கர்ப்ப காலத்தில் மார்பக மாற்றங்கள் பொதுவானவை. மேலும் இது ஹார்மோன் ஏற்ற இறக்கங்களின் விளைவாக நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் கருத்தரித்த ஒரு வாரத்திலேயே ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை தொடர்கின்றன.
கர்ப்ப காலத்தில், பெண்ணின் உடலில் உள்ள ஹார்மோன்கள் மார்பகங்களை பாலூட்டுவதற்கு தயார் செய்கின்றன. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் புரோலாக்டின் ஹார்மோன் அளவுகள் அதிகரிப்பது மார்பகங்களின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணம்.
கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.
ஈஸ்ட்ரோஜன் மார்பக குழாய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் லோபுலர் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. கர்ப்பத்தின் பிற்பகுதியில் புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன்களின் கீழ், கொலஸ்ட்ரம் எனப்படும் ஆரம்பகால தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் பொதுவாக கவனிக்கப்படும் சில மார்பக மாற்றங்கள்:
மார்பக புண்:
கர்ப்பத்தின் மூலம் மார்பகங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், அசவுகரியமும் வலியும் ஏற்படலாம். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பது மார்பகங்களில் மென்மைக்கு காரணமாகிறது. இதனால் முதல் மூன்று மாதங்களில் மார்பகங்களில் புண் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய எளிய யோகாசனங்கள்!
விரிவாக்கப்பட்ட மார்பகங்கள்:
ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் மார்பகங்கள், மார்பு காம்புகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி விரிவாக்கம் அடைகிறது. மார்பகங்கள் விரிவடையும் சமயத்தில் அரிப்பு ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு மார்பகங்கள் விரிவடையும் போது ஸ்ட்ரெச் மார்க் ஏற்பட வாய்ப்புள்ளது.
மார்புக்காம்பு பகுதியில் ஏற்படும் மாற்றங்கள்:
பால் குழாய்கள் தொடர்ந்து வளர்ந்து நீண்டு வருவதால், மார்பகங்கள் மற்றும் மார்பு காம்புகள் அதிக உணர்திறன் அடைந்து அசவுகரியத்தை ஏற்படுத்துகின்றன. ஹார்மோன் மாற்றங்கள் சருமத்தின் நிறமியை பாதிக்கும் என்பதால் மார்பு காம்பு பகுதி கருமை நிறத்தில் மாறிவிடுகிறது.
மார்புக்காம்பில் வெளியேற்றம்:
மார்புக்காம்பில் கொலோஸ்ட்ரம் எனப்படும் மஞ்சள் நிற தடிமனான திரவம் வெளியேறும். இது இரண்டு மூன்று மாதங்களில் உருவாகும் ஆரம்ப பால் ஆகும். இரத்த நாளங்கள் வேகமாக வளர்ந்து, எண்ணிக்கையில் அதிகரிப்பதன் விளைவாக, எப்போதாவது காம்பில் ரத்தம் வெளியேற்றப்படுவதை நீங்கள் கவனிக்கலாம்.
புடைப்புகள்
மோன்ட்கோமரி டியூபர்கல்ஸ் என அழைக்கப்படும் அரோலாவில் இருக்கும் சிறிய சுரப்பிகள் கர்ப்ப காலத்தில் அதிகரிப்பதால் அவை உயர்த்தப்பட்ட புடைப்புகளாகக் காணப்படுகின்றன.
அதிகரித்த இரத்த ஓட்டம்:
கர்ப்ப காலத்தில் மார்பகங்களுடனான நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த காலகட்டத்தில் அசவுகரியத்தை குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்:
* கர்ப்ப காலத்தில் மார்பக அசவுகரியத்தை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நன்கு பொருந்தக்கூடிய ப்ரா அணிவது தான். காட்டன் வகை பிராக்கள், சாஃப்ட் பேடிங் பிராக்கள் சிறந்தது. புஷ் அப் பிராக்களை அணிய வேண்டாம். இது மார்பகத்தில் பாலைக் கட்ட வைத்து முலை அழற்சியை உண்டாக்கி விடும். எனவே பிராக்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.
* மார்பகங்கள் விரிவடையும் போது அரிப்பு, புண் மற்றும் வலியில் இருந்து விடுபட சூடு தண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது மற்றும் மசாஜ் செய்வது உதவியாக இருக்கும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கொண்டு மெதுவாக விரல்களால் மசாஜ் செய்து விடலாம். இது உங்கள் மார்பகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.
* கொலோஸ்ட்ரம் கசிவுக்கு, ப்ரஸ்ட் பேட்களை பயன்படுத்தப்படலாம். வெட் டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast changes, Pregnancy changes