கூடிவருகிறது. இதையடுத்து ஏற்கெனவே இருந்த நிலையான கட்டுப்பாடுகளுடன், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் அலை கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என விளக்கினார் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் அனிதா ரமேஷ்.

“முதல் அலை கொரோனாவின்போது பொதுமக்களுக்கு பெரும் அச்சம் இருந்தது. என்ன நோயோ… என்ன செய்யுமோ என்று பயந்தார்கள். இப்போது அது இல்லை என்பது ஆறுதல்தான். ஆனால், அதுவே அலட்சியமாக மாறிவிடக்கூடாது. முன்பும் வெளியில் சுற்றினேன் கொரோனா வர வில்லை. இப்போதும் அப்படிச் சுற்றுவேன் என்று இருக்கக்கூடாது. மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்வதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய ஒருபோதும் மறக்கக்கூடாது. அந்த மாஸ்க் தரமானதாக இருப்பது அவசியம். மேலும், மாஸ்கின் வெளிபுறத்தில் கை வைக்கக்கூடாது. ஏதேனும் சூழலில் அப்படிக் கை விட்டால் கைகளைச் சுத்தம் செய்யாமல் கண், காது பகுதிகளைத் தொடக்கூடாது.

மாஸ்க் போலவே கையுறைகளை அணிந்துகொள்வது அவசியம். அப்படி அணிந்திருந்தாலும் எங்கேனும் தொட்டால் அப்படியே மூக்கு, காது, கண்கள், வாய் பகுதியில் வைத்துவிடக்கூடாது.
ஹேண்ட் சானிடைசர் எப்போதும் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது நல்லது. கடை அல்லது அலுவலங்களில் எங்கேனும் தொட்டால் வெளியே வருகையில் கைகளைச் சானிடைசரால் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

தனி மனித இடைவெளியைக் கடைபிடியுங்கள். சுமார் மூன்றடிகளாவது மற்றவர்களோடு இடைவெளி இருத்தல் அவசியம். மற்றவர்களோடு கைக்குலுக்குவதோ, கட்டி அணைத்து அன்பைப் பகிர்வதோ இன்னும் சில மாதங்களுக்கு வேண்டாம். கைக்கூப்பி வணக்கம், நன்றி தெரிவியுங்கள்.வெளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் குளியலறைக்குச் சென்று உடைகளை அங்கேயே கழற்றி சலவைத் தூள் + தண்ணீர் உள்ள வாளியில் நனைத்து துவைத்து விட வேண்டும். குளித்து விடுவதும் நல்லது.

முடிந்தவரை சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. உப்பு கரைசல் நீரை தொண்டை பகுதியில் படுமாறு கொப்பளித்து அடிக்கடி வாய்க் கொப்பளிப்பது நல்லது. ஆவி பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் வாய்ப்பிருக்கையில் செய்யலாம்.

எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக புரோட்டின் அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். முடிந்தவரை வீட்டில் சமைக்கும் உணவுகளையே சாப்பிடுங்கள்.

புதிய அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் 2-வது அலை - முதல் அலையில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது

45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் வசதியை அரசு ஏற்பாடு செய்துள்ளது. மருத்துவர்களும் அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்களும் தயக்கமின்றி தடுப்பூசிப் போட்டுள்ளனர். எனவே, அச்சமின்றி தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டபிறகே முழு பலன் கிடைக்கும். ஆயினும், தடுப்பூசி போட்டிருந்தாலும் மாஸ்க், கையுறை அணியவும் தனி மனித இடைவெளி பின்பற்றவும்” என்கிறார்.

மருத்துவர் அனிதா ரமேஷ்


அரசு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மக்கள் கைகளில்தான் சுயபாதுகாப்பு உள்ளது என்பதை உணர்ந்து கொண்டால், இரண்டாவது அலையை தடுத்து நிறுத்துவிடலாம் என்பதே மருத்துவர்கள் கருத்தாக உள்ளது. முடிவு நம் கைகளில்தான்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: