மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா நான்காம் அலை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி ஈரான், ஈராக், துனீசியா, லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் உயிரிழப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன.
பெரும்பாலான நாடுகளில் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைகளின் அடிப்படையில், COVID-19 க்கு எதிராக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து விருப்பமுள்ள கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனிடையே உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் குறித்த கவலையை சுட்டிக்காட்டியுள்ள 2 முன்னணி மகப்பேறியல் நிபுணர் குழுக்கள் அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் கோவிட் -19 தடுப்பூசியை போட்டு கொள்ள பரிந்துரைத்துள்ளன. அமெரிக்கன் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி (American College of Obstetricians and Gynecologists) & தாய்-கரு மருத்துவத்திற்கான சமூகம் (Society for Maternal-Fetal Medicine) உள்ளிட்ட மகப்பேறியல் பராமரிப்பு நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த 2 முன்னணி நிறுவனங்கள், அனைத்து கர்ப்பிணி பெண்களுமே கோவிட் -19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொள்ள பரிந்துரை செய்து உள்ளன.
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அது கடும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்க செய்கிறது மற்றும் குறைப்பிரசவத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க அரசின் தகவல்படி அந்நாட்டில் சுமார் 16% கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது அதற்கு மேற்பட்ட டோஸை பெற்றுள்ளனர்.
உலக தாய்ப்பால் வாரம் 2021 : முதன்முறையாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
முன்னதாக மேற்கண்ட இரு மகப்பேறியல் நிபுணர் குழுக்களும் கர்ப்பிணி பெண்கள் கோவிட் தடுப்பூசியிலிருந்து விலக்கப்படக்கூடாது என்று மட்டுமே கூறி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பரிந்துரை செய்யாமல் இருந்தனர். OB-GYN குழுவின் தலைவர் டாக்டர். மார்ட்டின் குறிப்பிடுகையில், மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய பரிந்துரை பற்றி கருத்து தெரிவித்துள்ள சிகாகோவை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் எமிலி மில்லர், இது கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்கான அவர்களின் முடிவில் கர்ப்பிணி பெண்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்க உதவும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கர்ப்பிணிகள் தங்களது கோவிட் தடுப்பூசி ஷாட்களை பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னர் நடைபெற்ற ஆய்வுகளில் கர்ப்பிணிப் பெண்கள் சேர்க்கப்படவில்லை, இது கோவிட் தடுப்பூசிகளின் அவசர அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது. என்றாலும் கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்ள வேண்டாம் என்று எந்த ஒரு நிபுணர்களும் குறிப்பிடவில்லை. இதுவரை பெற்றிருக்க கூடிய தகவல்கள் கர்ப்பிணிகளில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானவை என்ற தகவலை உறுதிபடுத்துவதாகவே அமைந்திருக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.