மாணவர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் வரை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உற்சாக பானமாக காபி உள்ளது. கும்பகோணம் டிகிரி காபியில் ஆரம்பித்து எஸ்பிரசோ, கேப்புசினோ, லாட்டே, ஐரிஷ் என பல வகைகளில் விற்பனை செய்யப்பட்டாலும், அனைத்துக்கும் காபி என்பது தான் பிரபலமான பெயராக உள்ளது.
பல நிபுணர்கள் காபியில் இருக்ககூடிய நன்மைகள் காரணமாக ஒருநாளைக்கு 3 கப் அளவிற்கு பருகலாம் என பரிந்துரைக்கின்றனர். சில ஆய்வு முடிவுகளின் படி, சில நோயாளிகளுக்கு ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தவும், அறிவாற்றல் குறைவை தாமதப்படுத்தவும் மற்றும் அல்சைமர் அபாயத்தை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளன.
காஃபி இப்படி பிரபலமாக காரணம் அதில் உள்ள காஃபின் எனும் வேதிப்பொருள், ஏனென்றால் இது மைய நரம்பு மண்டலத்தை தட்டி எழுப்பி, தூக்கத்தில் இருந்து நம்மை சுறுசுறுப்பாக மாற்ற உதவுகிறது.
காஃபியைத் தவிர...
1. கோலா நட்ஸ்
2. கொக்கோ காய்கள்
3. உற்சாக பானங்கள்
4. உடற்பயிற்சி சப்ளிமெண்ட்ஸ்
5.கிரீன் டீ
6. சோடா பானங்கள்
7. தேயிலை போன்றவற்றையும் காஃபின் கிடைக்கும் பிற ஆதாரங்களாக உள்ளன
காஃபின் உட்கொள்வதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
1. மூட் ஸ்விங் (மனநிலை ஊசலாட்டம்)
காஃபினைக் கைவிடும்போது, முதல் 2 நாட்களில் நன்றாக போகலாம், ஆனால் அடுத்தடுத்த நாட்கள் சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்களை சுறுசுறுப்பு மற்றும் உற்சாகத்துடன் செயல்பட வைத்த ஆற்றல் பானத்தை இழந்ததால், நீங்கள் மிகவும் எரிச்சலடையலாம். இருப்பினும் இந்த உணர்வு இயல்பானது, எளிதில் கடந்து போகக்கூடியது என்பதை நன்றாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த 3 ஸ்நாக்ஸ் ரகசியமாக உங்கள் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!
2. எடையில் ஏற்ற, இறக்கங்கள்:
டயட் சோடாக்கள், சுவையூட்டப்பட்ட டீக்கள் மற்றும் லட்டுகளைப் போலவே, காஃபின் நிறைந்த பானங்கள் செயற்கை இனிப்புகள், சர்க்கரை, மறைக்கப்பட்ட கலோரிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. காஃபின் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை நீங்கள் கைவிட முடிவெடுத்து அதனை செய்ய ஆரம்பிக்கும் போது, உங்கள் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. நீங்கள் எடை இழப்புக்கு கருப்பு காபி மற்றும் கிரீன் டீயை நம்பியிருந்தால், அவை உங்களுக்கே தெரியாத சில கூடுதல் கிலோக்களை உடலில் சேர்க்கும் என்பதை மறக்காதீர்கள். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் காஃபினில் உள்ளதே அதற்கு காரணமாக அமைகிறது.
3. தலைவலி:
ஒற்றை தலைவலியில் இருந்து நிவாரணம் பெற சிலர் காபியுடன் நட்பு பாராட்டுவது உண்டு. இப்போது காபியை விட்டு விடலாம் என முடிவெடுக்கும் போது அது மேலும் மோசமான தலைவலியை உங்களுக்கு கொடுக்கலாம். காஃபின் இல்லாததால் வெடிப்பது போன்ற உணர்வுடன் கொடுமையான தலைவலி உண்டாகலாம். இதன் விளைவாக, ரத்த நாளங்கள் சுருங்கி, துடிக்கும் வலியை அனுபவிக்கலாம். ஆனால் இது 7-10 நாட்களில் குறைந்துவிடும் என்பது நல்ல செய்தி.
உடல் எடையை குறைக்க காலை உணவும், இரவு உணவும் எந்த அளவிற்கு முக்கியம் தெரியுமா?
4. உடற்பயிற்சிகள் கடினமாகலாம்:
ஜிம்மிற்குச் செல்வதற்கு முன் ஒரு எஸ்பிரெசோ ஷாட்டைக் குடியுங்கள், அது சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது, அதிக கொழுப்பை எரிக்கிறது மற்றும் உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்கிறது என ஜிம்மிற்குச் செல்லும் பெரும்பாலான நபர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் படி, காஃபின் வொர்க் அவுட்டின் தீவிரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. எனவே, திடீரென நீங்கள் அதனை கைவிடுவது, உடற்பயிற்சிகளை கடினமாக மாற்றும்.
5. குறைந்த மன அழுத்தம்:
பேக்கேஜ் செய்யப்பட்ட காஃபின் அட்ரீனல் சுரப்பிகளை கிக் ஸ்டார்ட் செய்து, அட்ரினலின் சுரப்பை தூண்டுகிறது. இது உங்களை அறியாமலேயே உங்கள் மனதையும் உடலையும் மன அழுத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்குகிறது. எனவே, காஃபின் வேண்டாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், உங்களுடைய மன அழுத்தம் குறைவதை கண்கூடாக உணர முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.