இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்த உணவுகள்!

ஒமேகா 3 கொழுப்பு

ஒமேகா 3 கொழுப்புகள் உடலின் வளர்ச்சி மற்றும் சீரான இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இதயம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

  • Share this:
நம் அன்றாட உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். நம்மில் பலர் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்தாலும், உடலில் பல முக்கிய செயல்பாடுகள் சீராக இயங்க சில நல்ல கொழுப்புகளை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நல்ல கொழுப்புகள் நம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கின்றன. அத்தகைய நல்ல கொழுப்புகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்காற்றுகிறது. ஒமேகா 3 கொழுப்புகள் உடலின் வளர்ச்சி மற்றும் சீரான இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இதயம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய் காரணமாக இறக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இத்தகைய ஒமேகா 3 கொழுப்புகள் இயற்கையாகவே வெவ்வேறு உணவு மூலங்களில் கிடைக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.,

மீன்:

சால்மன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. மீன், இறாலை வாரம் இரண்டு நாட்கள் உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் குறையும். கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் இதயம் தொடர்பான பல சிக்கல்களை எளிதாக்குவதாக அறியப்படுகிறது. மீன் மாத்திரை, மீன் எண்ணெய்யையும் சேர்த்து கொள்ளலாம்.

வால்நட்:

வால்நட் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. இது நுரையீரல் அழற்சியை தடுக்க உதவுகிறது. வால்நட்ஸ்டில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது. சூப்பர்ஃபுட் என்று கூறப்படும், வால்நட்டில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்லது.

ராஜ்மா :

ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. தினமும் ராஜ்மா சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான புரதம், இரும்பு, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது.

சியா விதைகள்:

சியா விதைகள் சப்ஜா விதைகளை விட சிறியதாக இருக்கும். சியா விதைகள் வெள்ளை, கருப்பு, சாம்பல் மூன்று நிற விதைகளும் கலந்து இருக்கும். பார்ப்பதற்கு எள் போன்று இருக்கும் ஆனால் அளவில் சிறியது. இதை தண்ணீரில் ஊறவைத்தால் அளவில் பெரிதாகும். சியா விதைகள் அதிக புரதச்சத்து, நார்சத்து, ஒமேகா-3 கொண்டவை. இதனால் செரிமானப் பிரச்னைகளை சரிசெய்கிறது. உடலுக்கு உடனடியாக எனர்ஜி தரவல்லது. உடலில் சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.

ஆளி விதைகள் :

ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஃபைபர், புரதம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆளி விதையில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி தடுக்க உதவும். மேலும் ஆளி விதையில் கரையக்கூடிய மற்றும் கரையச்கூடாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே ஏராளமான அளவில் உள்ளது. இந்த நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் முக்கிங் பங்கை வகிக்கிறது.
Published by:Arun
First published: