Home /News /lifestyle /

புதிய வகை ஓமைக்ரான் கொரோனா வகை டெல்டா வகையை விட ஆபத்தானதா?

புதிய வகை ஓமைக்ரான் கொரோனா வகை டெல்டா வகையை விட ஆபத்தானதா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த வகை கொரோனா பாதிப்பு கொண்டவர்களுக்கு குறைவான அறிகுறிகள் மட்டுமே உள்ளது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
கொரோனா இரண்டாம் அலை தற்போது தான் குறைந்துள்ளது. அதற்குள் இன்னொரு புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பல நாடுகளில் பரவி வருகிறது. ஓமைக்ரான் என்று கூறப்படும் இந்த வகை கொரோனவானது முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது ஒரு சில நாடுகளில் இந்த வகை கொரோனா பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பலருக்கு இந்த புது வகை ஓமைக்ரான் கொரோனா இரண்டாம் அலையில் உருவான டெல்டா வகையை போன்று அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற சந்தேகம் உள்ளது.

தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி என்பவர், தென் ஆப்பிரிக்காவில் உள்ள சில நோயாளிகளிடம் முன்பிருந்த கொரோனா வகையை விட வேறு ஒரு புதிய வகை கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளது என முதன்முதலில் கண்டறிந்தார். அவரது கிளினிக்கிற்கு வந்த 7 நோயாளிகளுக்கு இந்த புது வகை கொரோனா பாதிப்புகள் இருந்ததாக கூறுயுள்ளார்.

இவர்களுக்கு உள்ள நோய் அறிகுறிகள், டெல்டா வகை நோய் அறிகுறிகளை விட வித்தியாசமாக உள்ளதாகவும் ஏஞ்சலிக் குறிப்பிடுகிறார். மேலும் இந்த ஓமைக்ரான் கொரோனா பெரிய அளவிற்கு பாதிப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை என்றும், வீட்டில் இருந்தே இதற்கான சிகிச்சைகளை எடுத்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஓமைக்ரான் கொரோனாவின் அறிகுறிகள் :

இந்த வகை கொரோனா பாதிப்பு கொண்டவர்களுக்கு குறைவான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. இவர் தடுப்பூசி பரிந்துரை குழுவில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். டெல்டா வகை கொரோனா வந்தவர்களுக்கு வாசனை மற்றும் சுவை தெரியாது. ஆக்சிஜன் அளவு குறையும், பாதிப்பு அதிகம் இருக்கும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இவர் பரிசோதித்த ஓமைக்ரான் கொரோனா நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட எந்த அறிகுறிகளும் இல்லை. மேலும் அவர்களின் ஆக்சிஜன் அளவும் குறைய இல்லை என்று ஏஞ்சலிக் தெரிவித்துள்ளார்.

இதுவரை இவர் பரிசோதித்த நபர்களில் இருந்து, 40 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதினரை இந்த ஓமைக்ரான் கொரோனா தடுக்குவதாக குறிப்பிடுகிறார். இந்த புது வித ஓமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்படட்டவர்களில் பாதி பேர் தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்கள். இந்த வகை கொரோனா வந்தவர்களுக்கு 1-2 நாட்கள் பசியின்மை உள்ளது. இத்துடன் தலைவலி மற்றும் உடல் வலியும் உள்ளது என்று கூறுயுள்ளார்.



டெல்டாவை விட ஆபத்தானதா?

தென்னாப்பிரிக்காவில் கிடைத்த முக்கிய தரவுகளின் அடிப்படையில், ஓமைக்ரான் வகை கொரோனா மிக வேகமாக பரவுகிறதே தவிர இது டெல்டா வகையை போன்று மோசமானதாக இல்லை; "இது நமக்கு சாதகமானதாக இருக்கும்" என்று வைராலஜிஸ்ட் மார்க் வான் ரான்ஸ்ட் கூறியுள்ளார். ஆனால், கிடைத்த தரவுகளின்படி இந்த ஓமைக்ரான் கொரோனா டெல்டா வகையை விடவும் அதி வேகமாக பரவ கூடியதாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

இஸ்ரேலில் உள்ள ஹடசா பல்கலைக்கழக மருத்துவமனையின் கொரோனா வைரஸ் துறையின் தலைவரும் பேராசிரியருமான ட்ரோர் மெஸோராக், இந்த புது வகை கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவிற்கு பாதிப்பு கொண்டதாக இல்லை என்று கூறியுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் டெல்டாவை போன்று இல்லாமல் ஒரு சில குறைவான அறிகுறிகள் மட்டுமே வரக்கூடும். மேலும் இதன் தொற்றுகளின் விகிதமும் குறையும். எனவே இதை எளிதில் நாம் கையாளலாம் என்று மெஸோராக் குறிப்பிடுகிறார்.

கொலஸ்ட்ரால் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை!

புதிதாக கண்டறியப்பட்ட இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இது எந்த அளவிற்கு வேகமாக பரவும் திறன் கொண்டது, எந்த அளவுக்கு இது வீரியம் கொண்டது மற்றும் இது டெல்டா வகையை விடவும் வேகமாக பரவுமா என்பது பற்றி சரியாக தெரியவில்லை.



தற்போது வரையிலும் இந்த ஓமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் மற்ற வகைகளில் இருந்து வேறுபட்டவை என்ற தகவலும் இல்லை. இது வரையில் சிறு அறிகுறிகளை மட்டுமே இந்த ஓமைக்ரான் கொரோனா தொற்று ஏற்படுத்துகிறது. எனவே இன்னும் ஒரு சில வாரங்களுக்கு பிறகு தான் இதன் தீவிரத்தை பற்றி அறிய முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது வரையில் நாம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற கொரோனா கால விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக இது வரையில் தடுப்பூசி போடாதவர்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தடுப்பூசி ஓமைக்ரானை தடுக்குமா?

மற்ற வகை கொரோனவை போன்று இந்த ஓமைக்ரான் கொரோனா இல்லை. தற்போது வரையிலும் இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது என்றே அறியப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி எடுத்து கொண்டால் தீவிர நோய் பாதிப்புகள் இருக்காது என்று லண்டனை சேர்ந்த நுண்ணுயிரியலாளர் பேராசிரியர் கேலம் செம்பிள் கூறியுள்ளார்.

மேலும் பலர் இந்த வகையை பற்றி தவறுதலாக கூறி வருகின்றனர். இது ஒன்றும் பேரழிவில்லை. இதை பற்றி மிகைப்படுத்திய தலைப்பு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தடுப்பூசியினால் உடலுக்கு கிடைத்த எதிர்ப்பு சக்தியானது நோயின் தீவிர தன்மையில் இருந்து நம்மை காக்கும். இந்த புது வகை வைரசால் சிறிது தலைவலி, சளி, மூடைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் தடுப்பூசி போட்டு கொண்டதால் இது தீவிரமான பாதிப்பையோ, இறக்கும் அளவிற்கான தாக்குதலையோ தராது என்று கேலம் செம்பிள் தெரிவித்துள்ளார்.



எனவே புது புது வகையான கொரோனா வைரஸ் உருவாவதால் தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியமானது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் தடுப்பூசி போடும் பணியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். அப்போது தான் நோயின் பாதிப்பில் இருந்து பேரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவில் இந்த புது வகை ஓமைக்ரானை தடுக்க தடுப்பூசி தான் சிறந்த ஆயுதம்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தினம்தோறும் அதிக அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரையில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டு கொள்வதால் உங்களை மட்டுமன்றி உங்கள் குடும்பத்தையும், இந்த சமூகத்தையும் பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Omicron

அடுத்த செய்தி