கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? சந்தேகங்களும்..கேள்விகளும்..!

தடுப்பூசி

6 வாரங்களுக்கு குறைவான இடைவெளியில் எடுத்துக்கொள்பவர்களுக்கு 55.1 விழுக்காடு மட்டுமே பயனளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2 தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதற்கான இடைப்பட்ட காலம் அதிகமாக இருக்கும்போது நல்ல விளைவுகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் பகிர்ந்தளிப்பில் இருக்கும் நடைமுறை தொய்வு காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலரும் தடுப்பூசிக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளது.

தடுப்பூசி எப்போது போட்டுக்கொள்ளலாம்? முதல் தடுப்பூசிக்கும், இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையே எவ்வளவு நாள் இடைவெளி இருக்க வேண்டும்? முதல் தடுப்பூசிக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், 2வது தடுப்பூசி எப்போது எடுக்க வேண்டும் என பல சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றுக்கான பதிலை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் பின்பற்றப்படும் தடுப்பூசி நடைமுறை என்ன?

இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்ட்ரா ஜென்காவின் கோவிட்ஷீல்டு (Covishield) தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடீயூட் நிறுவனமும், கோவாக்சினை (Covaxin) பாரத் பயோடெக்கும் உற்பத்தி செய்து வருகின்றன. இந்தியா முமுவதும் 17.7 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், 3.9 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (Drug Controller General of India), முதலில் வெளியிட்ட அறிவிப்பில் 4 முதல் 6 வார இடைவெளியில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், 28 நாட்கள் இடைவெளியில் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. பின்னர், கோவிட்ஷீல்டுக்கு 4 முதல் 8 வாரங்கள் என்றும், கோவாக்சினுக்கு 4 முதல் 6 வார இடைவெளி என மாற்றியமைக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு, கோவிட்ஷீல்டு தடுப்பூசியை 6 முதல் 8 வார இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறியது.இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டார். எப்போது அவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்?

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால், குணமடைந்து 90 நாட்கள் வரை காத்திருந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Institute of Science Education and Research) நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் வினீதா பால் பேசும்போது, தொற்றுநோயால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும், குணமடைந்த பிறகு 6 முதல் 8 வாரங்கள் காத்திருப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

முன்னணி தடுப்பூசி விஞ்ஞானி டாக்டர் ககன்தீப் காங் கூறுகையில், சார்ஸ் கோவிட் 2 வைரஸ் தொற்றுக்குப் பிறகு 80 விழுக்காடு பாதுகாப்பு உடலிலேயே இருக்கும் என தெரிவித்தார். அதனால், குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை காத்திருந்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கிறார். உலக சுகாதார நிறுவனமும் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஒருவர் 6 மாதங்கள் வரை காத்திருக்கலாம் எனக் கூறியுள்ளது. அவர்களுக்கு இயற்கையாகவே இந்த தொற்றை எதிர்த்து போராடக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் என விளக்கமளித்துள்ளது.

COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

தடுப்பூசி முதல் டோஸ் எடுத்தபிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால், 2 வது தடுப்பூசியை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டபிறகு ஒருவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டால், 2வது டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள குறைந்தபட்சம் 8 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால், வைரஸ் தொற்று ஏற்படும்போது இயல்பாகவே உடல் அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தொடங்கியிருக்கும் என கூறுகின்றனர்.

மேலும், முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துகொண்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு காரணம், உடலில் செலுத்தப்பட்ட தடுப்பூசி சுமார் 2 முதல் 3 வாரங்களுக்குப் பிறகே செயல்படத் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க நோய் தடுப்பு மையத்தின்படி, தடுப்பூசி ஒருவரின் உடலுக்குள் 2 வாரங்களுக்கு பிறகே செயல்படத் தொடங்குவதாக தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து மீண்டபிறகு 8 வாரங்களுக்குப் பிறகு 2வது தடுப்பூசியை எடுத்துகொள்ளலாம்.இதுவரை வைரஸால் பாதிக்கப்படவில்லை. முதல் தடுப்பூசியை எடுத்துகொண்டீர்கள். தடுப்பூசி தட்டுப்பாட்டால் 2வது தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் கவலைப்பட வேண்டுமா?

நீங்கள் கவலைப்படத்தேவையில்லை. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஷாசாங் ஜோஷி பேசும்போது, கோவாக்சினை 45 நாள் இடைவெளியிலும், கோவிட்ஷீல்டு தடுப்பூசியை 3 மாத இடைவெளியிலும் எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். Lancet மருத்துவ இதழின் ஆய்வுப்படி, கோவிட்ஷீல்டு தடுப்பூசியை 12 வாரங்கள் இடைவெளியில் எடுத்துக்கொள்பவர்களுக்கு 81.3 விழுக்காடு பயனளிப்பதாகவும், 6 வாரங்களுக்கு குறைவான இடைவெளியில் எடுத்துக்கொள்பவர்களுக்கு 55.1 விழுக்காடு மட்டுமே பயனளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2 தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதற்கான இடைப்பட்ட காலம் அதிகமாக இருக்கும்போது நல்ல விளைவுகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் அதிக இடைவெளி எடுத்துக்கொள்வதால், 2வது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்வதை மறந்துவிடுவதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டால் மட்டுமே 80 விழுக்காடு பயனளிக்கும் என கூறியுள்ளனர். அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளும்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். பாரத்பயோ டெக் நிறுவனம் தற்போது 3 டோஸ் கோவாக்சின் பரிசோதனையை தொடங்கியுள்ளது.

corona vaccine, covaxine, covishield

கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு, 2வது டோஸ் கிடைக்கவில்லை என்றால் கோவிட்ஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாமா?

தடுப்பூசியை மாற்றி எடுத்துக்கொள்வது குறித்து அந்த அறிவிப்பும் இல்லை. இரு வெவ்வேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இதுவரை எந்த ஆய்வும் வெளியாகவில்லை எனக் கூறியுள்ள மருத்துவர்கள், ஆபத்து ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுபாட்டு மையம் தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளது. அமெரிக்காவில் Pfizer-BioNTech மற்றும் Moderna ஆகிய mRNA வகை தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவியபோது, 6 வார இடைவெளியில் ஒரே வகையைச் சேர்ந்த வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

 
Published by:Sivaranjani E
First published: