மன அழுத்தம் பலரையும் துரத்தும் நோய். வீட்டுப் பிரச்னைகள், அலுவலகப் பிரச்னைகளால் இந்த மன அழுத்தம் எளிதில் பற்றிக் கொள்கிறது. சிலர் மன அழுத்தத்தால் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ளாமல் எதனால் இப்படி நடக்கிறது என புலம்புவார்கள். இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அவை என்னென்ன என்பதைக் காணலாம்.
தொடர் தூக்கமின்மை
மனம் ஒரு நிலையில் இல்லையெனில் தூக்கமின்மைப் பிரச்னை தானாக வந்து சேரும். எப்போதும் எதையாவது நினைத்துக் கொண்டே இருப்பதால் மனம் அதுகுறித்த சிந்தனையிலேயே இருக்கும். இதனால் எப்படிப் புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. சிலர் தூக்கமின்மையால் தினமும் தூக்க மாத்திரைகளைப் போட்டு தூங்குகின்றனர். சிலர் தூக்க மாத்திரைகள் போட்டும் தூக்கம் வரவில்லை என்றுப் புலம்புவார்கள். இதில் எது நடந்தாலும் அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்தப் பிரச்னையை போக்க தூக்கமாத்திரையல்ல தீர்வு, தூக்கம் வராததற்கான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதேயாகும்.
எண்ணங்களின் ஓட்டம் அதிகரித்தல்
மன அழுத்தம் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாதான் முதலிடம் என்கிறது ஒரு ஆய்வு. இப்படி பிரச்னைகளை யோசித்து புலம்பித் தள்ளியே பிரச்னைகளை மேலும் அதிகரித்துக் கொள்வார்கள். இதனால் தன்னம்பிக்கையற்ற மனிதர்களாக சிலர் வாழ்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 50% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் தவறான முடிவுகளுக்கு ஆளாகின்றனர். வாழ்க்கையில் விரக்தி, இயலாமை, தனிமை, வெறுப்பு என எல்லா எதிர்மறை எண்ணங்களும் சூழ்ந்து கொள்கின்றன. இப்படி நீங்களும் இருப்பீர்களானால் நீங்கள் கட்டாயம் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உடனடியாக உங்கள் பிரச்னைகளை நண்பர்களிடமோ, துணையிடமோ சொல்லி ஆலோசனை பெறுங்கள். இல்லையெனில் மனநல மருத்துவரை அணுகுங்கள்.
கவனச் சிதறல்கள்
மனதை சிந்தனையின்போக்கில் விடுவதால் ஏற்படும் பிரச்னைதான் கவனச் சிதறல். இந்த கவனச் சிதறல் காரணமாக வேலையில் தவறுகளை தொடர்ந்து செய்வதால் உயரதிகாரிகளிடம் திட்டு வாங்குவது, வீட்டில் எதையும் சரியாக செய்யாமல் திட்டு வாங்குவது, நியாபக மறதி அதிகரிப்பது போன்ற பிரச்னைகள் வரும். சிந்தனை வேறு திசையில் இருப்பதால் நினைவுத் திறனும் மங்கி விடுகிறது. இதனால் வெறுப்புகள் அதிகரித்து தனிமையைத் தேடுவீர்கள். இது மேலும் உங்களை மன அழுத்தத்தில் தள்ளும். இதுபோன்ற பிரச்னைகளை தினமும் சந்திக்கிறீர்கள் என்றால் ஏதோ ஒரு விஷயம் உங்கள் மனதை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எனவே உடனே அதை கண்டறிந்து சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
தலைவலி, உடல் அசதி
மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் உங்களிடம் இருந்தால் இலவசமாக தலைவலியும் ஒட்டிக்கொள்ளும். தூக்கம் சரியாக இல்லை என்றாலே தலைவலி வந்துவிடும். ஆரோக்கியமற்ற உடலால் தசைப்பகுதிகள் வலுவிழந்து உடல் அசதியை ஏற்படுத்தும். எப்போதும் சோர்ந்தே இருப்பதால் ஆற்றலின்றி செயல்படுவீர்கள். எனவே தலைவலிக்கு மருந்து வாங்காமல் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணுங்கள்; ஆரோக்கியமான வாழ்வு வாழுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mental Stress