உடல் ஆரோக்கியத்தை நாம் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. இதனால் பலவித பாதிப்புகள் நமது உடலுக்கு வந்து சேர்கிறது. சாதாரண காய்ச்சல் முதல் நீண்ட நாள் உடலை உலுக்க கூடிய நோய்கள் வரை நம்மை சரியாக பார்த்து கொள்ளாததால் வருகின்ற பாதிப்புகளே. ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கும் ஏற்றாற்போல இந்த பாதிப்புகள் மாறுபடும். அந்த வகையில் ஆண்களின் உடலில் வர கூடிய சில அறிகுறிகளை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இதன் விளைவாக ஏராளமான பிரச்சனைகள் வந்து விடுகின்றன. இந்த பதிவில் ஆண்கள் தவிர்க்க கூடாத 5 முக்கிய பிரச்சனைகள் பற்றி பார்க்க போகிறோம்.
ஆண்மை குறைபாடு : ஆண்களுக்கு வயதாகும்போது விறைப்புத்தன்மை பிரச்சனை அதிகமாகிறது. இது பாலியல் சார்ந்த நோயாகும். இது ஒருவரின் பாலியல் வாழ்க்கையை முழுவதுமாக பாதிக்க கூடியது. இதனால் கவலை மற்றும் மனச்சோர்வு ஏற்படும். விறைப்புத்தன்மை என்பது உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும், அதை கவனிக்காமல் விடக்கூடாது. எனவே ஆண்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும்.
சர்க்கரை நோய் : பலருக்கும் சர்க்கரை நோயானது ஒரு வாழ்க்கை முறை சார்ந்த நோயாக உருவெடுக்கிறது. இரத்த சர்க்கரை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் மற்றும் சோர்வு ஆகியவை இவற்றின் அறிகுறியாகும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இந்த நோய் மாரடைப்பு, குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல பாதிப்புகளையும் உருவாக்க கூடும்.
மன அழுத்தம் : நீங்கள் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ பாதிக்கப்பட்டு இருந்தால், மன அழுத்தம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. மனச்சோர்வு ஏற்படும் போது, மூளை இரசாயனங்கள் மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்த கூடிய ஹார்மோன்களின் சமநிலை சீர்குலைந்து விடுகிறது. இதனால் பசி, தூக்கம் மற்றும் ஆற்றல் ஆகிய நிலைகளை பாதிக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் ஆண்களுக்கும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது.
Men's Hair Fall Reason : ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள்தான் தலைமுடி உதிர்வுக்கு காரணம்..!
புரோஸ்டேட் புற்றுநோய் : ஆண்களுக்கு வயதாகும்போது புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகலாம். புரோஸ்டேட் சுரப்பியானது ஆண்களுக்கு வயதாகும்போது சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த புரோஸ்டேட் புற்றுநோய்க்கு உடனடியாக சிகிச்சை பெறவில்லை என்றால் ஆபத்தாகி விடும். எனவே 35 வயதிற்குப் பிறகு ஆண்கள் அவசியமாக புரோஸ்டேட் ஸ்கிரீனிங் மற்றும் பொதுவான சில டெஸ்ட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதய நோய் : இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய இரண்டும் உலகெங்கிலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதயம் மற்றும் மூளையின் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிந்து, இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. படிப்படியாக இது இரத்த உறைவு போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரக்கூடும். எனவே, நீங்கள் 25 வயதைத் கடந்தவுடன் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.