Diabetes| உண்மை கசக்கும்: பாக்கெட் உணவுகளில், குளிர்பானங்களில் சர்க்கரை அளவால் ஆபத்து

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் சர்க்கரை அளவால் ஆபத்து

பாக்கெட் உணவுப்பொருட்கள், மென் பானங்களில் சர்க்கரை அளவைக் குறைக்க விதிமுறைகளைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது இந்த ஆய்வு. உண்மை கசக்கவே செய்யும் ஆனால் குடும்பங்களின் சேமிப்பை சூறையாடுவது கடைசியில் எது? நோய்தான், இதன் மூலம் லாபம் சம்பாதிப்பவர்கள் யார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

 • Share this:
  இருதய ரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் பேரை பாதித்து அதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் காரணமே பேக்கேஜ் உணவுப்பொருட்களிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் அளவுக்கதிகமான சர்க்கரை அளவுதான்.

  பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் 20% மற்றும் குளிர்பானங்களில் 40% சர்க்கரை அளவுகளை குறைத்தால் அமெரிக்காவில் சுமார் 2.48 மில்லியன் மக்களை இருதய ரத்தக்குழாய் நோய்களிலிருந்து காப்பாற்ற முடியும் என்கிறது இந்த ஆய்வு. சர்க்குலேஷன் என்ற ஜர்னலில் வெளிவந்துள்ள கட்டுரையில் சர்க்கரை அளவைக் குறைத்தால் அமெரிக்காவில் ஆண்டுக்கு 7,50,000 பேருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று கூறியுள்ளது.

  பேக்கேஜ் உணவுகளிலும், ட்ரிங்க்ஸ்களிலும் சர்க்கரை அளவை போதிய அளவுக்கு குறைத்தால் மட்டுமே 35 வயது முதல் 79 வயது வரை உள்ள 4,90,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்கின்றனர். மசாச்சுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனை மற்றும் டஃப்ட்ஸ் பலகலைக் கழகம், ஹார்வர்ட் பொதுச்சுகாதார பள்ளி ஆகியவை மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன.

  இந்த ஆய்வின் மூலம் அமெரிக்காவில் பேக்கேஜ் உணவுப்பொருட்கள், மென் குளிர்பானங்கள் ஆகியவற்றில் சர்க்கரை அளவைக் குறைப்பது பெரிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது. நாட்டின் பட்ஜெட்டையே தீர்மானிப்பது குடிமக்களின் ஆரோக்கியம்தான், ஒரு அரசு பொதுச்சுகாதாரத்திற்கு அதிக தொகையை ஒதுக்க வேண்டி வருவது துரதிர்ஷ்டமே என்கிறார்கள் இந்த அமெரிக்க ஆய்வாளர்கள், ஆனால் அமெரிக்காவில் உணவு லாபி மிகப்பெரிய கார்ப்பரேட் லாபியாகும், அதை அவ்வளவு எளிதில் அமல் படுத்தி விட முடியாது.  அமெரிக்க உணவுப்பொருட்களில் சர்க்கரை அளவை குறைத்தால் 4.28 பில்லியன் டாலர்கள் தொகையை மிச்சப்படுத்தலாம். மேலும் உடல் நலம் நன்றாக இருந்தால் சர்க்கரை நோய், இருதய நோய், ரத்த அழுத்தம் ஆகியவை இல்லாமல் இருந்தால் அமெரிக்க மக்கள் 160.88 பில்லியன் டாலர்களை கூடுதலாகச் சேமிக்க முடியும்.

  சர்க்கரை கலந்த பானங்களுக்கு உலகின் 2வது மிகப்பெரிய சந்தை இந்தியா:

  சர்க்கரை கலந்த குளிர்பானங்களுக்கான உலகின் 5 பெரிய சந்தைகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் அதிகம் ஏற்படுகிறது, ஊட்டச்சத்து கோளாறு என்றால் ஒன்று உடல் பருமன் அதிகமாதல் அல்லது போதிய எடை இல்லாமல் குழந்தைகள் வளர்வது. டிசம்பர் 2019-ல் லான்செட்டில் வெளியான கட்டுரையில் இந்த இரண்டின் தாக்கம், சர்க்கரையின் தாக்கம் பற்றி வெளியிடப்பட்டுள்ளது.  பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் உணவுகள், சில்லரை வர்த்தகத்தில் புரட்சி என்ற பெயரில் செயின் ஸ்டோர்களின் வருகை ஆகியவற்றால் பிரெஷ் உணவு விற்பனை மகா சரிவு கண்டு இவை அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. உணவு தொழிற்துறையில் அதிகரிக்கும் தனியார் முதலீடுகள்தான் இதற்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தியாவில் இதனால் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். சர்க்கரை நோயாளிகள் மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.1500 முதல் 2000 வரை செலவு செய்ய வேண்டி வருகிறது, அதிலும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்தச் செலவு பெரிய சுமையாக உள்ளது.

  ஆகவே கார்ப்பரேட் நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பாக்கெட் உணவுப்பொருட்கள், மென் பானங்களில் சர்க்கரை அளவைக் குறைக்க விதிமுறைகளைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது இந்த ஆய்வு. உண்மை கசக்கவே செய்யும் ஆனால் குடும்பங்களின் சேமிப்பை சூறையாடுவது கடைசியில் எது? நோய்தான், இதன் மூலம் லாபம் சம்பாதிப்பவர்கள் யார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: