குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான எளிய டிப்ஸ்..

மாதிரி படம்

குளிர்காலத்தில், நீரிழிவு நோயாளிகள் ருசியான உணவு மற்றும் சூடான பானங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமற்ற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும்.

  • Share this:
இந்தியாவில் சுமார் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு (Diabetes) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா தான் உலகின் நீரிழிவு தலைநகராக கருதப்படுகிறது. இது ஒரு மோசமான நிலை. இருப்பினும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும், மற்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலமும் இதனை நிர்வகிக்க முடியும். நீரிழிவு நோய் இருப்பவர்கள் முக்கியமாக இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாக நிர்வகிக்க வேண்டும்.

பொதுவாக குளிர்காலத்தில், நீரிழிவு நோயாளிகள் ருசியான உணவு மற்றும் சூடான பானங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமற்ற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும். அதிலும் குளிர்காலங்களில் பலர் உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும் முனைவார்கள். இதனால் குளிர்காலத்தில் நீரிழிவு நோயை நிர்வகிப்பது கடினமாகிறது.

எனவே சரியான நேரத்தில் எடுக்கும் முன்னெச்சரிக்கைகள் சிக்கல்களைத் தவிர்க்கவும் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகின்றன. இந்த குளிர்காலத்தில், எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க செய்ய வேண்டிய சில குறிப்புக்களை பற்றி பார்க்கலாம்.



ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிடலாம்: 

கடலை மிட்டாய் முதல் சாக்லேட் வரை, குளிர்காலம் பல ஆறுதல் உணவுகளை சாப்பிட நம்மை தூண்டலாம். ஆனால் இவற்றை அடிக்கடி அல்லது அதிகமாக சாப்பிடுவது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். எனவே சில ஆரோக்கியமான ஃபைபர் நிறைந்த தின்பண்டங்களைத் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். தாமரைப்பொரி, சீசன் பழங்கள், முறுமுறுப்பான காய்கறிகள், வேகவைத்த முட்டை போன்றவற்றை சாப்பிடலாம்.

உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டாம் :

இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாக நிர்வகிப்பதில் உடற்பயிற்சி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்ய பல மணிநேரம் செலவிட வேண்டியதில்லை. அதேபோல தீவிரமான உடற்பயிற்சி இரத்த சர்க்கரை அளவு திடீரென குறைய வழிவகுக்கும். எனவே தினசரி மெதுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உங்கள் மருத்துவரிடம் தவறாமல் ஆலோசனை பெற வேண்டும்.

கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறீர்களா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்..

மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்: 

வீட்டிலிருந்து வேலை, உடல் உடற்பயிற்சி இல்லாமை, வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற பயம், வீட்டுக்குள் தங்கியிருத்தல் போன்ற பல மன அழுத்தத்திற்கு கொரோனா ஊரடங்கு காரணமாக உள்ளது. அதிக அளவு மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு தொடர்புடையதாகும். எனவே நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க தியானம் போன்ற மன அழுத்த மேலாண்மை உத்திகளை முயற்சி செய்யுங்கள்.

இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்கவும் : 

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்க வேண்டும். இது பெரிய ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்கவும், சரியான நேரத்தில் கட்டுப்பாட்டை எடுக்கவும் உதவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவீடுகளில் ஏதேனும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரின் உதவியை பெறுவது அவசியம்.



உடல் வெப்பநிலை, கால் பாதங்கள் பராமரிப்பு :

நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை பராமரிக்க போதுமான அளவு அடுக்குகள் கொண்ட துணிகளை அணிய வேண்டும். சூப் போன்ற சூடான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கலாம். மேலும், இந்த காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதால் உங்கள் கால்களை கவனித்துக் கொள்வது அவசியம். அவற்றை சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க வேண்டும்.

கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவுகள் பல சுகாதார பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை உங்கள் உறுப்புகளையும் பாதிக்கலாம். எனவே மேற்கண்ட உதவிக்குறிப்புகளை சரியாக பின்பற்றினால் நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்கவும், இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து பராமரிக்கவும் முடியும்
Published by:Sivaranjani E
First published: