ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கணவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தை பெறுவதில் தாமதமாகுமா..?

கணவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தை பெறுவதில் தாமதமாகுமா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 52 : சர்க்கரை நோய் விந்துஅணுக்களை பாதிக்கக்கூடிய தன்மை உடையது . அணுக்களுடைய எண்ணிக்கையில் பெரிய மாறுதல்கள் இல்லாவிட்டாலும் அமைப்பில் மாறுதல்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராதாவுக்கும் ரஞ்சித்துக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. மூன்று மாதங்களாக குழந்தை வேண்டுமென்று இருவரும் முயற்சி செய்கின்றனர் . இந்த மாதமும் கருத்தரிக்காததால் ஆலோசனைக்காக வந்திருக்கின்றனர்.

இருவரிடமும் பொதுவாக அவர்களுடைய உடல் நிலை குறித்த கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தேன். ரஞ்சித்திற்கு இரண்டு வருடங்களாகவே சர்க்கரை நோய் இருப்பதும் ,ஆனால் ரஞ்சித் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் தெரிந்தது.

கடைசியாக எப்போது சர்க்கரை அளவு பார்த்தீர்கள் ???என்று கேட்டால், "நினைவிலேயே இல்லை. சமீபத்தில் கட்டாயமாக எடுக்கவில்லை". மாத்திரைகளையும் தினசரி எடுப்பதில்லை. சில நாட்கள் இனிப்புகளை உண்ணும் போது மட்டும் எடுக்கிறேன்" என்று கூறினார்.

ராதா ரஞ்சித் இருவருக்கும் அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் செய்தேன். இரண்டு நாட்கள் கழித்து எல்லா முடிவுகளையும் எடுத்துக் கொண்டு இருவரும் மீண்டும் வந்தனர்.

ரஞ்சித்திற்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு சர்க்கரை அதிகமாக இருந்தது.

"எனக்கு மாத்திரை எடுத்துக் கொள்வதில் விருப்பமில்லை. ஒரு முறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் வாழ்க்கை பூராவும் இதை தொடர வேண்டும். அதனால் இதை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கிறேன் ஏதாவது இயற்கை வழி இருக்கிறதா?"என்று கேட்டார்.

ஆரம்ப நிலையில் சர்க்கரை நோய் இருக்கும் பொழுது எடை குறைப்பு உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். வாரத்தில் இருமுறையாவது காலையில் உணவு உண்பதற்கு முன்பு சர்க்கரை அளவு எடுத்து பரிசோதிக்க வேண்டும் .

Also Read : மேக்கப் சாதனங்கள் கூட கர்ப்பம் தரிப்பதை பாதிக்குமா..? மருத்துவர் தரும் ஷாக் ரிப்போர்ட்...

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் இதுபோன்று தொடரலாம் அப்படி இல்லை என்றால் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது பொதுவாக உள்ள அனைவருக்கும் பொருந்தும். ஆனால் குழந்தை வேண்டும் என்று ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வரும்போது ஏற்கனவே சர்க்கரை நோய் இருக்கிறது என்றால் கட்டாயம் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துவோம்.

சர்க்கரை நோய் ரத்த குழாய்களையும் நரம்புகளையும் பாதிக்கும். ரத்தத்தில் அதிக சர்க்கரை உலா வரும் பொழுது வெகு விரைவாகவே இந்த பாதிப்புகள் நடக்கும். இதனால் அடிக்கடி பிறப்புறுப்பில் தொற்று, சிறுநீர் பாதை தொற்று, உறவு கொள்ள இயலாமை போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோய் விந்துஅணுக்களை பாதிக்கக்கூடிய தன்மை உடையது . அணுக்களுடைய எண்ணிக்கையில் பெரிய மாறுதல்கள் இல்லாவிட்டாலும் அமைப்பில் மாறுதல்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம்.

கர்ப்பமடைய குறைந்தது நான்கு சதவீதம் சரியான உருவ அமைப்பு கொண்ட அணுக்கள் இருக்க வேண்டும். சர்க்கரை உள்ளவர்களுக்கு அணுக்களுடைய அமைப்பு சரியாக இருப்பது போல தெரிந்தாலும் கூட அதன் நகரும் திறன் மற்றும் உயிர்ப்புடன் இருக்கக்கூடிய காலம் மற்றும் கரு உருவாக்கக்கூடிய சக்தி போன்றவை பாதிப்பு இருக்கும்.

எனவே எடை குறைப்பு ,உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ,அத்துடன் மருந்துகளையும் எடுத்துக்கொண்டு சர்க்கரையை சரியான கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

Also Read :  அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கர்ப்பம் தள்ளிப்போகுமா..? மருத்துவர் விளக்கம்

ரஞ்சித்தின் எடை 90 கிலோவை நெருங்கியிருந்தது. எடை குறைப்பும் உணவு திட்டமும் கொடுத்தேன். பிறகு உடற்பயிற்சிகளும் துவங்கியது. மருந்துகளையும் துவங்கப்பட்டது. ஒரு மாதம் வரை இவை எல்லாவற்றையும் கடைபிடித்த பின் சர்க்கரை அளவை பார்த்த போது சரியான அளவில் இருந்தது. குறைந்தது மூன்று மாதங்கள் சர்க்கரை அளவு சரியாக வைக்குமாறு கூறினேன் .

ஐந்தாவது மாதம் ராதா கருவுற்று இருந்தார் . மனைவிக்கு சர்க்கரை நோயோ அல்லது வேறு நோய்களோ இருப்பின் அது எவ்வாறு கர்ப்பத்தை பாதிக்குமோ, அதுபோலவே கணவருக்கு சர்க்கரை நோய் தைராய்டு குறைபாடு இருந்தால் கட்டாயம் கருத்தரிப்பை பாதிக்கும்.

எனவே குழந்தை வேண்டுமென்று சிகிச்சை எடுக்க செல்லும் தம்பதியர் இருவருமே எல்லா பரிசோதனைகளையும் செய்து கொள்வது மிக மிக முக்கியமாகும். இருவருக்கும் ஒரே சமயத்தில் சிகிச்சை அளிக்கும் போது தான் அது பலனளிக்கும்.

பல தம்பதிகளை நானும் பார்த்து இருக்கிறேன். சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வந்து, பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது குழந்தைக்கான கனவுகள் நிஜமாவதை!!!

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Pregnancy Chances, பெண்குயின் கார்னர்