சமையலுக்காக நீங்கள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது நீங்களே உங்கள் இல்லம் தேடி பல நோய்களை அழைக்கிறீர்கள் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
அடிக்கடி நாம் பூரி, பக்கோரா போன்ற எண்ணெய்யில் செய்தவற்றை சாப்பிட விரும்புகிறோம், ஆனால், இதில் உள்ள பெரிய தீமை என்னவென்றால், அந்த சமையல் எண்ணெய்யை வீணாக்க மனமில்லாமல், சில சமயங்களில் அதை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்த விரும்புவோம். ஆனால், எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது அது நம் உடலில் என்ன செய்கிறது என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது நீரிழிவு நோய்,
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதுகுறித்த ஆய்வுகளின்படி, சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவது நச்சுப் பொருள்களை வெளியிடுவதோடு, உடலில் வீக்கம் மற்றும் பல்வேறு நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அதிகரிக்கிறது. FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்) வழிகாட்டுதல்கள் படி, ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சமையல் எண்ணெய்யை ஒருவர் எத்தனை முறை பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்த முடியும், அதில் எந்த வகையான உணவு பொறிக்கப்படுகிறது, எந்த வகை எண்ணெய், எந்த வெப்பநிலையில் எவ்வளவு நேரம் சூடாக்கப்பட்டது என்பதை பொறுத்து அதனை மீண்டும் உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Must Read | வெங்காயத்தின் இந்த 5 நன்மைகளை தெரிந்துகொண்டால் இனி உணவில் இருந்து ஒதுக்க மாட்டீர்கள்..!
அதிக வெப்பநிலையில், எண்ணெய்யில் உள்ள சில கொழுப்புகள் டிரான்ஸ்-கொழுப்புகளாக மாறும். டிரான்ஸ்-கொழுப்புகள் என்பது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளாகும். அவை நம் உடலில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. எண்ணெய்கள் மீண்டும் பயன்படுத்தப்படும்போது, டிரான்ஸ்-கொழுப்புகளின் அளவு இன்னும் அதிகமாகிறது.
சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது நம் உணவு ஆரோக்கியமற்றதாக மாறும் என்கின்றனர்.
டிரான்ஸ் கொழுப்புகளின் அளவு அதிகரிப்பதால் உணவு ஆரோக்கியமற்ற உணவாக மாறும்
இதுபோன்ற எண்ணெய் நச்சுப் பொருட்களை வெளியிடுவதால் எண்ணெய்யில் துர்நாற்றம் வீசும்
கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்
இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
எனவே, கோழி, மீன் போன்ற அசைவ உணவுகளை பொறிக்கும்போது அந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், பொதுவாகவே சமையல் எண்ணெய்யை தேவைக்கு ஏற்ப மட்டும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு அதை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதே நம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.