ஒர்க்-ஐ விட, ஒர்க் அவுட் தான் ரொம்பப் பிடிக்கும்! - அருண் விஜய்

என்னைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி என்பது உடலிற்கு சுத்தத்தையும், மனதிற்கு தன்னம்பிக்கையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம் - அருண்விஜய்

News18 Tamil
Updated: January 4, 2019, 6:02 PM IST
ஒர்க்-ஐ விட, ஒர்க் அவுட் தான் ரொம்பப் பிடிக்கும்! - அருண் விஜய்
என்னைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி என்பது உடலிற்கு சுத்தத்தையும், மனதிற்கு தன்னம்பிக்கையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம் - அருண்விஜய்
News18 Tamil
Updated: January 4, 2019, 6:02 PM IST
அருண் விஜய், திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றால் நம்ப முடியாத அளவுக்கு, துள்ளலும் துறுதுறுப்புமாக இளம் ஹீரோவாக காட்சியளிக்கிறார். இதற்கு முக்கிய காரணமே உற்சாகத்தை உடல்மொழியில் வெளிப்படுத்தும் இவரது கட்டுகோப்பான ஃபிட்னெஸ் தான். படத்திற்காக மட்டுமல்லாமல்,  தன்னுடைய பேஷனாகவும் ஃபிட்னஸை பின்பற்றுகிறார்.ஃபோட்டோ ஷூட்டாக இருந்தாலும், அந்த சூழலுக்கு ஏற்ற ஃபிட்னெஸ் ஸ்டைலை பராமரிப்பதில் கவனமாக இருக்கும் அருண் விஜய், தினசரி இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். சில நேரங்களில், 3 மணி நேரத்திற்கு அதிகமாகவும் உடற்பயிற்சி இருக்கும் என்கிறார். “நடிக்கும் கேரக்டருக்கு ஏற்ப என் டயட்டை மாற்றுவேன். ‘இப்படி நேரம் தெரியாமல் பைத்தியமாக உடற்பயிற்சி செய்கிறாயே’ என்று என் நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள்  அனைவரும் என்னை செல்லமாக திட்டுவார்கள். ஆனால் எனக்கு உடற்பயிற்சி செய்வதுதான் உடலுக்கும் மனதிற்கும் நிம்மதி அளிக்கிறது. அதனால், அந்த விஷயத்தில் மட்டும் நான் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவே மாட்டேன்” என்கிறார்.

அர்னால்ட் தான் சிறுவயது முதல் இவரது ரோல் மாடல். ரித்திக் ரோஷனின் ஃபிட்னெஸ் பயிற்சிகளும் இவருக்கு பிடிக்கும். தற்போது சிக்ஸ் பேக் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால், கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். தொடர்ந்து 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்கிறார். “இந்த கட்டுப்பாடுகளை நான் எப்போதும் சுமையாக நினைப்பதில்லை. பொதுவாக நான் இரவு 10 மணிக்கு மேல்தான் உடற்பயிற்சி செய்வேன். ஏனெனில் எனக்கு எந்தவித கவனச் சிதறல்களும் இருக்கக் கூடாது. அதுமட்டுமன்றி, அந்த சமயம் ஜிம் மூடிவிடுவார்கள். அப்போது நானும் , டிரெய்னரும் மட்டும்தான் இருப்போம்” என்கிறார் உற்சாக சிரிப்புடன்.தன் வீட்டிலேயே ஜிம் வைத்திருந்தாலும், வெளியில் சென்று உடற்பயிற்சி செய்வதில்தான் இவருக்கு மனதிருப்தி. ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சிகள் மட்டுமல்லாது களரி, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளையும் செய்து பயிற்சி எடுக்கிறார். “உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நம் பாரம்பரிய கலைகளிலேயே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை நாம் ஜிம்மில் செய்யும் ஒர்க்-அவுட்களை விடவும் கடினமானவையாக இருக்கும். அதனால்தான், நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருந்தனர்” என பாரம்பரிய தற்காப்புக் கலைகள் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்.

பர்ஃபெக்ட் டயட்டை பின்பற்ற, தன் வீட்டிலேயே டயட் கிச்சன் செட்-அப்பை உருவாக்கியிருக்கிறார், அருண். “இன்றைய ஃபிட்னெஸ் டிரெண்டுகளில் ஒன்று டயட் கிச்சன். நானும் என் டிரெய்னரின் ஆலோசனைப்படி டயட் கிச்சன் அமைத்திருக்கிறேன். டயட்டுக்கான விஷயங்கள் மட்டுமே இந்த கிச்சனில் இருக்கும். பழங்கள், காய்கறிகள், சாப்பிடும் தட்டு கூட, நம் டயட் அளவிற்கு ஏற்பதான் இருக்கும். இதனால் நம் மனம் கட்டுக்கோப்பாக இருக்கும். பொதுவாக நம் சமையல் அறைகளில்  வறுப்பது, பொரிப்பது என, டயட்டிற்கு எதிரான எல்லா விஷயங்களும் இருக்கும். அவற்றைப் பார்த்தால், உடனே சாப்பிடத் தூண்டும். அதைக் கட்டுப்படுத்தவே, இந்த டயட் சமையலறை” என்கிறார்.காலையில் முட்டையின் வெள்ளைப் பகுதி, மதியம் சிக்கன் மற்றும் காய்கறிகள் அல்லது சிக்கன் மற்றும் மீன், மாலையில் ஏதேனும் நட்ஸ் மற்றும் பயிறு வகைகள், பழங்கள், இரவு சிக்கன் மற்றும் காய்கறிகள் என முற்றிலும் கார்போஹைட்ரேட் இல்லாத உணவு முறையையே அருண் பின்பற்றுகிறார். “என்னைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி என்பது உடலிற்கு சுத்தத்தையும், மனதிற்கு தன்னம்பிக்கையும் ஏற்படுத்தக் கூடிய விஷயம். இது எனக்கு ஒரு போதும் சிரமமாக இருந்ததில்லை” என்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றாலும், டயட் உணவுகளை மட்டுமே அளிக்கக் கூடிய எம்.ஃபிட் போன்ற ரெஸ்டாரன்ட்களில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். எண்ணெயில் வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கும் அருணிடம், ஒரு நாளும் உங்களுக்கு ஸ்பைஸஸ் நிறைந்த உணவுகளை உண்ண ஆசை வந்ததில்லையா என்று கேட்டால், “நிச்சயம் இருக்கிறது. ஆனால் அதற்கும் ஒரு காலவரையறை வைத்திருக்கிறேன். எனக்கு பிரியாணி, சாக்லெட்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஏதேனும் படங்களில் கமிட் ஆகியிருந்தால், அந்த கேரக்டருக்கு ஏற்ப உடலைப் பராமரிப்பேன். படம் முடிந்தவுடன், 15 நாட்களுக்கு டயட் விஷயங்களை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிடுவேன். அப்போது எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும் அளவு பார்க்காமல் ஒரு கை பார்ப்பேன்” என்கிறார்.“எல்லோருக்கும் ஒரே மாதிரியான டயட் என்பது தவறான புரிதல். உங்கள் உடலுக்கு எது பொருந்துகிறதோ, உடல் எதை ஏற்றுக் கொள்கிறதோ, அதன் அடிப்படையில் தான் டயட் மற்றும் ஒர்க் அவுட்களை செய்ய வேண்டும். உங்கள் உடலைக் கவனிக்க ஆரம்பித்தாலே, அதைக் கண்டுபிடித்து விடலாம். பிறகு உங்கள் உடல், நீங்கள் சொல்வதைத்தான் கேட்கும்” என தன் ஃபிட்னஸ் ஃபாலோயர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் அருண் விஜய்.

First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...