ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்குயின் கார்னர் 21 : முடி இல்லாததால் வரன்கள் தள்ளிப் போகிறதா..? திருமண வயதில் உள்ள பெண்களுக்கு மருத்துவரின் ஆலோசனை..!

பெண்குயின் கார்னர் 21 : முடி இல்லாததால் வரன்கள் தள்ளிப் போகிறதா..? திருமண வயதில் உள்ள பெண்களுக்கு மருத்துவரின் ஆலோசனை..!

முடி உதிர்வு

முடி உதிர்வு

முடி தானே என்று திட்டுவதற்கு கூட பயன்படுத்தப்பட்டாலும், முடி கொட்டுபவர்களுக்குத் தான் தெரியும், அதன் அருமை. தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் கொடுமை.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ரம்யாவும், அவர் தாயும் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தனர் ரம்யா அழகான குட்டை கூந்தலோடு சல்வார் அணிந்து வந்திருந்தார். அவருடைய தாய் என்னிடம் பேச ஆரம்பித்தார். "டாக்டர்!!! ஒரு நல்ல விஷயம். ரம்யாவுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது.

" வாழ்த்துக்கள்! ரம்யா!!!!!. குடும்ப வாழ்க்கை மிக மிக சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த ஆசிகள். என்றேன்.

" டாக்டர் !!! எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது .அதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்" என்றார் ரம்யா. "சொல்லுங்க ரம்யா!!!! எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்க தான் செய்யும் அந்த தீர்வு கிடைக்கும் வரை நம் தேடல் தொடரும்" என்றேன் புன்னகையுடன்.

"டாக்டர்!!! என் வருங்கால கணவர் வீட்டில் எல்லோருக்கும் நீளமான கூந்தல். என் முடியைப் பார்த்துவிட்டு என்னுடைய மாமியார் ''நானும் நீண்ட கூந்தல் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்று கூறிவிட்டார் இப்போது திருமணத்திற்கு மூன்று மாதங்களே உள்ளது. அதற்குள் எனக்கு ஏதாவது ஒரு மேஜிக் செய்து முடி நீளமமாகும்படி செய்யுங்கள்" என்றார்.

"எனக்கு மேஜிக் தெரியாது ரம்யா!!!!" என்றேன் சிரித்தபடி.

ரம்யாவிற்கு கொடுத்த ஆலோசனைகள் :

1.நிறைய பேருக்கு முடி வளராமல் இருப்பதற்கும் அதிகமாக கொட்டுவதற்கு முக்கியமான காரணம் தண்ணீர். உப்பு தண்ணீரில் தலைக்கு குளிக்கும் பொழுது அந்த உப்பு தலையில் படிவதால் தலைமுடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது எனவே உங்கள் பகுதியில் உள்ள நீர் உப்பு நீர் என்றால் தலைக்கு அலசும்போது மட்டும் நல்ல நீரில் அலசவும்.

2. ஷாம்பு உபயோகிப்பவர்கள், மூன்று நிமிடங்களுக்கு மேல் ஷாம்புவை தலையில் வைக்காமல் அலசி விடுங்கள்.

3.தலைமுடியை மிகவும் மென்மையாக கையாள வேண்டும் .அது மிகவும் முக்கியம்

3. தலை குளித்து வந்ததும் சிலர் துடைக்காமல் தலையை துண்டால் கட்டியபடியே எல்லா வேலையையும் செய்து கொண்டிருப்பார்கள். அதுவும் தலை முடி கொட்டுவதற்கு ஒரு காரணம். அத்தோடு துண்டை வைத்து தலைமுடியை படார் படாரென்று அடித்து காய வைப்பர். அதுபோன்று முரட்டுத்தனமாக தலையை தலைமுடியை கையாளும் பொழுது முடி கொட்டலாம். ஈரத்தலையோடு சிலர் சீப்பு வைத்து வாருவர்.

4. விரல் நுனிகளில் மட்டும் லேசாக எண்ணெயைத் தொட்டு தலை முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யும் பொழுது ரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்றாக வளரும்.

5. தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும். தலை முடி வளர்வது தடைபடும். பொடுகு இருந்தால் அதற்குரிய ஷாம்பூ வாரத்திற்கு இருமுறை போட்டு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முற்றிலுமாக பொடுகை ஒழித்தால், தலைமுடி வளர ஆரம்பிக்கும் .

பெண்குயின் கார்னர் 20 : தோல் நோய் ஆபத்தா..? திருமண உறவில் பாதிப்பை உண்டாக்குமா? மருத்துவர் பதில்

6. தலையில் பேன், ஈறு போன்றவை இருந்தால் அதை ஒழிக்க வேண்டும். தலையில் கடித்து புண்ணாக்கு வதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தை உறிஞ்சி விடுவதால் இரத்தக் குறைபாடு (ரத்த சோகை, அனீமியா) ஏற்படுகிறது.

7. ரத்தசோகை இருப்பவர்களுக்கு தலைமுடி வளராது. முடி கொட்டும். அதனால் ஹீமோகுளோபின் அளவு குறைந்த பட்சம் 11 கிராம் ஆவது இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. தைராய்டு குறைபாடு இருப்பவர்களுக்கும் முடி அதிகமாக கொட்டும் .அதை சரி செய்து கொள்ள வேண்டும்.

9. இதுதவிர பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் பயோட்டின் எனப்படும் விட்டமின் நம்முடைய நகம் தலைமுடி தோல் ஆகியவற்றை பாதுகாக்கிறது . பொதுவாக பயோட்டின், மிகக் குறைந்த அளவே நமக்கு தேவைப்படுவதால் நாம் உண்ணும் உணவிலேயே கிடைத்துவிடும்.

10. இந்த பயோட்டின் விட்டமின் காய்கறிகளில் ப்ரோக்கலி, சக்கரைவள்ளி கிழங்கு, பயறு வகைகளில் அதிகமாக உள்ளது. காளான்களிலும் உள்ளது. அசைவ உணவு வகைகளில் முட்டை மற்றும் சிக்கனிலும் உள்ளது. பழங்களில் அவகேடோ பழமும் வாழைப்பழமும் அதிகளவு இந்த விட்டமினை கொண்டுள்ளன.. இந்த விட்டமினை சேர்த்துக் கொள்ளும்போது தலைமுடி கொட்டுவது நின்று வளரலாம் .

பெண்குயின் கார்னர் 19 : திருமண வயதில் உள்ள பெண்கள் மார்பக அளவை பெரிதாக்க என்ன செய்ய வேண்டும்..? மருத்துவர் ஆலோசனை

11. நான் பொதுவாக தலைமுடி வளர வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரையும் பயோட்டின் மாத்திரைகளையும் பரிந்துரைப்பேன். சத்துள்ள உணவும் அவசியம்.

12. எல்லாவற்றையும் விட முக்கியம் மன அமைதி . மனக்குழப்பங்கள் கூடுதலான உளைச்சல்கள் தூக்கமின்மை போன்றவையும் முடி கொட்டுவதற்கு காரணமாகும். அதுபோல நாம் உபயோகிக்கும் தலையணை உறை ,துண்டு போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.

முடி தானே என்று திட்டுவதற்கு கூட பயன்படுத்தப்பட்டாலும், முடி கொட்டுபவர்களுக்குத் தான் தெரியும், அதன் அருமை. தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் கொடுமை. எனவே சரிவிகித உணவு உட்கொண்டு தலைமுடியை சரியாக பராமரித்தால் என்றும் அடர்த்தியான முடியோடு அழகாக இருக்கலாம்.

"ஓகே!! டாக்டர்!!! நீங்க கூறிய எல்லாவற்றையும் இன்றிலிருந்தே கடைபிடிக்கிறேன்" என்று கூறி விடைபெற்றார் ரம்யாவும் அவர் தாயும்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Hair care, Hair fall, பெண்குயின் கார்னர்