குழந்தையின்மை பிரச்சினை இன்று பலரும் எதிர்கொள்ளும் சிக்கலாக இருக்கிறது. முந்தைய காலங்களில் ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லை என்றால் பெண்ணை மட்டுமே குறை சொல்வார்கள். பெண்களுக்கு ஏதோ குறைபாடு இருப்பதால் கருத்தரிக்கவில்லை என்ற பொதுவான பேச்சுடன் அதை கடந்து சென்று விடுவார்கள்.
ஆனால், இன்றைய சூழல் அப்படியில்லை. ஆண், பெண் என பாலின பேதம் இன்றி, குழந்தையின்மை என்பதற்கு இருவரில் யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் என்ற நிலை வந்துள்ளது. அதேசமயம், குழந்தை உண்டாகுவதில் சிக்கல் இருக்குமானால், நம் மக்களில் பலர் அதுகுறித்து வெளியே சொல்லுவதற்கு தயங்குகின்றனர். பிறருடைய கிண்டல், கேலிக்கு ஆளாக நேரிடுமெ என தயங்குகின்றனர். தயக்கம் ஒன்றுதான் அவர்களது முதல் எதிரி. சரியான சமயத்தில் சிகிச்சை பெற சூழலை தடுத்து வைப்பது இந்த தயக்கம்தான்.
ஆகவே, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கணவன், மனைவி பல மாதங்கள் காத்திருந்த பிறகும், அது நிறைவேறவில்லை என்றால், அதுகுறித்து தயங்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இன்றைய நவீன உலகில் கருத்தரித்தல் முறைக்கு எண்ணற்ற சிகிச்சை வசதிகள் வந்துவிட்டன. உரிய காலத்தில் தாமதமின்றி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் குழந்தையை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர். சிலருக்கு, முதல் குழந்தை இயல்பாக கருத்தரித்து பிறந்திருந்தாலும் கூட, ஏதோ சில காரணங்களால் அடுத்த குழந்தை உண்டாகுவதில் சிக்கல் ஏற்படும். நிலைமை எதுவானாலும், காரணங்கள் என்ன என்பதை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
சரியான வயதில் திருமணம் செய்து கொள்ளாமல், காலம் கடந்து திருமணம் செய்பவர்களுக்கு பொதுவான பிரச்சினையாக குழந்தையின்மை என்பது ஏற்படக் கூடும். மாதவிடாய் சுழற்சி முறையாக இல்லை என்ற காரணத்தினாலும் இது நிகழலாம்.
30 வயதை கடந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் உண்டாகுமா..? மருத்துவரின் பதில்..!
கருமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் இருப்பது, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது, பெண்களுக்கு உரிய ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். உடல் பருமன், போதிய எடை இல்லாமை, கர்ப்பப்பை குழாய் அடைப்பு போன்ற காரணங்களால் குழந்தை உண்டாகுவதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆண்களுக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
ஆண்களின் விதைகளில் ஏற்படும் வெரிகோசில் என்னும் நரம்புச் சுருட்டு பிரச்சினை, விந்து கடந்து வரும் குழாய்களில் தொற்று, விந்து வெளியேறுவதில் சிக்கல் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படலாம். இது தவிர, போதிய உயிரணுக்கள் இல்லாமல் இருப்பது, உயிரணுக்கள் முதிர்ச்சி இன்றி இருப்பது, ஆன்டிபயாடிக் மருந்துகளால் உயிரணுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவை காரணமாக குழந்தையின்மை ஏற்படக் கூடும். இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் அல்லது புகைப்பிடித்தல் காரணமாக உயிரணுக்கள் பாதிக்கப்படலாம்.
தம்பதியர் இருவரும் உரிய முயற்சிகள் செய்தும், குழந்தை உண்டாக வில்லை என்றால், தக்க சமயத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Infertility, Male infertility, Pregnancy, Women Fertility