புற்றுநோய் உலகின் மிகப்பெரிய உயிர்கொல்லி நோயாகும். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் எந்த விதமான உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, புற்றுநோய் பாதிப்பு குறையும் என்பதைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குறைவான புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் கேன்சர் செல்களின் வளர்ச்சி குறைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கோலன் கேன்சர் என்று சொல்லப்படும் மலக்குடல் புற்றுநோய் சிகிச்சையில் உணவுப் பழக்கங்களை தீவிரமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மிக மிக அவசியம். மிச்சிகன் யூனிவர்சிட்டி ரோஜல் கேன்சர் சென்டரில் இதைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு குறைவான புரதம் உள்ள உணவுகள் வழங்கப்பட்டன. இந்த உணவுகள் புற்றுநோய் வளர்ச்சியின் விகிதத்தை வெகுவாக குறைத்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் என்பதே நம் உடலில் இருக்கும் செல்கள் அபரிமிதமாக வளர்ச்சி அடைவதைத் தான் குறிக்கிறது. செல்களின் வளர்ச்சி குறைகிறது என்பதை புற்றுநோயிலிருந்து நிவாரணம் பெறக்கூடிய ஒரு முக்கியமான தீர்வாகும்.
ரோஜல் கேன்சர் சென்டரில் இந்த ஆய்வை நடத்தி வரும் ஆய்வாளர்களில் ஒருவரான சுமீத் சோலான்கி இதை பற்றி கூறுகையில் ‘குறைவான புரதம் கொண்ட டயட் என்பதை மட்டுமே, புற்றுநோய்க்கான சிகிச்சையாக வழங்க முடியாது. புற்றுநோய்க்கான வேறு சிகிச்சைகளான கீமோதெரப்பி, உள்ளிட்ட சிகிச்சையுடன் சேர்ந்து இதையும் பரிந்துரைக்கலாம்’ என்று தெரிவித்தார்.
mTORCI என்பது செல்களில் உள்ள ஒரு முக்கியமான மாலிக்யூல் ஆகும். இது நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உணரும், கண்டறியும் தன்மை கொண்டது. அது மட்டுமில்லாமல், உடலில் உள்ள பல விதமான ஊட்டச்சத்துக்களை உணர்ந்து, அதைப் பயன்படுத்திக் கொண்டு வளரவும், விரிவடையவும் செல்களை இயக்குகிறது. அதனால் தான் mTORCI செல் வளர்ச்சியில் மாஸ்டர் ரெகுலேட்டர் என்று கூறப்படுகிறது. ஊட்டச்சத்து கிடைக்கவில்லை அல்லது குறைவாக இருக்கிறது என்றால், ஊட்டச்சத்தை உணரும் செயல்பாடுகள் குறைந்து, mTORCI இயங்காது.
உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்து, செல்களின் வளர்ச்சி மற்றும் வேகமாக பரவும் தன்மை ஆகியவற்றை mTORCI நிர்வகிக்கிறது. வழக்கமான சிகிச்சைகளுக்கு புற்றுநோய் செல்கள் அவ்வளவு எளிதாக இறப்பதில்லை. அதுவும் கேன்சர் செல்களில் ஏதேனும் குறிப்பிட்ட பிறழ்வுகள் இருந்தால், அவை மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. ஆனால், குறைவான புரதம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிடும் போது, உடலில் இருக்கும் இரண்டு முக்கிய அமினோ அமிலங்கள் குறைந்து, ஊட்டச்சத்து சமிக்ஞைகள் மாறுகின்றன.
மலக்குடல் புற்றுநோயைப் பொறுத்தவரை, புற்றுநோய் செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள் குறையும் போது, அவை ஸ்தம்பித்துப் போகின்றன என்றும், சத்துக்கள் இல்லாமல், செல்கள் வளராது மற்றும் இறந்துவிடும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளன.எனவே, புரத உணவுகளில் இருக்கும் அமினோ அமிலங்கள் குறைவாக கிடைத்தால் அல்லது கிடைக்காமல் போனால், அவை உடலில் புற்று செல்கள் பரவச் செய்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, செல்கள் இறந்து போகும் சாத்தியம் உள்ளது. இதன் மூலம், கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கும், சிகிச்சை மேம்பட்ட பலனை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Protein Diet