ஆரோக்கியமான உடலுக்கு தினசரி காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது எவ்வளவு அவசியம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இயல்பாகவே நம் டயட்டில் இருக்க வேண்டிய இவை ஒருவரது கர்ப்பகாலத்தில் இன்னும் முக்கியமான ஒன்றாக மாறுகின்றன.
ஏனென்றால் காய்கறிகள் மற்றும் பழங்கள் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை கொண்டுள்ளன. ஆனால் நாம் தற்போது சாப்பிட்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றுள் சில சத்துக்களுடன் கூடவே பூச்சிக்கொல்லியின் எச்சங்களையும் எடுத்து வருகின்றன.
பழம் அல்லது காய்கறிகளை பூச்சிகள் அரிக்காமல் தடுக்க அல்லது பூச்சிகளை அழிக்க உலகம் முழுவதும் பரவலாக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிக அளவு பூச்சிக்கொல்லி எச்சம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை (நான்-ஆர்கானிக்) உட்கொள்வது கருவுறுதலை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏன் தவிர்க்க வேண்டும்.?
இதுபற்றி பேசி இருக்கும் IVF கருத்தரிப்பு & கருவுறுதல் நிபுணர் டாக்டர் சந்தீப் தல்வார், அதிக அளவு பூச்சிக்கொல்லி எச்சம் உள்ள பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது மோசமான விந்துக்களின் தரம் மற்றும் குறைவான கருவுறுதல் விகிதத்துடன் தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளார். பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருக்கும் பழங்கள் & காய்கறிகள் சாப்பிடுவது மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை அலசிய பல ஆய்வுகள் பெண்கள் கருத்தரிக்கும் மற்றும் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளை குறைக்கலாம்.
Also Read : பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் 6 ஊட்டச்சத்து குறைபாடுகள் : இதை மட்டும் கவனிச்சுக்கோங்க...
அதே போல ஆண்களில் விந்தணுவின் தரம் வெகுவாக குறைய வழிவகுக்கும் என்பதை நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டார். எனவே கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பூச்சிக்கொல்லிகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதை கட்டுப்படுத்துவது நல்ல அணுகுமுறையாக இருக்கும் என்றார்.
பூச்சிக்கொல்லி கலந்த உணவுகள் ஏற்படுத்தும் சில எதிர்மறை தாக்கங்கள்...
குறைவான கருவுறுதல் விகிதம், கருச்சிதைவு, குழந்தை இறந்தே பிறப்பது, முன்கூட்டியே பிறப்பது, குறைவான எடையில் பிறப்பது, கருப்பை கோளாறுகள், டிஎன்ஏ கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், செல் கட்டமைப்பிற்கு நேரடி சேதங்கள் உள்ளிட்ட பிறப்பு குறைபாடுகள் ஏற்படுகிறது.
Also Read : உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...
ஆய்வு வெளிப்படுத்திய தகவல்...
ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில் கருவுறுதல் சிகிச்சையில் உள்ள சுமார் 325 பெண்களின் உணவு முறைகள் மற்றும் கர்ப்ப விளைவுகளின் தரவுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. பூச்சிக்கொல்லிகளுக்கு பெண்களின் உணவு தொடர்பான வெளிப்பாடுகளை மதிப்பிட, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் சராசரி பூச்சிக்கொல்லி எச்சங்கள் பற்றிய அமெரிக்க அரசின் தரவுகளுடன், 325 பெண்கள் பூர்த்தி செய்த கேள்வித்தாள்களிலிருந்து பெறப்பட்ட பெண்களின் உணவு பற்றிய தகவலை ஆய்வாளர்கள் ஒப்பிட்டனர்.
ஸ்ட்ராபெர்ரி, கீரை, மிளகு அல்லது திராட்சை போன்ற அதிக அளவு பூச்சிக்கொல்லி எச்சங்கள் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக சாப்பிடும் பெண்களை விட நிறைய சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு 18% குறைவாகவும், குழந்தை உயிருடன் பிறப்பதற்கான வாய்ப்பு 26% குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே குறிப்பிடப்படி பூச்சிக்கொல்லி கலந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவதோடு இணைக்கப்பட்டுள்ளதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.
ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சாப்பிட முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம், நான்-ஆர்கானிக் உணவுகளை சாப்பிடும் முன் நன்கு கழுவி விட்டு சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வீட்டில் வளர்ப்பது அல்லது உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து நேரடியாக வாங்குவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல டார்க் கலர் பழங்கள், காய்களில் கெமிக்கல்கள் மற்றும் உரங்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fruits, Pregnancy care, Vegetables