குளிர்காலத்தில் 'பறவை காய்ச்சல்' சாதாரணமானது... பீதி அடைய வேண்டாம் என அரசு அறிவுறுத்தல்

கோப்புப் படம்

பொதுவாகக் காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வரும் நேரத்தில் சீதோஷ்ண மாறுபாடுகளாலும், கண்டம் விட்டுக் கண்டம் வரும் புவி சார்ந்த மாற்றங்களாலும் தொற்றை ஏற்படுத்தும்.

  • Share this:
கொரோனா எனும் கொள்ளை நோயின் தாக்கம் சற்றே தணிந்திருந்த போதிலும், பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து புதிதாக உருமாற்றமாகி வந்திருக்கும் கொரோனா வைரஸ்களால் அடுத்த அலை வருமோ எனும் அச்சம் சூழ்ந்துள்ளது. இந்த குழப்பத்திற்கு இடையில் வந்திருக்கும் புதிய பீதி H5N1 வைரஸ் தொற்று. இது ஏவியன் ப்ளூ, இன்ப்ளூயன்சா A, பறவைக் காய்ச்சல் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் பறவைக் காய்ச்சல் ஆங்காங்கே பரவி பாதிப்பை ஏற்படுவதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசப் பகுதிகளில் வாத்துகளிடையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசப் பகுதியில் இடம்பெயர்ந்து பறந்து வந்த சுமார் 1,800 பறவைகளிடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பொதுவாக கோழி மற்றும் டர்க்கி கோழி பறவை இனங்களில் காணப்படும். இந்த இனத்தைச் சேர்ந்த சில வைரஸ்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றுவிடும். ஆனால் சில வைரஸ் தீவிர பாதிப்பை பறவையினங்களுக்கு ஏற்படுத்தி, உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.

பறவை காய்ச்சல் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உங்களுக்காக...

இவ்வகை கொடிய வைரஸ்கள் பொதுவாகக் காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வரும் நேரத்தில் சீதோஷ்ண மாறுபாடுகளாலும், கண்டம் விட்டுக் கண்டம் வரும் புவி சார்ந்த மாற்றங்களாலும் தொற்றை ஏற்படுத்தும். அப்படி ஏற்படும் தொற்று பெரும்பாலும் காட்டுப் பறவைகளை பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால், அந்தப் பறவைகள் இடம்பெயர்ந்து வரும்போது அவை கடந்து வரும் வழிகளில் அவை வெளியேற்றும் கழிவுகள் மூலம் வைரஸும் வெளியேற்றப்படும். உடனே தொற்ற வல்ல இந்த வைரஸ்கள் காற்றிலும், நீரிலும், மண்ணிலும் கலக்கின்றன. அதன் மூலம் அப்பகுதியில் வாழும் பறவைகளுக்கும் சிறிய வகை விலங்கினங்களுக்கும் பரவ வாய்ப்புண்டு.வேறுபட்ட இனங்களுக்குள் இதுபோன்ற வைரஸின் செயல்பாடுகள் வெகுவாக மாறுபடும். மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டதற்கான உறுதியான எவ்வித அறிகுறிகளும் இதுவரை இல்லை. தற்போது கொரோனாவின் தன்மை மாறியிருப்பது போல Segmented Genome எனும் வகுக்கப்பட்ட மரபணுவைக் கொண்ட இந்த H5N1 வைரஸ், கொரோனாவைவிட அதிகமாக உருமாற்றம் அடையக்கூடியது.

ஆனால், கொரோனா போல மனிதனிடத்திலிருந்து மனிதனுக்குப் பரவாது. இந்தியாவில் 2006 முதலே நாம் கேள்விப்பட்டு வரும் இந்தப் பறவைக் காய்ச்சல் இதுவரை 25 முறை கோழிகளையும், பிற பறவை இனங்களையும் தாக்கியிருக்கிறது. பறவைகளின் செரிமான மண்டலத்தை மட்டும் தாக்கும் இந்த ஏவியன் வைரஸ், மனிதனுக்குத் தொற்றினால் மிக மோசமான சுவாச மண்டல பாதிப்பை உருவாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம் என்று அறியப்படுகிறது ஆனால் இது பற்றிய பாதிப்புகள் உலகில் எங்கும் பதிவாகவில்லை.

பறவை காய்ச்சல் இருக்கும் நேரத்தில் சிக்கன், முட்டை சாப்பிடலாமா?

இந்த வகை தொற்று பறவை இனத்தின் தசைகளில்கூட வைரஸை பெருக்கலாம். கூட்டமாக வளர்க்கப்படும் பறவைகளில் ஒரு பறவைக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டாலும் அப்பறவையின் உமிழ்நீர், இறக்கை மற்றும் அவை வெளியேற்றும் கழிவுகள் வழியாக வைரஸ் வெளியேற்றப்பட்டு அடுத்தடுத்த பறவைகளுக்கும் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம். இந்த வகை தொற்று வேகமாகப் பரவுவதால், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்துவது சாத்தியமில்லாமல் போகிறது. எனவேதான் பறவைக் காய்ச்சல் பரவும் காலங்களில் தொற்று ஏற்பட்ட பறவைகளையும் அவற்றுடன் சேர்ந்து வாழும் பிற பறவைகளையும் கொன்றுவிடுகின்றனர். ஆனால், சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டையை தாராளமாக சாப்பிடலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அரசும் இதையேதான் வலியுறுத்தி வருகிறது.சுற்றுச்சூழல் மாசு, இயற்கைச் சீற்றங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்மை, காடுகள் அழிப்பு, மனித இனம் விஸ்தரிப்பு மற்றும் இவற்றால் நடக்கும் உலகின் மாற்றங்கள்தான் இதுபோன்ற அடுத்தடுத்த Zoonotic Diseases எனப்படும் 'மாற்று இன தொற்று நோய்கள்' அதிகமாக ஏற்படுவதற்குக் காரணமாகிறது என்பதே கசப்பான உண்மை. இயற்கையை எந்தளவு நமது விருப்பத்தின் பெயரில் நாம் மாற்றி அமைக்க நினைக்கிறோமோ, அதே இயற்கையுடைய எதிர்மறை செயல்தான் இந்த தொற்று நோய்கள். இயற்கையுடன் இணைந்து நம் வாழ்வியலை மாற்றிட முனைவோம். இனியேனும் இதுபோன்ற கொள்ளை நோய்கள் நம் அடுத்த தலைமுறையை தொடாமல் இருக்க இயற்கையை மதிப்போம்.இதைத்தான் அரசும் பல தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு சொல்லிவருகின்றன. இந்த பறவை காய்ச்சல் 2021 ஆம் ஆண்டிற்கு ஒன்றும் புதிதல்ல ஆண்டாண்டு காலமாக பறவை காய்ச்சல் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பறவைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புதான். மேலும் இது பொதுவான ஒன்று. இணையத்தில் கொரோனாவை விட அதிவேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல் பற்றிய போலி செய்திகளை பலரும் நம்பி பறவைகளை பராமரிப்பதிலும், முட்டை மற்றும் சிக்கன் உணவுகளை உண்பதை தவிர்த்தும் வருகின்றனர்.

சிக்கனை சாப்பிட்டால் பறவைக் காய்ச்சல் வரும் என்றும் கோழிமுட்டையை சாப்பிட்டால் பர்ட் ஃப்ளு ஏற்படுவது உறுதி என்றும் இணையத்தில் போலியான செய்திகள் வலம் வருகின்றன. பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசும் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்த உணவாக இருந்தாலும் அதை நன்கு சமைத்த பின் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். அதுமட்டுமல்லாது நன்கு சமைத்த உணவில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் 95 சதவீதத்துக்கும் மேல் இறந்திருக்கும் ஆதலால் அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது
Published by:Sivaranjani E
First published: