சரளாவும் அவருடைய தாயும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
சரளா தன்னுடைய முதல் கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் இருந்தார். சென்ற முறை வந்தபோது அவருக்கு எல்லா அடிப்படை இரத்த பரிசோதனைகளையும் பரிந்துரைத்திருந்தேன். அந்த முடிவுகளை எடுத்துக் கொண்டு சரளாவும் தாயும் வந்திருந்தனர்.
முதலில் ரத்த பரிசோதனை, ஹீமோகுளோபின்(Hb%) - ரத்தத்தில் தேவையான அளவு ஹீமோகுளோபின் இருக்கிறதா? என்று பார்க்கும் பரிசோதனை. அது சரளாவுக்கு 10.5% என்று வந்திருந்தது.
பொதுவாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் பெண்களுக்கு 12 கிராம் %, ஆண்களுக்கு 14 கிராம் % அளவாகும் .அதற்கு குறைவாக இருக்கும் பொழுது ரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய சக்தி குறைகிறது.
உடனே சரளா கேட்டார்" டாக்டர்! ரத்தம் இந்த அளவுக்கு குறைவாக இருக்கிறதே? குழந்தையின் வளர்ச்சிக்கு ஏதாவது பாதிப்பு வராதா? "
சாதாரணமாக, பெண்களுக்கு 10. 5% என்பது குறைவாகும்.
ஆனால் கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் செய்யப்படும் எல்லா பரிசோதனை அளவுகளும் மாறுபடும். அதை ப்ரக்னன்சி ஸ்பெசிபிவிக் ரேஞ்ச் (pregnancy specific range) என்று கூறவோம். கர்ப்ப காலத்திற்கு என்று உள்ள சில தனிப்பட்ட அளவுகளை வைத்து சரியான அளவு உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடலில், கர்ப்ப ஹார்மோன்களால் ஏற்படும் ஏராளமான மாற்றங்களில் முக்கியமானது, ரத்தத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். ரத்தத்தின் பருமனளவு 30 லிருந்து 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு 4 லிட்டர் ரத்தம் உடலில் உள்ளது என்றால் கர்ப்ப காலத்தில் அது ஆறிலிருந்து ஏழு லிட்டர் வரை அதிகரிக்கலாம்.
அதே சமயத்தில் ரத்தத்தில் உள்ள பலவிதமான செல்கள் அதிகரித்தாலும் ,அவை அதிகரிக்க கூடிய விகிதம் 15-20% மட்டுமே . இந்த விகித மாறுபாட்டால் கர்ப்ப காலத்தில் இரத்தம் குறைவாக உள்ளது போல காண்பிக்கும். இதை பிசியோலாஜிக்கல் அனிமியா(physiological anemia) என்று கூறுவோம் . உடல் இயங்கியல் ரத்த சோகை என்று கூறலாம். எனவே கர்ப்ப காலத்தில் HB அளவு 10.5%ஒப்பீட்டு அளவாக எடுத்துக் கொள்வோம்.
கர்ப்ப காலத்தில் குழந்தையினுடைய வளர்ச்சி விகிதம் மிக அதிக அளவில் இருப்பதால் தாய்க்கு இரும்பு சத்து, கால்சியம் சத்து , மற்ற விட்டமின்கள் அதிக அளவில் தேவைப்படும். அதனால் தொடர்ந்து இரும்பு சத்து மாத்திரைகளையும் விட்டமின் மாத்திரைகளையும் கால்சியம் மாத்திரைகளையும் கொடுக்க வேண்டி இருக்கிறது. அத்துடன் சத்தான உணவுகள் புரதப் பொடிகள் போன்றவையும் பரிந்துரைக்கிறோம்.
குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் முன்னுரிமை கொடுக்கப்பட்டு தாயினுடைய உடலில் இருந்து குழந்தைக்கு சென்று விடும். அப்போது சரியான உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தேவையான அளவு சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாவிட்டால் தாய்க்கு ரத்தத்தில் ரத்த சோகை ஏற்படுவதற்கும் மற்ற விட்டமின் குறைபாடுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாகும்.
இரத்தம் மிகவும் குறைவாக இருக்கும் தாய்க்கு இருதயம் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது
தாய்க்கு இரத்த சோகை இருந்தால் அது கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
கரு வளர்ச்சி குறைவு ,பல்வேறு விதமான தொற்று நோய்கள் குறிப்பாக சிறுநீர் பாதை தொற்று, குறைமாத பிரசவம், குறைந்த எடை குழந்தை, பிரசவத்தை தொடர்ந்து காயம் ஆறாதிருத்தல் ,பாக்டீரியா தொற்று என்ற அனைத்துமே ரத்தம் குறைவாக உள்ள தாய்க்கு ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம்.
Also Read : கர்ப்ப காலத்தில் அறிகுறியற்ற சிறுநீர் பாதை தொற்று ஏற்படுமா..? இதனால் குழந்தைக்கு பாதிப்பு இருக்கா..?
இரும்புச்சத்து மாத்திரை மற்றும் விட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, ஹீமோகுளோபின் அளவு அதே அளவில் தொடர்ந்து குறையாமல் அதை பராமரிக்க முடியும். முதல் மூன்று மாதங்களில் எடுத்துக் கொள்ளப்படும் போலிக் ஆசிட் மாத்திரைகளும் ரத்தம் உருவாக்கும் மூன்று மாதங்களுக்கு பிறகு இரும்பு சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் . ரத்தம் குறைவாக இருந்தால் இரும்பு சத்து ஊசிகளும், மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு சில சமயங்களில் ரத்தம் ஏற்றுவதும் அவசியம்.
கர்ப்ப காலத்தில், இரும்பு சத்து மிகுந்த கீரைகள் முக்கியமாக முருங்கைக்கீரை, எல்லா பழங்கள் குறிப்பாக பேரிச்சை, எல்லா காய்கறிகள் குறிப்பாக புரோக்கலி, அதுபோல பருப்புகளில் காராமணி மற்றும் ராஜ்மா போன்றவை ரத்தத்தை உருவாக்கும் சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளன. கர்ப்பிணிகள் இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Also Read : கர்ப்ப காலத்தில் சத்து மாத்திரைகள் கட்டாயம் எடுக்கனுமா..? உணவின் மூலம் ஊட்டச்சத்து கிடைக்காதா..?
சரளாவின் தாய் "நன்றாக புரிந்தது டாக்டர்!. இதுபோன்ற சத்தான உணவுப் பொருட்களை சரளா சேர்த்துக் கொள்ளும்படி பார்த்துக்கொள்கிறேன். "என்றார் .
சரளாவும் "தினமும் போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன் டாக்டர்!" என்று கூறினார்.
தாயும் மகளும் திருப்தியாக சென்றனர்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anemia, Hemoglobin, Pregnancy care, பெண்குயின் கார்னர்