தினசரி உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது தான். எந்தவித உடல்நலப் பிரச்சினைகளும் பெரிய அளவில் நம்மை பாதிக்காமல், நீண்ட ஆயுளுடன் வாழுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நம் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கும். எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? சுமார் 30 நிமிடங்கள் உற்பயிற்சி செய்தால் போதுமானதா? அதற்கு குறைவாக செய்யலாமா என்ற பல கேள்விகள் நமக்குள் இருக்கும்.
அதற்கு முன்பு உடற்பயிற்சியை நாம் எப்படி செய்கிறோம் என்பது முக்கியமானது. அதாவது ஒரே சமயத்தில் நீங்கள் உடற்பயிற்சியை நிறைவு செய்கிறீர்களா அல்லது ஒரு நாளில் இரண்டு வேளை உற்பயிற்சி செய்கிறீர்களா என்பதைப் பொருத்து கால அளவுகள் மாறுபடும்.
எனினும், ஒரு தனிநபர் சராசரியாக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் அமர்ந்து இருக்கிறார், நடக்கிறார் என்பதை எல்லாம் ஆய்வு செய்து கடந்த 2008ஆம் ஆண்டில் உடற்பயிற்சி தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை விஞ்ஞானிகள் வெளியிட்டனர். தொடர்ந்து அந்த நெறிமுறைகளை 2018ஆம் ஆண்டில் மேம்படுத்தினர்.
வாரம் 150 நிமிடங்கள்
விஞ்ஞானிகள் வெளியிட்ட இரண்டு நெறிமுறைகளிலும் கூறப்பட்டிருப்பது ஒரே விஷயம் தான். அதாவது வாரம் ஒன்றுக்கு சராசரியாக நீங்கள் 150 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் மிக கடினமான உற்பயிற்சியை செய்கிறீர்கள் என்றால், இந்த கால அளவில் பாதி என்பதே போதுமானது. அதே சமயம், வாரத்தின் மொத்த கால அளவையும் ஒரே நாளில் செய்து விட்டு, மற்ற நாட்களில் ஓய்வு எடுத்துக் கொள்வது பலன் தராது. எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியான கால அளவில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
150 நிமிட இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்
நீண்ட கால ஆரோக்கியத்திற்கு மிதமானது முதல் கடினமானது வரையிலான உடற்பயிற்சிகளை வாரம் 150 நிமிடங்களுக்கு மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் தினசரி 30 நிமிடங்களுக்கு நீங்கள் மிகுந்த வேக நடைபயிற்சியை செய்ய வேண்டும். இரண்டு நாட்கள் வேண்டுமானால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக், நீரிழிவு மற்றும் ஒரு சில வகை புற்றுநோய் போன்றவற்றை தடுக்க முடியும். மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமாக உங்களது மூச்சுத் திறன் மற்றும் இதய துடிப்பு ஆகியவை மேம்படும்.
அன்றாட உணவில் இந்த 6 சிறு தானியங்களை சேர்த்துப்பாருங்கள் : உடல் நலப் பிரச்சனைகளே வராது..!
பகுதி வாரியாக பிரித்து உடற் பயிற்சி செய்யலாம்
ஒரே சமயத்தில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய சந்தர்ப்பம் அமையவில்லை என்றால், அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு நாளிலும் கிடைக்கும் சின்ன, சின்ன சந்தர்ப்பங்களில் உடற்பயிற்சி செய்யலாம். குறிப்பாக 5 நிமிட நடை பயிற்சி, 10 நிமிட நடைபயிற்சி போன்றவற்றை மொத்தம் 30 நிமிடங்கள் வருகிறார்போல நீங்கள் மேற்கொள்ளலாம்.
இந்தப் பயிற்சிகளுக்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் அலுவலகம் அல்லது வீடுகளில் படியேறி செல்வது, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு சற்று தொலைவு நடந்து செல்வது என உங்கள் அன்றாட நகர்வுகளையே உடற்பயிற்சிகளாக மாற்றிக் கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.