Home /News /lifestyle /

கர்ப்பம் தரிக்க ஓய்வு அவசியமா..? அளவுக்கு மீறிய ஓய்வும் ஆபத்து...

கர்ப்பம் தரிக்க ஓய்வு அவசியமா..? அளவுக்கு மீறிய ஓய்வும் ஆபத்து...

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 38 : பொதுவாக ஆரோக்கியமான இயல்பான ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் தரிப்பதை, அவர்களுடைய தினசரி வேலைகளோ, அலுவலக வேலைகளோ எந்த விதத்திலும் பாதிக்காது .

கோகுலும் மீராவும் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தனர். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இருவரும் ஒரு குழந்தைக்காக திட்டமிடுகின்றனர்.

மீரா தான் துவங்கினார். " டாக்டர்! இந்த மாசம் பிரக்னன்ட் ஆவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் பீரியட்ஸ் ஆயிடுச்சு. இந்த மாசம் கொஞ்சம் எனக்கு டிராவல் பண்ற வேலை இருந்தது டாக்டர்!!!. அதனால தான் எனக்கு ப்ரெக்னன்சி நிக்கலனு நினைக்கிறேன். டாக்டர் அதோட வீட்டில் , " பீரியட்ஸ் ஆகறதுக்கு முன்னாடி 10 டேஸ் பெட் ரெஸ்ட் எடுத்துட்டா பேபி தங்கும் .அப்படின்னு சொல்றாங்க. அது உண்மையா? " எனக்கு ஒரே குழப்பமா இருக்கு . பெட் ரெஸ்ட் எடுத்தா தான் பேபி ஃபார்ம் ஆகுமா? இல்ல என்னோட நார்மல் ஆபிஸ் ஒர்க் பண்ணலாமா? அத கேட்க தான் வந்தோம். " என்றார்.

மீராவை போலவே பலருக்கும் இந்த சந்தேகமும் குழப்பமும் இருக்கிறது.

கர்ப்பம் தரிப்பதற்கு முழுவதுமாக ஓய்வில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல கர்ப்பம் தரித்த பின்னரும் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

பொதுவாக ஆரோக்கியமான இயல்பான ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் தரிப்பதை, அவர்களுடைய தினசரி வேலைகளோ, அலுவலக வேலைகளோ எந்த விதத்திலும் பாதிக்காது .
செயற்கை முறை கருத்தரிப்பு , அல்லது ஏற்கனவே கருச்சிதைவு ஆனவர்கள் அதுபோன்ற குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் நாங்களே முழுமையாக ஓய்வு எடுக்கும்படி கூறுவோம் . அவர்கள் மட்டும் முழு ஓய்வில் இருந்தால் போதுமானது. மற்றவர்கள் வெளியே செல்லாவிட்டாலும் தங்களுடைய தினசரி வேலைகளை செய்து கொள்ளலாம்.

ஏனெனில் கர்ப்ப காலத்தில் முழுமையாக ஓய்வெடுக்கும் போது ரத்த உறைவு, மற்றும் ரத்தக் கட்டிகள் உண்டாவதற்கான வாய்ப்பும் இருக்கிறது .அதனால்தான் கர்ப்பிணிகள் முழு ஓய்வில் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை. மருத்துவ ரீதியாக அது தேவையும் இல்லை . சரியானதும் அல்ல .ஒவ்வொரு மாதமும் கடைசி 15 நாட்கள் ஓய்வில் இருந்தால்தான் கரு உண்டாகும் என்று கூறுவது சரியல்ல. பல பெண்களை நானும் பார்க்கிறேன் அதுபோல ஒரு சிலர் கடைசி 15 நாட்கள் முழு ஓய்வில் ,இருந்து வரும்போது ,பார்த்தால் இரண்டு கிலோ எடை அதிகரித்து வருவார்கள். வீட்டில் அனைவரும் ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டார்கள். அதனால் எடை கூடிவிட்டது என்று கூறுவார்கள்.

பெண்குயின் கார்னர் 37 : கருத்தரிக்க கருமுட்டை வெளிவரும் நாளை எப்படி கண்டறிவது? அறிகுறிகள் எப்படி இருக்கும்?

அதனால் கர்ப்பம் என்று தெரியும்வரை, இயல்பான வேலைகளை எல்லா பெண்களும் செய்யலாம் . தெரிந்தபிறகு கடினமான வேலைகளை தவிர்க்கலாம் மற்றும் வெளியே செல்வது போன்றவற்றை தவிர்க்கலாம்.

கர்ப்பத்திற்காக திட்டமிடும்போது அலுவலகப் பணியும் பகுதிநேரமாக மேற்கொள்ளலாம். வெகு தூரம் பிரயாணம் செய்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியவர்கள் ,முக்கியமான பொறுப்பான பணியில் இருப்பவர்கள் பகுதிநேர வேலையோ அல்லது ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தோ , அவர்களுடைய வேலை பளுவை குறைத்துக் கொள்ளும்படி கூறுவோம்.நான் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் வலியுறுத்துவது , அதிகமான வேலைப்பளு, ஓய்வின்மை மன அழுத்தத்தை உண்டாக்கி அதுவே அவர்களுக்கு கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் ஆகலாம். அத்துடன் ஒருசிலர் மற்றவர்களோடு தன்னை எப்பொழுதும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் திருமணம் ஆனது. எனக்கு ஏன் இன்னும் கர்ப்பம் தரிக்க வில்லை?! என்று போட்டியிடுகிறார்கள். அதுவும் அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.

பெண்குயின் கார்னர் 36 : கர்ப்பம் தரிக்க செக்ஸ் பொசிஷனும் அவசியமா..?

திருமணமான முதல் 1-2 வருடங்கள் உங்கள் வாழ்க்கையை தெரிந்து கொள்வதற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் திருமணம் ஆன ஒரு வருடம் வரை இயல்பாக கணவன் மனைவி உறவில் இருந்தாலே அவர்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பு இருக்கும். அதிகமான மன அழுத்தமும் பெரும்பாலும் கர்ப்பம் தரிப்பது தள்ளி போவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மீராவுக்கும், கோகுலுக்கும் முகத்தில் ஒரு தெளிவு உண்டானதை உணர்ந்தேன். சில மாதங்களிலேயே மீரா கர்ப்பிணியாக வருவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி