கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே ஒரே தீர்வு என சுகாதாரத்துறையினர் தெரிவித்துவருகின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா பாதித்தாலும் அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு அச்சமும், சந்தேகமும் நிலவி வருகின்றன.
தற்போது ஊரடங்கு அமலில் இருந்தாலும் அது நீண்ட நாள் அமல்படுத்த முடியாது. பொருளாதார சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் சுகாதாரத்துறையினர் விளக்கி வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வரத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் கர்ப்பமான பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஆபத்து நேருமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதாவது கர்ப்பமான பெண்களின் உடலில் பிளெசன்டா (Placenta) எனப்படும் நஞ்சுகொடி அல்லது சினைக்கொடியில் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் பரவுகிறது. இதுக்குறித்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த தகவல் உண்மையில்லை என்றும், கர்ப்பமான பெண்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது.
இதற்காக 84 தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிடமும், 116 தடுப்பூசி செலுத்தப்படாதவர்களிடமும் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வு முடிவு கட்டுரை Obsterics & Gynecology என்ற இதழில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு பெண் கர்ப்பமுறும்போது வளரும் சினைக்கொடியானது, சிசுவியன் உறுப்புகள் முழுமையாக வளராத நிலையில் அதன் பணிகளை செய்யும். அதாவது நுரையீரல் முழுமையாக வளராத நிலையில் ஆக்ஸிஜன் வழங்கும். மேலும் ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை நிர்மாணிக்கும்.
நார்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் இணைய பக்கத்தில் மருத்துவர் ஜெஃப்ரி கோல்டுஸ்டெயின் (Jeffery Goldstein) என்பவர் பதிவிட்டுள்ளதாவது, சினைக்கொடியானது விமானத்தில் இருக்கும் பிளாக் பாக்ஸ் போன்றது. கர்ப்ப காலத்தில் எதாவது தவறாக நடந்தால் முதலில் சினைக்கொடியானது ஆராய்ச்சி செய்யப்படும். அதன் மூலம் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள முடியும். இந்நிலையில் தடுப்பூசி சினைக்கொடியை பாதிக்காது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவுகளை Obstetrics & Gynecology என்ற இதழில் வெளியிட்டிருந்தனர். அதில் கர்ப்பமான பெண்கள் தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெறும்போது அவை வெற்றிகரமாக அவர்களது வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் செல்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.எனவே கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus, Vaccine