உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பலவிதமான உணவுப் பழக்கங்களை, உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை முயற்சி செய்து வருகிறார்கள். தீவிரமான டயட் கட்டுப்பாடு அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பது என்று பலவிதமான எடை குறைக்க உதவும் டயட்கள் காணப்படுகின்றன. ஆனால், எடை குறைக்க வேண்டும் என்றால், மாவுச்சத்து என்று கூறப்படும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து அதற்கு பதிலாக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எடை குறைக்கும் முயற்சியில் முதல் படியாகும்.
உணவுப் பழக்கத்தில் மாற்றங்களைத் தவிர்த்து, கூடுதலாக உடற்பயிற்சி செய்வதும் அவசியம். பலரும் உடற்பயிற்சி செய்தாலும், உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக் கொண்டாலும் உடல் எடை குறைக்கும் முயற்சியில் பின்வரும் தவறுகளை செய்கிறார்கள் என்று பலரும் செய்யும் தவறுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபலங்களின் பெர்சனல் ஊட்டச்சத்து ஆலோசகரான ருஜுதா திவேகர்.
எடை குறைப்பு என்பதில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள்...
அதிக உடல் எடையை குறைப்பது மட்டுமே உங்களுடைய ஒரே நோக்கமாக இருக்கக் கூடாது. அதற்கு மாறாக உடல் ஆரோக்கியமாக மாறுவது ஊட்டச்சத்து குறைபாடு நீங்குவது மற்றும் உடல் வலிமை ஆகியவை பெறுவதும் உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எடை குறைப்பு மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பொழுது மோசமான டயட் பழக்கத்தை மேற்கொள்ளக் கூடிய சாத்தியம் இருப்பதால் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் வேறு ஏதேனும் நோய்கள் அல்லது குறைபாடுகள் ஏற்படலாம். எனவே உடல் எடை குறைப்பு என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்ற நோக்கத்தோடு இருக்க வேண்டும்.
கடந்த கால அனுபவங்களை மறந்திடுங்கள்
ஒவ்வொருவரின் உடலும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒருவருக்கு உதவிய எடைகுறைப்பு முறைகள் உங்களுக்கு பலன் அளிக்காது. அதே போல உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி மூலம் உங்களால் எடை குறைக்க முடியும் என்பது மற்றவர்களுக்கு பொருந்தாது. மேலும் நீங்கள் கடந்த காலத்தில் மற்றவர்களைப் பின்பற்றியோ அல்லது டயட் மூலமாக எடை குறைப்பு செய்ய முயற்சி செய்திருந்தது அதே பலன் அளிக்காமல் போயிருந்தால், நீங்கள் மீண்டும் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு இப்போது செயல்படுங்கள்.
சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவுகள்!
உடல் எடை குறையவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம்
இத்தனை நாட்கள் உடற்பயிற்சி செய்து இருக்கிறேன், இவ்வளவு உணவு கட்டுப்பாட்டுடன் இருந்து இருக்கிறேன் ஆனால் எடை குறையவே இல்லையே என்று உங்களுக்கு சலிப்பாகவும் வருத்தமாகவும் இருக்கலாம். உங்கள் உடல் எடை என்பது ஒரே நாளிலேயோ அல்லது சில நாட்களிலேயும் அதிகரிக்கவில்லை. உடல் எடை அதிகரிப்பது என்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். அதேபோல எடை குறைக்கும் முயற்சியிலும் நீங்கள் பொறுமையுடன் இருப்பது அவசியம். அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் நல்ல வித்தியாசம் தெரியும்.
அவசரப் படாதீர்கள்
ஒரு வாரத்தில் இரண்டு கிலோ எடை குறையும், ஒரு மாதத்தில் 10 கிலோ வரை எடை குறையும் என்று எடை குறைப்பு பற்றி பலவிதமான விளம்பரங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த அளவுக்கு வேகமாக எடை குறைத்தால் மீண்டும் அதே வேகத்தில் உடல் எடை கூடிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே எடைக்குறைப்பு முயற்சி என்பது உங்கள் வாழ்க்கை முறை மாற்றமாக, உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக் கொண்டு நிதானமாக செயல்படுங்கள். அவசரப்பட வேண்டாம்.
வெங்காயம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்
உடற்பயிற்சி / உணவுக்கட்டுப்பாடு என்பது தண்டனை அல்ல
பலவிதமான காரணங்களால் நீங்கள் உங்களுடைய எடை அதிகரித்து இருக்கலாம். அது உங்கள் வாழ்க்கை முறையாக இருக்கலாம், உணவு வகைகளாக இருக்கலாம் அல்லது உடற்பயிற்சியின்மை என்ற காரணமாகவும் இருக்கலாம். உடல் எடையை குறைக்க வேண்டும், ஆரோக்கியமாக மாற வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்த பிறகு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை உங்களுக்கு தண்டனையாக கொடுத்து கொள்ளாதீர்கள். தீவிரமான உடற்பயிற்சி, தீவிரமான உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு பலன் அளிப்பதைவிட பாதிப்புகளை தான் ஏற்படுத்தும். எனவே உங்கள் உடலுக்கு என்ன தேவை, ஆரோக்கியமாக மாற வேண்டும், எடை குறைய வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றார் போல எடை குறைப்பு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.